புதன், 29 ஜூலை, 2026
தேவனையே நம்பும் தலைவன் - 16
புதன், 29 அக்டோபர், 2025
இளந்தலைமுறையினரை உருவாக்குவதில் இன்றைய சபையின் பங்கு - 15
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
நமக்கு முன்பாகப் புறப்பட்டு, 'முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலினால் நம்மை எழுப்புகிறவரும்" (2 சாமு. 5:24), 'நீ எங்கே இருக்கிறாய்?" (ஆதி. 3:9) என்றும், 'இங்கே உனக்கு என்ன காரியம்?" என்றும் (1 இராஜா. 19:9), 'நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?" என்றும் நமது இருப்பிடங்களை உணரச் செய்கிறவரும், நமது நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்துகிறவரும் (சங். 17:5), நமது ஆத்துமாவை மரணத்துக்கும், நமது கால்களை இடறுதலுக்கும் தப்புவிக்கிறவருமாகிய (சங். 56:13) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்! 'சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற" அவருக்குள் நம்மை பரிபூரணமுள்ளவர்களாகப் பாதுகாத்துவருகின்ற தேவனுக்கே (கொலோ. 2:10) எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக!
பிரியமானவர்களே! கிருபையினாலே ஆயுசுநாட்களை அவர் நமக்குக் கூட்டிக்கொடுத்தாலும், காரணங்களுடனேயே அவைகள் நமக்கு நீட்டித்தரப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளின் தொடக்கத்தின்போதும், நம்முடைய வாழ்க்கைக்காக நாம் என்ன என்ன காரியங்களைச் செய்யவேண்டும்? என்ற எண்ணங்களால் மாத்திரமே நம்முடைய சிந்தையை முழுவதும் நிறைத்துவிட முற்படாமல், 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" (மத். 6:33) என்ற வார்த்தைக்கு இணங்கி வாழ்க்கையைத் தொடங்குவோமென்றால், அந்த நாளின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நமக்குக் கூடக் கொடுக்கப்படும் என்பது திண்ணம். இத்தகைய காரணங்களைப் புரிந்துகொண்டவர்களாக, தேவனுடைய இராஜ்யத்திற்கடுத்தவைகளால் நமது சிந்தைகளை நிரப்பி, நம்முடைய தேவைகளும் சந்திக்கப்பட தேவன் உதவிசெய்வாராக!
தேவ இராஜ்யத்தின் தேவை அதிகரித்துவரும் இந்நாட்களில், நமக்கு நியமிக்கப்பட்டவைகளை நிறைவேற்ற பொறுமையோடு நாம் ஓடிக்கொண்டிருந்தாலும், தேவ இராஜ்யத்தின் சேவைக்காக எழும்பும் இளந்தலைமுறையினை உருவாக்கும் பொறுப்பும் நமக்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தபோது, 'நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்" என்று ஏசாயாவின் மூலமாக கர்த்தர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்; பதிலாகப் பதினைந்து வருடங்களையும் கூடப் பெற்றுக்கொண்டான் (2 இராஜா. 20:1-3,6). ஆனால், அவன் செய்துவிட்ட தவறினிமித்தம், 'இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (2 இராஜா. 20:17,18) என்று சொல்லப்பட்டபோதோ, அச்செய்தி அவனை உடைக்கவில்லையே! அவனுடைய கண்களில் அது கண்ணீரை உண்டாக்கவில்லையே!! மாறாக, 'நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான"; என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே" (2இராஜா. 20:19) என்று எசேக்கியா கூறும் வார்த்தைகள், எத்தனை பரிதாபகரமானவை!
இன்றைய நாட்களிலும், தன்னுடைய வாழ்க்கையை மாத்திரமே கருத்தில் கொண்டு, வருங்காலத்தினரைக் குறித்து கனவிலும் கரிசனையின்றி வாழும் மனிதர்கள் அநேகர். 'உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்" (லூக். 2:29) என்ற சந்தோஷமானதோர் முடிவினை, நம்முடைய உதடுகளினால் உச்சரிக்கும் பாக்கியத்தினை கர்த்தர் நமக்குத் தந்திருந்தாலும், வருங்காலத்தினருக்கு வருத்தங்களை வைத்துவிட்டுச் சென்றுவிடக்கூடாது என்பதிலும், வருங்காலத்தினரை தங்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக வடிவமைத்து விட்டுச் செல்லும் சிற்பிகளாக நாம் காணப்படவேண்டும் என்பதிலும் நம்முடைய பங்கு அதிகமல்லவா!
இன்றைய நாட்களில், கிறிஸ்தவ சமுதாயத்தில், இளம் தலைமுறையினரை உருவாக்கும் பொறுப்பு இரண்டு இடங்களில் விடப்பட்டிருக்கின்றது; ஒன்று வீடு; மற்றொன்று சபை. இவ்விரண்டும் பிரதானமானவைகள். இடையிடையே வந்துசெல்லும் கூட்டங்கள், முகாம்கள் போன்றவைகளில் இளைய தலைமுறையினர் சற்று தங்கி தாபரித்தாலும், தாகம் தீர்த்துக்கொண்டாலும், தங்கள் வாழ்க்கைக்கேற்ற காரியங்களைக் கற்றுக்கொண்டாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் அனலேற்றிக்கொண்டாலும், தொடர்ந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யவிருக்கும் வாகனங்கள் வீடும் சபையுமே என்பதை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. எத்தனை தூரத்தில் அவர்கள் வாழ்ந்தாலும், இவ்விரு முனைகளோடு கூடிய தொடர்பு, அவர்களது வாழ்க்கையில் துரு ஏறாமல் பாதுகாத்துக்கொள்ள பெலம்பொருந்தியது. என்றபோதிலும், இவ்விரு துருவத்தினைத் தொடாமலும் மற்றும் தொடப்படாமலும், 'தன் இக்ஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்" (நீதி. 29:15) என்பதே சாலொமோனின் வார்த்தைகள். இன்றைய நாட்களில், வீட்டிற்கும் சபைக்கும் வெட்கத்தைக் கொண்டும் வரும் தலைமுறையினர், வீட்டாலும், சபையாலும் 'தன் இக்ஷ்டத்துக்கு விடப்பட்டவர்களே!"
'ஏலியின் குமாரர் (ஆசாரியர்கள்) பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை" (1 சாமு. 1:12); இவர்கள் ஆசாரியனுடைய குமாரர்கள் என்பது ஆச்சரியம்! ஆலயத்தில் அவர்கள் பணிவிடையும் செய்துகொண்டிருந்தார்கள் என்பது அடுத்த ஆச்சரியம்!! இப்படிப்பட்ட இடத்தில் விடப்பட்டதாலேயே 'சாமுவேலும் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான்" (1 சாமு. 3:7); தேவனுடைய ஆலயத்தை நம்பி விடப்பட்ட பிள்ளையிடம், ஆசாரியனாகிய ஏலிகூட கர்த்தரைப் பற்றி கற்றுக்கொடுக்கவில்லையோ! ஏலியின் குமாரர்கள் ஆலயத்தில் செய்யும் அட்டகாசங்களைத்தான் ஒருவேளை அவன் பார்த்துக்கொண்டிருந்திருப்பானோ! ஆலயத்திலிருந்த ஆசாரியர்கள் அவமாய்ப் போனதினால்தான், தேவனே சாமுவேலோடு நேரடியாகப் பேசும் நிலை உண்டாயிற்றோ! பிரியமானவர்களே! நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக அவர் மாற்றியிருக்க (வெளி. 1:6), சாமுவேல் போன்ற இளந்தலைமுறையினருக்கு முன்பாக மாதியாக வாழ்ந்து, ஆண்டவரைக் காண்பிக்கும் பொறுப்பு நமக்கு அதிகம் உண்டல்லவா!
கர்த்தருக்கென்று ஜனங்கள் கொண்டுவரும் பலியை தங்கள் கரங்களிலிருக்கும் ஆயுதங்களால் குத்தி பலவந்தமாய் எடுத்துக்கொள்வதையும் (1 சாமு. 2:13,14), ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே ஆசாரியர்களான ஏலியின் குமாரர் சயனிப்பதையும் (1 சாமு. 2:22) வருஷந்தோறும் சீலோவிற்கு கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படியாக வந்துசென்ற எல்க்கானாவும் அன்னாளும் அறியாமலிருந்திருப்பார்களோ! என்றபோதிலும், ஆசாரியர்களின் அக்கிரமங்களைப் பார்த்து அல்ல, ஆண்டவரை மாத்திரமே பார்த்தவர்களாக, குழந்தையாயிருந்த தங்களுடைய பிள்ளையை அவர்கள் ஆலயத்தில் கொண்டுவந்து விட்டது, தேவனுடைய ஆலயத்தின் மேல் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் உச்சத்தை எத்தனையாய் வெளிப்படுத்துகின்றது. ஆசாரியர்கள் எப்படிப்பட்டவர்களாகக் காணப்பட்டபோதிலும், 'சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்" (1 சாமு. 2:21) என்றுதானே வேதம் வர்ணிக்கின்றது. ஒருபுறம், தேவாலயத்தினைக் குறித்த ஜனங்களின் நம்பிக்கை இத்தகையதாயிருக்க, மறுபுறமோ, ஆசாரியர்களான ஏலியும் குமாரர்களும் தேவாலயத்திற்கு வந்துசெல்லும் ஜனங்கள் மீது பொறுப்பற்றவர்களாகக் காணப்படுவது எத்தனை வேதனையானது? 'நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்" (1 சாமு. 2:29) என்ற தேவனது வார்த்தைகள், தேவனை மாத்திரமல்ல, ஆலயத்திற்கு வந்துசெல்லும் மற்றவர்களைக் குறித்தும் ஏலி கரிசனையற்றிருந்ததற்கான காரணத்தைத் தெரியப்படுத்துகின்றதே! போரில் வீழ்ந்ததும், பிடரி முறிந்ததும்தானே அவர்களது முடிவாயிருந்தது. இவைகள் நம்மை எச்சரிக்கத்தானே எழுதப்பட்டிருக்கின்றன.
இன்றைய நாட்களில், தன்னிடத்தில் வந்துசெல்லும் ஜனங்களின் உதவிகளையும் மற்றும் ஒத்தாசைகளையும் பெற்றுக்கொள்ள மாத்திரமல்ல, அவர்களுக்கு தான் செய்யவேண்டிய பொறுப்பினையும் கூடவே சபை உணர்ந்துகொள்ளுமென்றால், சபையின் சரித்திரம் வெற்றியாகத் தொடரும். சாமுவேலைப் போன்ற எத்தனையோ இளைஞர்களை, சபையினை நம்பி தேவன் கொடுத்திருக்கின்றாரே! தேவ சந்நிதிக்கு வந்து செல்லும் இவர்களைக் குறித்து பொறுப்பற்றதாகச் சபை காணப்படுமென்றால், தேவனை அவர்களுக்குக் காண்பிக்கத் தவறுமென்றால், பொறுப்பற்றோரை அகற்றி, சாமுவேலைப் போன்ற இளைஞர்களை தேவனே தெரிந்துகொண்டு பொறுப்பிலேற்றும் நாட்கள் தூரத்திலில்லை.
பொறுப்பற்றவர்களாகக் காணப்படுவோரின் நிலையும் மற்றும் எதிர்காலமும் இப்படியிருக்குமென்றால், எழுந்துவரும் புதிய தலைமுறையினரின் மீது பொறுப்பினை உணர்ந்து செயல்படத் துடிக்கும் சபை எப்படிச் செயல்படவேண்டும்?
1. அசைக்க இயலாத அடித்தளம் : எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாச்சாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன் என்றும், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது (1 கொரி. 3:10,11) என்றும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எழுதுகின்றார் பவுல், அவ்வாறே, பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதி. 22:6) என்று தேவன் தனக்கு அருளிய ஞானத்தில் எழுதுகின்றார் சாலொமோன். இவ்வசனங்கள் கற்றுத்தரும் சத்தியம் என்ன? அசைக்க இயலாததோர் ஆழமான அஸ்திபாரம் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டுவிடவேண்டும் என்பதுதானே. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கைக்கு இவ்வசனங்கள் எத்தனை முக்கியத்துவமானவைகள்.
கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவருடையவர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இன்றைய இளந்தலைமுறையினரை, எத்தனை உயரமான மற்றும் அலங்காரமான மேடைகளில் ஏற்றுகின்றோம் என்பதல்ல; மாறாக, எத்தனை ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றோம், அவைகளில் அவர்களை வழிநடத்துகின்றோம் மற்றும் நிலைத்திருக்கச் செய்கின்றோம் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அசையாததோர் அஸ்திபாரத்தை நாம் அமைத்துக்கொடுக்கமுடியும். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (மத். 7:25) என்று நாம் உருவாக்குபவர்களைக் குறித்து சொல்லப்படட்டும்.
2. வருங்காலத் தலைமுறைக்கு வாழுவோரே வழிகாட்டிகள் : சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே (கலா. 4:12) என்றும், நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (1கொரி 11:1) என்றும், தன்னையே மாதிரியாக முன்வைத்து வாழுந்தலைமுறைக்கு வழிகாட்டுகின்றார் பவுல். ஆம், போதிப்பதாலும், கூட்டங்களையும் மற்றும் முகாம்களையும் நடத்துவதாலும் மாத்திரமல்ல, கூடவே, நம்மையே இத்தலைமுறைக்கு மாதிரியாக முன்னிறுத்தும் பொறுப்பும் நமக்கு உண்டல்லவா. நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி (தீத். 2:7) என்பதும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (1 தீமோ. 4:12) என்பதும்தானே உடன் ஊழியருக்கும் பவுல் கூறும் அறிவுரை. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:16) என்று கிறிஸ்துவும் போதித்தாரே.
மேலும், 'இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்" என்று போதித்ததைத் தொடர்ந்து, 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்" (மத். 18:5,6) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை, எழுந்துவரும் இன்றைய இளையதலைமுறையினருக்கு முன், இடறலற்றவர்களாகவும் மற்றும் மாதிரிகளாகவும் நாம் வாழவேண்டியதின் முக்கியத்தை எத்தனையாக எடுத்துக்கூறுகின்றது. இத்தகைய தரத்திலிருந்து தவறிவிடாமல், தலைமுறையினரைத் தன் பக்கமாகத் தக்கவைத்து, தற்காக்கும் பொறுப்பு சபைக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாதே!
3. அழைப்பையும் மற்றும் ஆவியின் வரங்களையும் பற்றிய அறிவு : இன்றைய நாட்களில், இரட்சிக்கப்பட்டபோதிலும், அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டபோதிலும், ஊழியர்கள் தங்கள் கரங்களை வைத்ததினால் வாழ்க்கையில் வரங்களைப் பெற்றுக்கொண்டபோதிலும், தங்களது அழைப்பையும் மற்றும் ஆவிக்குரிய வரங்களையும் பற்றிய தெளிவான அறிவு இல்லாததினால், எழுந்துவரும் இளந்தலைமுறையினர் அநேகரது வாழ்க்கையின் விளக்கு வெளிச்சம் தரவேண்டிய அளவிற்கு வெளிச்சம் தரவில்லை. நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன் (2 தீமோ. 1:6) என்று தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டி எழுதுகின்றார் பவுல். இத்தகைய நினைப்பூட்டுதலை, இளந்தலைமுறையினருக்குக் கொடுக்கவேண்டிய பொறுப்பும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது என்ன? என்பதை அறிந்துகொள்ளும் பொறுப்பும் சபைக்கு உண்டல்லவா! வாலவயதினரின் சரீர பெலனை மாத்திரம் பயன்படுத்திக்கொள்வதாகச் சபை காணப்படாமல், அவர்களிடம் உள்ள உன்னதத்திற்கடுத்தவைகளையும் உணர்ந்து சபை பயன்படுத்தத் தொடங்குமென்றால், அவர்களால் சபையின் பெலன் பெருகுவது நிச்சயம். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங். 127:4,5). யோசேப்பைப் போன்ற, தானியேலைப் போன்ற, நெகேமியாவைப் போன்ற தேவ ஆவியைப் பெற்ற இளைஞர்கள் அந்நிய தேசத்திலும் அணைந்துபோகாமல் தேவனுக்காக நிற்கக்கூடியவர்களல்லவா!
4. உதவியாளர்களாக மாத்திரமல்ல உடன் ஊழியர்களாக : இறுதியாக, இன்றைய நாட்களில் சபைக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்று, புதிதாக எழும்பிவரும் கிறிஸ்துவை அறிந்த இளம் தலைமுறையினரை சுவிசேஷகர்களாகவும், நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும், சபை மேய்ப்பர்களாகவும் மற்றும் பிற ஊழியங்களைச் செய்பவர்களாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தாலந்துகளையும் வரங்களையும் அறிந்தவர்களாக அவர்களை உருவாக்குவது. இத்தொடர்பணியில் சபை தவறுமென்றால், தொடர் பயணமே தடைபட்டுவிடக்கூடும்.
