தலைவனின் தகுதி
தேவனுக்குப் பயப்படுதலே!
கிறிஸ்துவில் பிரியமான சகோதர, சகோதரிகளுக்கு... ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள்! பிரியமானவர்களே! தலைமைத்துவம் என்பது ஓர் உயர்ந்த பதவியை அடைவதோ, அல்லது ஜனங்களைத் தன் அதிகாரத்தின்கீழ் வைத்திருப்பதோ அல்ல; மாறாக, தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பிரியமான விதத்தில் ஜனங்களை வழிநடத்துவதே!
உலகம் ஒரு தலைவனிடம் கல்வியையும், திறமையையும், பேச்சாற்றலையும், நிர்வாக வல்லமையையும், செல்வாக்கையும் எதிர்பார்க்கிறது. ஆனால், தேவனோ ஒரு தலைவனிடம் எதிர்பார்க்கும் முதல் தகுதி அவருக்குப் பயப்படுதலே! யாத்திராகமம் 18-ஆம் அதிகாரத்தில் மோசேயின் தலைமைத்துவத்தைச் சீரமைக்கும்படி அவனுடைய மாமனாகிய எத்திரோ கொடுத்த ஆலோசனையில், 'ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்' (யாத்திராகமம் 18:21) என்று சொல்லுகின்றான். இந்த ஆலோசனையில் தலைமைத்துவத்தின் ஆழமான உண்மையை நாம் காணமுடியும். ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் மனிதர்களை நியமிக்கும்போது, அவர்களுடைய திறமையை மட்டும் கவனிக்காமல், அவர்கள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களாக இருக்க வேண்டும் என்றே மாமனாகிய எத்திரோ மோசேக்கு ஆலோசனை கூறுகிறான். ஏனெனில், மனிதர்களை வழிநடத்துவதற்கு முன்பாக, தன்னை ஆளுகிற தலைவனாக ஒரு தலைவன் இருக்க வேண்டும்; அவ்வாறு தன்னை ஆளுவதற்கு தேவபயம் அவசியம்!
தேவனுக்குப் பயப்படுதல் என்பது தேவனைக் கண்டு அஞ்சுவதோ, அவருடைய தண்டனைக்குப் பயந்து வாழ்வதோ அல்ல; மாறாக, அவர் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், சர்வவல்லமையுள்ளவர் என்பதை உணர்ந்து, அவருடைய வார்த்தைகளை வாழ்க்கையில் மதித்து, அவருடைய சித்தத்திற்கு எதிரான காரியங்களைச் செய்ய மறுப்பதே. நீதிமொழிகள் 1:7 -ல் 'கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்' என்று வாசிக்கின்றோமே! இந்த ஞானத்தின் ஆரம்பமே ஒரு தலைவனுக்குப் பிரதானம். உலகத்தின் அறிவு ஒருவனை உயர்ந்த நிலைக்கு ஒருவேளை கொண்டு செல்லலாம்; ஆனால், தேவபயமே ஒருவனை தகுதியுள்ள தலைவனாக மாற்றுகிறது. தேவனுக்குப் பயப்படும் தலைவனே, பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, நீதியையும் நேர்மையையும் காத்துக்கொள்ளுவான். திறமையுள்ள தலைவர்கள் ஒருவேளை பலரைத் தன் பின்னால் வரச் செய்யலாம்; ஆனால், தேவனுக்குப் பயப்படும் தலைவனே அவர்களை தேவனுடைய வழியில் நடத்த முயற்சிப்பான். தேவபயம் இல்லாத தலைமைத்துவம் அதிகாரத்தைத் தேடும்; ஆனால், தேவபயம் நிறைந்த தலைமைத்துவம் பொறுப்பை உணரும்!
யோசேப்பின் வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள். போத்திபாரின் மனைவி அவனைப் பாவத்தில் விழச்செய்ய முயன்றபோது, அவன் தன் எஜமானுக்குத் துரோகம் செய்வதை மட்டுமல்ல, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வதையும் உணர்ந்தான். 'தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி?' என்றே கூறுகின்றான் (ஆதியாகமம் 39:9). அவன் தனிமையில்தான் இருந்தான்; அவனைக் கண்காணிக்க அங்கே யாரும் இல்லை; அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல மனிதர்களும் இல்லை. ஆனாலும், தேவனுக்குப் பயந்ததால் பாவத்தை மறுத்தான். இதுவே உண்மையான தேவபயம்! மனிதர்கள் பார்க்கும்போது மாத்திரம் நேர்மையாக நடப்பது தலைமைத்துவத் தகுதியல்ல; யாரும் பார்க்காத இடத்திலும் தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவனாக இருப்பதே தலைமைத்துவத்தின் அடிப்படைத் தகுதியாகும். இன்று ஊழியத்திலும், சபை நிர்வாகத்திலும், குடும்பப் பொறுப்புகளிலும் தலைமை வகிப்பவர்கள் தங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: மனிதர்கள் என்னைப் பார்க்காத இடத்திலும் நான் தேவனுக்குப் பிரியமானவனாக இருக்கிறேனா?
