முன்னுரை

 முன்னுரை


பரிசுத்தத்திற்கென்றும், பரலோகத்திற்கென்றும் அழைத்து நம்மை முன்குறித்திருக்கின்ற தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்;த்துக்கள். வாலிபர்கள் மத்தியில் வாலிபராய் நாம் ஆற்றும் பணி வளரும் தலைமுறையினரைத் தலைவர்களாக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், தேவனின் நாமத்தில், தேவனைச் சுமந்தவர்களாய், தேசத்திற்குள் புகுந்து சத்துருவின் கரத்திலுள்ள நம் சகோதரரை மீட்கும் பணியில், தகுதியுள்ள தலைவர்களாக நாம் எப்படி செயலாற்றவேண்டும் என்பதை தொடர்ச்சியாக எழுத விரும்புகின்றேன். 

'கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை' (1தீமோ. 3:1) என்பதே தலைமைத்துவத்தைக் குறித்து பவுல் கொடுக்கும் முதல் அறிக்கை.  என்றபோதிலும், அதைத் தொடர்ந்து, கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும் என்றும், அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும் என்றும், ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? என்றும், அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும் (1தீமோ 3:2-7) என்றும் கண்காணிகளிடத்தில் காணப்படவேண்டிய குணங்களையும், தகுதியையும், தரத்தையும் பட்டியலிட்டு வரிசைப்படுத்துகின்றார் பவுல். இந்த வார்த்தைகள் தொடுக்கும் வழக்கில் ஒரு மனிதனின் வாழ்க்கை சிக்கிக்கொள்ளுமென்றால், 'தலைவன்' என்ற ஸ்தானத்தில் அவன் காணப்பட்டாலும், 'தரமற்றவனாகவே' தடுமாறுவான் என்பது நிச்சயம்.  

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, 'அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான்', ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது (யோவான் 10:4) என்பதே மேய்ப்பர்களைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறும்  அறிமுகம். அவ்வாறே, அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, 'நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்' (பிலி. 3:17) என்று உடனிருக்கும் சகோதரர்களாகிய விசுவாசிகளுக்கு எழுதுவதோடு, தன்னுடைய ஊழியத்தைக் குறித்து, 'இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச்செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம் (2தெச 3:7-9) என்று எழுதுகின்றார். அதுமாத்திரமல்ல, 'உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,  நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு' (1தீமோ. 4:12) என்றும், 'நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து' (தீத்து 2:7) என்றும் இளம் ஊழியர்களாகிய தீமோத்தேயுவுக்கும் மற்றும் தீத்துவுக்கும் அவர் எழுதியுணர்த்தத் தவறவில்லையே. மாதிரியாயிருக்கவேண்டும் என்ற நிலையினை மறந்துபோனதினாலேயே, அநேகருடைய ஊழியங்கள் மரித்துப்போய்விட்டன

தலைமைத்துவம் என்பது தக்கவைக்கப்படவேண்டியது அல்ல மாறாக, பக்கங்களிலெங்கும் கிளைவிட்டுப் படரவேண்டியது. சுடர்களைப் போல பிரகாசித்துக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர், சுற்றியிருக்கும் திரிகளைக் குறித்துக் கவலைகொள்ளாததினாலேயே, விளக்காகிய அவர்களது வாழ்க்கை அணையும்போது, அவர்கள் வாழ்ந்த இடத்தில் வெளிச்சம் இல்லாமற்போகிறது; அத்துடன், வீட்டையும் இருட்டு எட்டிப்பார்க்கின்றது. தங்களைப் பற்றி மாத்திரமே மற்றவர்கள் புகழ்பாடிக்கொண்ருப்பது, தலைவனுக்கு ஆறுதல் அளிக்கும் தலையணை அல்ல; மாறாக,  தங்கள் தலைமை அணையும்போது, தாங்கள் எழுதிக்கொண்டிருந்த சரித்திரம் தடைபடாமல் தொடரவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாயிருக்கவேண்டுமே. பிறர் பயணிக்கும் வழிகளை அடைத்துக்கொண்டிருப்பவர்களாக அல்ல, பிறர் பயணிக்க வழிகளை ஆயத்தம்பண்ணுபவர்களாகவே தலைவர்கள் காணப்படவேண்டும். மின்சாரம் இருக்கும் சமயங்களில், கைவிளக்குகள் வீட்டின் மூலையிலேயே வைக்கப்பட்டிருக்கும்; ஆனால், கைவிளக்கும் ஒளிகொடுக்கவேண்டும் என்றால், மின்சாரம் சற்று ஓய்வெடுக்கத்தானே வேண்டும். இத்தகைய ஓய்வு, தலைமுறைகளைத் தலைவர்களாக்கும் தருணங்களை உருவாக்கும் என்பது நிச்சயம். 

தலைமைத் துவத்தில் இருக்கும் தலைவர்கள் தங்கள் தடங்களில் தவறுவார்களென்றால், அவர்களைத் தொடரும் ஒவ்வொருவரின் தடங்களுமே தடுமாறத் துவங்கும். தலைவன் ஒருவன் தனது சொல்லில் தவறினால், அவனைத் தொடரும் மக்கள் தங்கள் செயலில் தவறத் தொடங்குவார்கள். தலைவர்களின் தவறான மாதிரிகள், தேவ மக்களைக் கூட வேதத்தை விட்டு மாத்திரமல்ல, தேவனை விட்டே பிரித்துவிட வல்லது. தேவனை தொடரவேண்டிய பலர் இன்று தங்களுக்கென்று ஒரு தலைவரைத் தெரிந்துகொண்டு, அவர்களையே பின்பற்றத் தொடங்கிவிட்டனர்; எனினும், தலைவர்கள் தவறான மாதிரியுடையவர்களாயிருப்பார்களாயின் இச்செயல் தவறாகிவிடுமே! தலைவர்களாக விரும்பும் ஒவ்வொருவரும் தங்கள் தடங்களின் மேல் அதிக அக்கரை செலுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று.  மக்கள் தலைவனை உலத்தோடும், தங்களோடும் ஒப்பிட்டு பார்த்து, தங்களைக் காட்டிலும் உயர்ந்த எண்ணத்தோடு பார்க்கையில், தலைவன் தன்னை தேவனோடு தினமும் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறக்கூடாது. தலைவனுக்கு மாதிரி தலைவர்களல்ல, தேவனே. தேவனை தன்; வாழ்க்கையில் காட்ட இயலாத தலைவன் ஒவ்;வொருவனும் தனது தலைமைத்துவத்தில் தோற்றுப்போனவனே. தேவனாலும் மனிதர்களாலும் தலைவன் குற்றஞ் சாட்டப்படாதவனாயிருக்கவேண்டும். தனது வாழ்வில் வேதத்திற்கு விரோதமான கறைகளை வைத்துக்கொண்டே, அந்தக் குறைகளோடு கூட தேவனது பணியில் குறிப்பாக தலைமைத் துவத்தில் தலைவன் தொடருவானென்றால் அது நிச்சயம் ஆபத்தானதே.

மாதிரியே இல்லாத நாட்களில் நோவா தேவனது வார்த்தைகளைக் கொண்டு எவ்வவளவு அழகான ஓர் பேழையை வடிவமைத்தான். நோவா அதைச் சோதித்துக்கூட பார்க்கவில்லை, தேவன் அனுப்பிய மழைதான் நேரடியாக அப்பேழையைச் சோதித்தது; என்றாலும், அதில் பழுது ஏதுமில்லையே. தலைவர்களாக நாம் காணப்படுவோமாகில், இவ்வுலகத்தில் யாதொருவருடனும் நம்மை ஒப்புமைப்படுத்தி நாம் திருப்தியடைந்துவிடமுடியாது. காடானாலும், மேடானாலும், களிப்பானாலும், கஷ்டமானாலும், நிர்வாணமானாலும், நாசமானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிற தலைவர்களுக்கு வேறு வழியில்லை. நம்மைச் சோதிப்பது நியாயத்தீர்ப்பே! பிறரைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கில் தன் பரிசுத்தத்தைத் தவறவிடும் தலைவர்கள் இறுதிநாளில் தடுமாறுவர். பரிசுத்தத்தைப் பறிகொடுத்த தலைவர்களின்மேல் தேவன் பரிதாபப்படுவதில்லை. மலையில் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி மோசே எவ்வளவு நேர்த்தியாய் ஆசரிப்புக் கூடாரத்தை வடிவமைத்தான் (யாத் 25:9,26:40). மோசே அதனை வடிவமைத்துக்கொண்டிருக்கும்போது, தேவன் இடையில் குறுக்கிட்டு குறை ஏதும் சொல்லவில்லையே. இது, பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் திறமைகளை அல்ல அவர்கள் எத்தனை ஆழமாய் தேவன் சொல்லும் காரியங்களைப் புரிந்தவர்களாய், அறிந்தவர்களாய் செயலாற்றியிருக்கின்றார்கள் என்பதையே வெளிக்காட்டுகின்றது. நோவாவும், மோசேயும் தேவனிடத்தில், 'ஆண்டவரே கொஞ்சம் மறந்துவிட்டது, நீர் சொன்னது சரியாக ஞாபகமில்லை' என்று சொல்லவில்லையே. நோட்டுப் புத்தகங்கள், வரைபடங்கள் எல்லாம் இல்லாத காலத்திலும், காண்பிக்கப்பட்ட மாதிரியை தங்கள் இதயத்திலும், மனதிலும் வரைந்துவைத்து எத்தனை அழகாய் தேவனுக்காய் அத்தலைவர்கள் செயலாற்றியிருக்கின்றனர். 'நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்' (யோவான் 13:15) தலைமைத்துவத்தில், தடுமாறும் நேரத்தில் நமக்கு மாதிரி இயேசுவே. நாமும் மோசேயைப்போல செயலாற்றவேண்டும், மோசேக்கு ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி காண்பிக்கப்பட்டது, ஆனால், நமக்கோ பிரதான ஆசாரியனே (இயேசு) மாதிரியாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறாரே. இந்த மாதிரியை நாம் அறிந்தபின்னும், புரிந்தபின்னும் தவறான தலைமைத்துவத்தில் தொடருவோமென்றால் தண்டனைக்கு தப்புவது எப்படி? நாம் நமது தலைமைத்துவத்தில் கவனித்துப் பார்க்கவேண்டிய நபர் கிறிஸ்து இயேசுவே (எபிரேயர் 3:1). கிறிஸ்து இயேசுவை நாம் கவனித்துப் பார்த்தால், நமது செயல்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தால் தலைமைத்துவத்தின் உயர்ந்த ஸ்தானங்களில் நமது பாதங்கள் நிற்பது நிச்சயம். தாவீதும் தேவன் தந்த மாதிரியினை எவ்வளவு நேர்த்தியாய் பின்பற்றினான் (1நாளாகமம் 28:19). நம்மைத் தொடரும் தலைமுறையினருக்கு நாமே மாதிரி (2தெச3:9, 1தீமோ4:12, தீத்து2:7, 1பேதுரு 2:21).