மோசேயின் கரங்களில் யோசுவா என்னும் இளைஞன் கொடுக்கப்பட்டிருந்தான். மோசேக்கு உதவியாயிருந்தது மாத்திரமல்ல, கர்த்தர் செய்யும் அநேக அற்புதங்களையும் கண்கூடாகக் காணும் சிலாக்கியமும் யோசுவாவுக்குக் கிடைத்திருந்தது. மோசே மலை உச்சியிலே கோலைப் பிடித்துக்கொண்டு நின்றபோது அமலேக்கோடே யுத்தம் செய்தவன் யோசுவா (யாத்.17:9,10);, நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுக்கும்படியாக மோசேயை தேவன் அழைத்தபோது, மோசேயோடுகூட தேவ பர்வதத்தில் ஏறிப்போனவன் யோசுவா (யாத். 24:12,13), ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தவன் யோசுவா (யாத். 33:11), கானானை சுற்றிப் பார்த்த மனிதர்கள் துர்ச் செய்தியைப் பரம்பச் செய்தபோது தனது வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டவன் யோசுவா (எண். 14:6); இப்படிப்பட்ட யோசுவாவை, மோசேயின் ஓட்டத்தினைத் தொடரும்படியாக தேவன் தெரிந்துகொண்டாரே! இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட தொடரோட்டத்திற்கு ஆயத்தமாயிருக்கும் இளைஞர்களை ஊழியர்களாக தேவன் உயர்த்தக்கூடுமல்லவா! அத்தகைய வாலிபர்களை அடையாளம் கண்டுகொண்டு, தேவ இராஜ்யத்தின் பணிக்காக அவர்களை பயிற்றுவிப்பது எத்தனை அவசியமானது. இக்கடைசி நாட்களில், சபை இதனைப் புரிந்துகொள்ளுமென்றால், வாலிபர்கள் பலரை கிறிஸ்துவின் வீரர்களாக்கிவிடுமே! தேவ ஜனத்தை தொடர்ந்து வழிநடத்துபவர்களாகவும் அவர்களை மாற்றிவிடுமே! இயேசு கிறிஸ்து சீஷர்களிடத்தில் பணியினை ஒப்புவித்ததுபோல, பவுல் தீமோத்தேயு போன்ற உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஊழியத்தை ஒப்புவித்ததைப் போல ஊழியர்கள் பலர் உருவாகவும் காரணமாகிவிடுமே! இத்தகைய பொறுப்பினை உணர்ந்து சபை செயல்படுமென்றால், 'தலைவர்களற்ற நிலையும், மேய்ப்பர்களற்ற நிலையும்" தேவ ஜனத்திற்கு உருவாகாது என்பது நிச்சயம். இதனைப் உணர்ந்துகொண்டவர்களாக வரும் நாட்களில் செயல்பட கர்த்தர் உதவிசெய்வாராக!
முசுக்கொட்டை இரைச்சல் கேட்டு விட்டால்
முன்னே அவர் புறப்பட்டு விட்டார்
'என்ன காரியம் இங்கே' எனக் கேட்பதற்குள்
எழுந்து செல்வது நம் கடமை அல்லவா
இக்கால இளைஞர்களை இக்ஷ்டத்துக்கு விட்டுவிட அல்ல
இராஜ்யத்தின் இராணுவத்தில் இணைப்பதுதானே நம் கடமை
அலங்கார மேடைகள் மாம்சத்துக்கு மகிழ்ச்சி தரலாம் - ஆனால்
ஆழமான சத்தியங்களே அவர்கள் ஆத்துமாவுக்கு அஸ்திபாரம்
வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாதிரிகள் நாம்
வருங்காலத் தலைமுறையை வடிவமைக்கும் சிற்பிகள் நாம்
உடனிருக்கும் தலைமுறையை ஊழியராய் உருவாக்கிடுவோம்
உன்னதத்தின் தலைமுறையாய் உலகத்தில் பரம்பச்செய்வோம்
அன்பரின் அறுவடைப் பணியில்
சகோ. P.J. கிருபாகரன்
வெள்ளி, 10 நவம்பர், 2023
உருவாக்கப்படும் தலைவர்கள் - 14
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 14
உருவாக்கப்படும் தலைவர்கள்
இவ்வுலகத்தில் எழும்பும் தலைவர்களை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம். முதல் வகை தலைவர்களாக உருவாகும் கூட்டம், இரண்டாவது வகை தலைவர்களாக உருவாக்கப்படும் கூட்டம். இவ்விரண்டிற்கும் வித்தியாசங்கள் என்று சொல்லுவதற்கு அதிகமில்லையென்றாலும், வித்தியாசங்கள் ஒன்றுமே இல்லை என்று நாம் உடனடியாக சொல்லிவிட முடியாது. உருவாக்கபடும் தலைவர்களோ அல்லது உருவாகும் தலைவர்களோ இவ்விரண்டு தலைவர்கள் கூட்டங்களும் வேதத்தை தங்கள் மாதிரியாக மாற்றிக்கொண்டு தங்கள் பயணத்தை தொடருவார்களென்றால் இருவருடைய தலைமைத்துவங்களும் நிச்சயம் வெற்றியுள்ளதாகவே இருக்கும்.