அதேபோல, மோசேயின் வாழ்க்கையிலும் தேவபயத்தின் ஆழத்தைக் காண்கிறோம். பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்ட வாய்ப்பும், எகிப்தின் அதிகாரமும் அவனுக்குக் கிடைத்திருந்தாலும், தன் மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தெரிந்துகொண்டான் (எபிரெயர் 11:24-27). மனிதர்களுடைய அங்கீகாரத்தைவிட தேவனுடைய அழைப்பையே உயர்வாகக் கருதினான். தேவனுக்குப் பயப்படும் தலைவன் தனக்குக் கிடைக்கும் வசதிகளை மட்டும் கணக்கிடுவதில்லை; தேவன் தன்னிடம் ஒப்படைத்த மக்களுக்காகத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்புகளையே அதிகம் உணர்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டுமல்லவா!
யாத்திராகமம் 18:21-ல் தேவபயத்தோடு இணைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு முக்கியமான தகுதிகளையும் கவனிக்க வேண்டும். அவை உண்மையுள்ளவர்களாக இருப்பதும், அநியாய ஆதாயத்தை வெறுப்பதுமாகும். இவை மூன்றும் தனித்தனியான குணங்களாகத் தோன்றினாலும், ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவைகளே! தேவனுக்குப் பயப்படுகிறவன் உண்மையை விரும்புவான்; உண்மையை விரும்புகிறவன் அநியாய ஆதாயத்தை வெறுப்பான். ஏனெனில், தேவனுக்கு முன்பாகக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு அவனுடைய ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்தும்.
சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களிடம், தான் யாருடைய மாட்டையாவது எடுத்துக்கொண்டேனா, நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக்கொடுப்பேன் என்கிறான். அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ்செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்று பதிலுரைக்கின்றனர். 'நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி' என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். எத்தனை பெரிய வார்த்தைகள் இவைகள்! (1 சாமுவேல் 12:3-5). தலைமைத்துவத்தின் முடிவிலும் தன் கரங்களைச் சுத்தமாக வைத்திருந்தான். இதுவே தேவனுக்குப் பயப்படுகிற தலைவனின் சாட்சி. எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தான் என்பது ஒரு தலைவனின் வெற்றியின் அளவுகோல் அல்ல; எவ்வளவு நேர்மையோடு நடந்தான் என்பதே அவனுடைய உண்மையான சாட்சி.
இன்றைய கிறிஸ்தவத் தலைமைத்துவத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஆபத்து என்னவென்றால், ஊழியத்தின் வளர்ச்சியை தேவனுடைய அங்கீகாரமாகவும், மனிதர்களின் பாராட்டை தேவனுடைய சித்தமாகவும் தவறாகப் புரிந்துகொள்வதாகும். பெரிய கூட்டம், அதிகமான காணிக்கை, உயர்ந்த மேடை, அதிகமான பின்தொடர்பவர்கள், புகழ்பெற்ற தொடர்புகள் ஆகியவை ஒருவரை நல்ல தலைவராக மாற்றிவிடுவதில்லை. அவற்றைக் கையாளும் விதத்தில் அவர் தேவனுக்குப் பயப்படுகிறாரா என்பதே முக்கியம். சவுல் மக்களின் குரலுக்குப் பயந்து தேவனுடைய கட்டளையை மீறினான் (1 சாமுவேல் 15:24). ஆனால் தாவீது தேவனுக்கு முன்பாகத் தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் (சங்கீதம் 51). தலைமைத்துவத்தில் தவறை உணர்ந்து தேவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிற மனிதனாக இருப்பது முக்கியம்.
தேவபயமே ஒரு தலைவனைப் பெருமையிலிருந்து பாதுகாக்கிறது. அதிகாரம் அதிகரிக்கும்போது தன்னை உயர்வாக எண்ணுவதற்குப் பதிலாக, தேவனுக்கு முன்பாகத் தான் ஒரு பொறுப்புள்ள ஊழியக்காரன் என்பதை உணரச் செய்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம், 'உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்' என்று போதித்தாரே (மத்தேயு 20:26). உலகம் அதிகாரத்தைக் கொண்டு மனிதர்களைத் தனக்குக் கீழ்ப்படுத்துகிறது; ஆனால், கிறிஸ்துவோ அன்பையும் தாழ்மையையும் கொண்டு மனிதர்களுக்குச் சேவை செய்யக் கற்றுக்கொடுக்கிறார்.
பிரியமானவர்களே, நாம் குடும்பத்தில் தலைவர்களாக இருக்கலாம்; சபையில் போதகர்களாகவும், ஊழியத் தலைவர்களாகவும் இருக்கலாம்; நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளையும், சமூகத்தில் வழிநடத்தும் பொறுப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆனால் நம்முடைய ஒவ்வொரு பொறுப்புக்கும் மேலாக தேவனுடைய அதிகாரம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெறுவதற்காக அல்ல, தேவனிடமிருந்து 'நல்ல உத்தம ஊழியக்காரனே' என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே வாழ்வோம் (மத்தேயு 25:21).
ஆகவே, திறமையை வளர்ப்பதற்கு முன்பாக தேவபயத்தை வளர்ப்போம்; பதவியைத் தேடுவதற்கு முன்பாகப் பரிசுத்தத்தைத் தேடுவோம்; அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாகப் பொறுப்பை உணர்வோம். ஏனெனில், மனிதர்களுடைய கண்களுக்கு முன்பாகத் தலைவராக இருப்பதைவிட, தேவனுடைய கண்களுக்கு முன்பாக உண்மையுள்ளவனாக இருப்பதே மேலானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக