உன் வழிகள் என் வழி அல்ல - 8

 தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 8


உன் வழிகள் என் வழி அல்ல


தாம் விரும்புபவற்றை மாத்திரமே செய்யும் கடினமான மனது இன்று அநேகத் தலைவர்களிடைய பெருக்கெடுத்து ஓடத் தொடங்கிவிட்டது. இது ஒரு புறத்தில் ஆணவத்திற்கு வித்திட்டுவிடும்; மற்றொருபுறத்தில், உதவ வரும் மனிதர்களையும், ஒட்டி வாழும் உறவினர்களையும் உதறித் தள்ளிவிட்டு, அவர்களது ஆலோசனைகளைக்கூட அசட்சை செய்துவிட்டு, தன்னை மாத்திரம் நிலைநாட்டி, தனது நிலைப்பாட்டிற்குள் மற்றவர்களையும் கட்டி இழுக்கும் கடினமான நிர்ப்பந்தத்திற்குள்ளாகத் தலைவர்களைத் தள்ளிவிடும். கடினமான பாதைகளைக் கடக்க மாற்று வழிகளைத் தேடத் தோணும். தென்படும் எளிதான பாதைகளிலெல்லாம் பாதங்கள் பயணிக்க துரிதப்படும். பாடுபட பாடுபடும். உல்லாசங்களைக் காண ஏங்கும். உயர்வானவைகளைத் தேடும். பிறறோடு தன்னை ஒப்பிடும். கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்து தரித்திரத்திலும் மேன்மைபாராட்டும் மனநிலை அற்றுப்போகும். நம்முடை தரித்திரம் பிறரை ஐசுவரியமாக்கவே என்ற திருப்தியும் ஆனந்தமும் மூலையில் அடைக்கப்பட்டுவிடும். காயங்களைச் கசக்கும்;. துருத்தியில் சேரவேண்டிய கண்ணீரும் வெறுப்பில் தான் வெளியேறும். இறைவன் நடத்தும் பாதைகளையும், சத்துருவின் பாடுகள், ஊடுருவல்கள் என உள்ளம் கொக்கரிக்கும், கூக்குரலிடும். எல்;லாவற்றிற்கும் மேலாக, தேவனது நடத்துதலை உணராதபடிக்கு, அவரது அருமையான வழிகளையும், அழகான ஆலோசனைகளையும் தன்னை நிலைநாட்ட, தனது விருப்பத்தை நிறைவேற்ற ஒதுங்கி வாழும் சூழ்நிலைக்கு நேராகத் தலைவர்களைத் தள்ளிவிடும் என்பதை தலைவர்கள் ஒவ்வொருவரும் அறிந்துணர்ந்துகொள்ளவேண்டும். 

நாம் விரும்புகிறவற்றைச் செய்வது எளிது; ஆனால் நாம் விரும்பாதவற்றைச் செய்வது எளிதோ? நம்மையும் நமதுயிர் வாழ்வையும், அவரது சிலுவை நிழலில் இளைப்பாற வைப்பதுடன் மாத்திரம் இது நிகழ்ந்துவிடாது, நமது சரீரத்தையும், ஆசை மற்றும் இச்சைகளையும்கூட சிலுவை மரத்திலேற்றி அவைகளுக்கும் ஆணியடித்தால்தான் இவைகள் நமக்கு அடங்கும். அப்போஸ்தலனாகிய பவுல் இதை அறிந்திருந்ததினாலும், அத்தனையையும் தனது வாழ்வில் அப்பியாசப்படுத்தினதினாலுமே தனது ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் வாழ்வில் உயர்நிலையில் வாழ்ந்தார். இல்லாமைகள் அவரை ஆன்மீக உச்சியினின்று இறக்கிவைத்துவிடவில்லை. வறுமைகள் விருந்தாளிகளாய் அவரை அழைத்தபோதும், அவர் விருந்தோம்பலில் சிறந்துவிளங்கினாரே. எல்லாருக்கும் எல்லாமாய் வாழ அவர் எத்தனையாய்த் தன்னைத் தத்தம் செய்திருந்தார். இவை அத்தனையும் அவரது வாழ்க்கைத் தரத்தை மேன்படுத்தவா? இல்லை? நிச்சயம் இல்லை; ஆவியின் ஸ்திர நிலையை அடையாளம் காட்ட. விருப்பங்கள் பல இருந்தும் அவைகள் அனைத்துக்கும் விடைகொடுத்துவிட்டு, தேவன் அனுமதிக்கும் அனைத்தையும் ஆனந்தமாய் அனுபவிக்க அவர் தன்னை எவ்வளவு அழகாய்ப் பழக்குவித்திருந்தார். 