வேதத்தை தங்கள் மாதியாக வைத்துக்கொண்டு உருவான பல தலைவர்களுக்கு, தங்களைப் போன்ற பல தலைவர்களை உருவாக்கவேண்டும் என்கிற மிகப்பெரிய சவால் உண்டு. கிறிஸ்துவின் அன்பை ருசித்த ஒவ்வொருவனும் தன்னை தலைவனாக மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் உண்டு. தாங்கள் மாத்திரம் கிறிஸ்துவின் அன்பினை ருசித்தால்; போதாது தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்தினரும் அவ்வன்பைக் காணவேண்டுமே என்ற ஆவல் ஒருவனுக்குள் உருவாகுமானால், அது அவனது உள்ளத்தில் ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தையும், கரிசனையையும் அவனுக்குள் தூண்டியெழுப்புவதோடு, சந்திக்கப்படாத மக்கள் கூட்டத்திற்காக தான் செய்யவேண்டிய மிகப்பெரிய பணியையும் அவனது கண்களுக்கு முன்னதாக கொண்டுவந்துவிடும். அநேகரை தலைவர்களாக்க மேடைகள் வேண்டும், ஆனால் இப்படிப்பட்ட தலைவர்கள் ஏறத்தான் மேடைகள் வேண்டும், அவர்களை தலைவர்களாக்க மேடைகள் அவசியமில்லை. இவர்களே உருவாகும் தலைவர்கள்.
தலைவர்கள் பலர் தங்களை இவ்வுலகிற்கு தலைவர்களாக அடையாளம் காட்டிக்கொள்ள பல மேடைகளை தேடி அலைகின்றனர், எங்கேயாவது ஒரு மேடையில் பல தலைவர்களோடு கூட சேர்ந்து அமர்ந்து அவர்களோடு தங்களையும் அடையாளம் காட்டிக்கொள்ளவேண்டும் என்று பலர் முயற்சிக்கின்றனர். இது அரசியல்வாதிகளின் நோக்கு; அவர்களே எங்கு என்ன கூட்டங்கள் நடந்தாலும், அது எப்படிப்பட்ட கூட்டங்களாயிருந்தாலும், ஜனக்கூட்டம் திரளாயிருக்குமானால் அக்கூட்டத்திற்கு தாங்களாகவே சென்று தங்களை மக்கள் முன்னிலையில் நல்லதொரு தலைவராக அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்ட நோக்கமுடைய பல அரசியல்வாதிகள் நுழைவதற்கு ஆவிக்குரிய பல கூட்டங்கள் அவர்கள் மேடையேற வழிவிடுவது வேதத்திற்கு புறம்பானதே. சுவிசேஷத்தை கேட்கும் நோக்கில் ஒருவேளை அவர்கள் வருவார்களென்றால், தேசத்தில் முக்கியமான பதவியிலுள்ளவர்களென்றால், அவர்களுக்கென்று மேடையின் கீழே தனியொhரு இடத்தை ஒழுங்கு செய்து அவர்களை அமரவைக்கலாமே, அவர்களை மேடையேற்றவேண்டிய அவசியமோ அல்லது கிறிஸ்துவின் பரலோக சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகின்ற மேடையில் அவர்களை அழைத்து அறிமுகப்படுத்துவதோ அவசியமில்லாததொன்று. அரசியல்வாதிகளோடு நல்லுறவு வைத்துக்கொள்ளவதில் தவறேதுமில்லை, ஆனால், எனக்கும் இந்த அரசியல்வாதிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது என்பதை மேடையில் பிரசித்தப்படுத்துவது அவசியமில்லாதது. இப்படி அரசியல்வாதிகளை மேடையில் பிரசித்தப்படுத்துவோர், வரும் நாட்களில் தங்களின் தேவைக்கென்று முதலில் தேவனிடமல்ல அரசியல்வாதிகளிடமே சென்று நிற்பர். தன்பக்கம் மக்களை இழுப்பதற்கு ஆவிக்குரிய