ஒவ்வொரு தலைவனும் கிறிஸ்துவின் குணங்களை தனது வாழ்க்கையில் கொண்டவனாக வாழ்ந்தால் இவ்வுலகத்தின் தலைமைத்துவனம் மிகப்பெரிய வெற்றியைச் சந்திக்கும். தனியொரு மாதிரியை தனது வாழ்வில் புகுத்திக்கொண்டு மற்றவர்களை தன்னைப் பின்பற்ற அழைக்கும் தலைவனாயல்ல, தேவ மாதிரியை தனது வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தி அதற்கிசைந்து வாழ அனைவரையும் அழைக்கும் தலைவனாக ஒவ்வொருவரும் மாறவேண்டும். கிறிஸ்துவண்டை மக்களை நடத்தும் ஒவ்வொரு மனிதனும் தலைவனே. தனியொரு மனிதனை கிறிஸ்துவண்டை நடத்துமளவிற்று ஒரு மனிதன் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டால் அவன் தலைவனே. கிறிஸ்துவைக் காட்டி மாத்திரமல்ல, சுவிசேஷத்திற்கு இணையாக நம்மையும் வேதத்தோடு பொருத்தி காண்பிக்கவேண்டிய நிர்ப்பந்தமான காலகட்டத்திற்குள் இன்றய கிறிஸ்தவ உலகம் காணப்படுகின்றது. தேவ ராஜ்யத்தின் இப்பெரும் பணியினை சந்திக்க, அப்பணிக்கு நம்மை பணியாட்களாக்கிக்கொள்ள, சரியான தலைமைத்துவத்தின் குணங்கள் நமது வாழ்க்கையில் காணப்படவேண்டியது மிகவும் அவசியம். இத்தொடரை எழும்பிவரும் இளந் தலைவர்களைக் குற்றஞ் சாட்டுகிறதாயல்ல, தகுதியான, நேர்மையான தலைவர்களை உருவாக்கவேண்டும் என்ற ஆவலிலேயே எழுதுகின்றேன். தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை வேதத்தின் முன் வைத்து தங்களை ஆராய்ந்துகொள்ள ஓர் சிறிய வழிகாட்டியே இத்தொடர். தலைவர்களின் கரங்களில் ஆணியடிக்கப்பட்ட தடங்கள் காணப்படலாம், ஆனால் ஆணிகள் காணப்படக்கூடாது, அப்படி காணப்படுமாயின் அவைகள் அவர்களிடம் ஆசீர்வாதங்களை பெறும்படி வருகின்ற மக்களின் தலைகளில் பாய்ந்துவிடுமே. இத்தொடர் பல வாலிப தலைவர்களை உருவாக்க ஜெபிக்கின்றேன். என்னைத் தொடருங்கள் என்று தேவனைத் தொடரும் தலைவர்கள் எழும்பட்டும்.


Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

நல்ல மேய்ப்பன் -10

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3