நாம் விரும்புகின்றவைகளை மாத்திரம் செய்துகொண்டும், அதனையே தொடர்ந்தும் செல்லுவோமென்றால் நாம் ஒருநாள் அல்லது ஊழியத்தின் இறுதியில் தேவனுக்கு அல்ல நமக்கே ஊழியம் செய்வோராய் மாறிவிடுவோம் என்பது உறுதி. கிறிஸ்துவும் தன்னைத்தான் வெறுத்து அடிமையின் ரூபமெடுத்ததினாலேதானே, நாமும் அவரது ரூபத்தில் மாற்றப்படுகின்றோம். முன்மாதிரியாய் அவர் வகுத்த வழிகளை பின்பற்றும் தலைவர்கள் பிசக்கலாமோ? அவரிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கின்றது என்று எழுதப்பட்டிருப்பது, ஏன் பல நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிப்பதில்லை. ஆற்றில் ஓடும் நீரை அள்ளிப் பருகினால்தானே தாகம் தீரும். வசனத்தின் ஈரத்தினை கல் நெஞ்சம் பல வேளைகளில் உறிஞ்சுவதில்லையே; இதுவே நாம் உலர்ந்துபோவதற்கான முதற்காரணம் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். 

விரும்பாத வழியானாலும் யோசேப்பு எத்தனை மௌனமாய் அதை ஆமோதித்து, ஆண்டவராலேயே இது வகுக்கப்பட்டது என அறிந்து நடந்தான்; அவனுக்கு மேன்மை கிட்டவில்லையோ? அத்தனையையும் இழந்தும் யோபு ஆனந்தத்தை இழக்காமலும் அவரை தூஷிக்காமலும் இருந்ததுதானே மீண்டும் அவன் இழந்ததைப் பெற வழிவகுத்தது. தலைவர்களாகிய நமக்கு வரும் துயரங்கள் தூக்குமேடைகளல்ல. தடைகள் தற்கொலைக்கல்ல. விரும்புவதாயிருப்பினும் வெறுப்பதாயிருப்பினும் வழிகள் அனைத்தும் அர்ப்பணிப்பிருந்தால் ஆனந்தமே. ஆத்துமாக்களுக்காக தலைவனே நீ அழலாம் ஆனால் ஏன் ஆபத்தைக் கண்டு இத்தனை நாள் உன் அழுகையினைத் தொடருவது அழகா? முடிவுகட்டவேண்டியவைகளுக்கெல்லாம், முடிச்சுப்போட்டு நீட்டிக்கொண்டே போனால், நமது துயரத்தைச் தூக்கிச் சுமக்கவே ஒரு கூட்ட ஜனம் தேவைப்படும்.

தலைவனாக, மேய்ப்பனாக, மந்தையை விசாரிக்கிறவனாக நாம் மாறவேண்டுமென்றால் தேவனது கட்டளைகளுக்கு கட்டாயமாகவும், ஆலோசனைகளுக்கு அப்படியேயும் கீழ்ப்படிய நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நாம் பஞ்சு மெத்தையில் நின்றுகொண்டு ஜனங்களை பாடுகள் வழியே கடந்து செல்லுங்கள் என்று கட்டளையிடவது எவ்விதத்தில் நியாயம்? நாம் வெறுக்கின்ற காரியங்களைக் கொண்டு தேவன் நமது ஆவிக்குரிய பெலத்தைப் பெருக்கமுடியுமே, நம்மையும், நமது பாதைகளையும் மற்றவர்களுக்கும் பின் சந்ததியாருக்கும், மாதிரிகளாக மாற்றமுடியுமே. நாம் சிலுவையில் நமக்காக இரத்தம சிந்திய கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.    நாம் விரும்பிச் செய்தால் கடினமான காரியம் எளிதாகிவிடும்; அதே வேளையில், நாம் விரும்பாமல் செய்தால் எளிதான காரியமும் கடினமாகத் தோன்றும். 

யோனாவிடம் தேவன் எளிதான காரியத்தை சொல்கின்றார். அவன் ஓரே  நாளில் முடிக்கக் கூடிய வேலையைத்தான் சொல்கின்றார். அழைத்தவரின் கட்டளைதான் என்றாலும் அவன் விரும்பவில்லை; அதனாலேயே அந்த ஊழியத்தை மனவிருப்பம் இல்லாமல் கடினத்தோடு செய்கின்றான். கனிகள் கிடைத்தபின்னும், நல்லதோர் முடிவு உண்டானபின்னும் தீமையைத்தான் அவனது மனம் தேவனிடத்திலிருந்து எதிர்பார்த்தது!!!

பவுல் ஒரு கடினமான ஊழியமாக இருந்தாலும் தாமதமின்றி விருப்பத்தோடு, பாடுகள் நிறைந்த ஓட்டங்கள் என்றாலும், நல்ல போராட்டத்தை போராடினேன் என சந்தோஷயமாக கூறுகின்றாரே.

பவுல் மற்றும் யோனாவை ஒப்பிடும் போது பவுல் கடினமான காரியத்தை விருப்பத்தோடு செய்தபடியால் நாமும் கடினமான காரியமாக இருந்தாலும் விருப்பத்தோடு செய்ய வேண்டும். யோனா எளிதான ஊழியத்தை விருப்பம் இல்லாமல் செய்கின்றான். சிந்தித்து பாருங்கள் எந்த காரியம் என்றாலும் தேவனுடைய ஊழியத்தை விருப்பத்தோடு செய்யுங்கள். முடியாது முடியாது என்று சொல்லாதிருங்கள். எந்த முடியாத காரியத்தை தேவன் நமக்குத் தந்துவிட்டார்.

கடினம் கடினம் என்று பல நேரங்களில் நமது உரையாடல்களில் இடையிடையே சொல்லிச் சொல்லி உழைக்கவேண்டும் என்று ஆயத்தமாய், மனநிலையோடு இருப்போரையும் நாம் உருக்குலைப்பது நியாயமோ? அத்தோடு, எளிது என ஓடும் அவர்களது வாழ்வின் ஓட்டத்தைக் கடினம் என காட்டிக்கொடுத்து, பாதை மாறச்செய்வது எத்தகைய விபரீதம். பெலமிருந்தும் பெலவீனனாய், சுகமிருந்தும் சோம்பேரியாய், படிப்பறிவிருந்தும் பதுமையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பல தலைவராக வேண்டியவர்கள், தேவத்திட்டத்தின் தொடக்கத்தையே முடிவாக்கிவிட்டனரல்லவா! பரலோகப் பணிகளுக்கு அஸ்திபாரமிடவேண்டிய அவர்களின் கைகள் அவர்களது இதய மற்றும் மனக்கண்களின் அஸ்தமனத்தால் அதனை அடக்கம்செய்துவிட்டனவே! கடினம் கடினம் என பல வேளைகளில் கனக்கூச்சலிடும் நாம் யாரை விட அதிகமாகக் கடினப்பட்டு விட்டோம்? பவுலை விடவா? நமக்காக தன் உயிரையும் கொடுத்த நம் இயேசுவை விடவா கஷ்டப்பட்டு விட்டாய்.

தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து ஊழியத்தை விரும்பி செய்யுங்கள்! உயர்வு காத்திருக்கிறது! ஓடி ஒளிவோமென்றால் தேவனே ஒரு நாள் தேடிக் கண்டுபிடிக்கும் நிலை உண்டாகிவிடும்.


Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3

உருவாக்கப்படும் தலைவர்கள் - 14