கூட்டங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் பெருகிவரும் இந்நாட்களில் இது தேவராஜ்யத்திற்கு ஆபத்தைக்கொண்டுவரும் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் இத்தேசத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் சமமாக பாவிக்க அழைக்கப்பட்டவர்கள். வேதத்தின் பார்வையில் அவர்கள் எல்லாரும் சமமே. ஒரு கட்சியினருக்கு நாம் மேடையளித்தால், எதிர்கட்சியினரை நாமே நமக்கு எதிரிகளாக்குகிறோம்.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைப்போன்ற தலைவர்கள் கிறிஸ்தவ உலகத்திலும் எழும்பிவருகின்றனர். தலைவர்களாகும் ஆசையில் தலைவர்களாகும் தலைவர்களிடம் ஆவிக்குரிய குணநலன்கள் எப்படி காணப்படும்? அவர்கள் மனதில் மக்களைக்குறித் எண்ணங்களே மிஞ்சியிருக்கும். மக்கள் தங்களை தலைவர்களாக அங்கீகரிக்கவேண்டும், அவர்கள் தங்களை போற்ற வேண்டும், தங்களை வந்தனஞ் செய்யவேண்டும், உயர்ந்த ஸ்தானத்தில் தங்களை வைக்கவேண்டும் என்ற எண்ணமே அவர்களது நெஞ்சில் மேலோங்கியிருக்கும். சுய ஆசையினாலும், பெருமையினாலும் தங்களைத் தலைவர்களாக்கிக்கொள்ள முயலுவோர் தங்கள் தலைமைத்துவத்தில் தோற்றுப்போவார்கள். இப்படிப்பட்டோர்களின் கண்கள் தேவனை நோக்கியல்ல, தனது தேவையை நோக்கியும், மக்களை நோக்கியுமே காணப்படும்.
தலைமைத்துவத்தைப் பொருத்தவரையில் வேதத்தில் காணப்படும் இயேசுவின் சத்தியமே நமக்கு முன்னுதாரணம். 'உங்களில் முதன்மையாயிருக்க விரும்புகிறவன் முதலில் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்' என்ற இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் அதிகம். ஆம், பணிவிடை செய்யத்தெரியாதோருக்கு பதவி எதற்கு? அஸ்திபாரமில்லாமல் கட்டிய எந்த வீடும் நிச்சயம் ஆடத்தான் செய்யும். தலைமைத்துவத்திற்கும் அஸ்திபாரம் அவசியமே. தலைவனாக ஆசைப்பட்ட மோசேயை தேவன் ஆடுமேய்க்க அனுமதித்தார். மோசே தேவனால் அற்புதமாகக் காக்கப்பட்டவன், இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தில் பெருகிவருவதைக் கண்ட எகிப்தின் ராஜா, அவர்களால் தனது தேசம் நிரம்பிவிடக்கூடாதே என்ற பயத்தினால் அவர்களை அழிக்கவேண்டும் என்று யோசனைபண்ணினதோடு அதை செயல்படுத்திக்கொண்டும் இருந்த காலகட்டத்திலே தேவன் மோசேயை பாதுகாத்தார். மருத்துவச்சிகளின் கண்களில் மோசேக்கு தயவு கிடைத்ததோடு, பார்வோனின் குமாரத்தியின் கண்களிலும் அவனுக்கு தயவு கிடைக்கும்படி கர்த்தர் கிரியை செய்தார். தகப்பனாலும், தாயினாலும் கைவிடப்பட்டு தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த மோசேயை தேவன் போஷிக்க எகிப்தின் அரண்மனையையே தெரிந்துகொண்டது எத்தனை அற்புதம். தேவன் மோசேயைக் காத்ததற்கு காரணம் தன் ஜனங்களை எகிப்திலிருந்து இரட்சிக்கவே. தலைவனாக்கவே தேவன் மோசேயை தண்ணீரிலிருந்து காப்பாற்றி எகிப்தை ஆண்ட பார்வோனின் அரண்மனையிலே கொண்டுவந்து விட்டார். பார்வோனின் ஆட்சியினடியிலே, அவனது அரண்மனையிலேயே மோசேக்கு தலைமைத்துவத்தின் பயிற்சிகளம் ஆரம்பமானது. எனினும் மோசே தான் தேவனால் தலைமைத்துவத்திற்கென்று அழைக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ளவில்லை. தனது ஜனங்களைக் குறித்த வைராக்கியம் அவனது மனதில் காணப்பட்டது, தனது மக்களை எகிப்தியரிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்ற துணிச்சலும் கூட மோசேயினிடத்தில் காணப்பட்டது. ஆனால், தேவ அழைப்பை அவனது மனம் அறிந்துகொள்ளாமலேயிருந்தது. தேவ அழைப்பை மோசே அறிந்துகொள்ளாததினால், தன்னைத்தானே தலைவனாக்கிக்கொள்ளும் அபாயமான சூழ்நிலைக்கு அவன் தன்னைத் தள்ளிக்கொண்டான்.
எகிப்தின் அரண்மனையிலே மோசே வளர்ந்தாலும், தான் எபிரேயன் என்கிற எண்ணமே அவனிடத்தில் மேலோங்கியிருந்தது. அரண்மனையில் இருந்தாலும் அவனது மனம் எகிப்தின் ஜனங்களுக்கும், ஆளோட்டிகளுக்கும் விரோதமாகவேயிருந்தது. எகிப்தியன் ஒருவன் தன் சகோதரனை அடிப்பதை அவன் ஒருநாள் கண்டபோது, அந்த எகிப்தியனை அடித்து அவனை கொன்றுபோட்டு, தனது சகோதரனை காப்பாற்றினான். மோசேயின் இந்த செயலில், தன் ஜனத்திற்காக அவன் காட்டிய வைராக்கியம் காணப்பட்டாலும், அதன் பின்னணியில் அவனது சுய பெலமே ஆட்சிசெய்துகொண்டிருந்தது. தன் ஜனங்களை எப்படியாகிலும் எகிப்தியரிடமிருந்து விடுதலை செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தும், அந்த எண்ணம் தேவ அழைப்போடு கூட இணைந்திருக்கவில்லை. தேவனது உதவியில்லாமல், தனது தலைமைத்துவத்தின் பயணத்தை மோசே தொடங்கினான். இதன் விளைவு, அவன் அந்த தேசத்தை விட்டே ஓடும் நிலை உருவானது. மோசேயின் காரியம் பார்வோனுக்கு வெளிப்பட்டபோது, மோசேயின் உயிருக்கே ஆபத்து உருவாகிவிட்டது. சுய பலத்தை பயன்படுத்தும் தலைவர்களின் நிலை இதுவே. மோசே பொறுமையில்லாதவன் என்பதை, இந்த செயலின் மூலம் நாம் நன்கு அறிந்துகொள்ளலாம். பொறுமையில்லாத மோசேயைக் கொண்டு தன் ஜனத்தை வழிநடத்த தேவன் விரும்பவில்லை. அவனில் அந்த குணம் உருவாகுமளவும் அவர் காத்திருந்தார்.
தவறுகளை மறைக்கும் தலைவர்கள் - 13
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 13
தவறுகளை மறைக்கும் தலைவர்கள்
மோசேயின் செய்த காரியத்தில் புதைந்துள்ள மற்ற காரியங்களையும் நாம் காணத் தவறக்கூடாது. மோசே தன் சகோதரனை அடித்த எகிப்தியனை கொலைசெய்ததோடு மாத்தரமல்லாமல், தான் செய்த அந்த காரியத்தை மறைத்துவிடவேண்டும் என்றும் நினைத்தான். தவறு செய்யத் துணிந்த மோசேயின் மனம் அந்த தவற்றை மறைக்கவும் முனைந்து நின்றது, தவறுகளை மறைப்பது தலைவர்களுக்கு அழகல்லவே. இந்த குணம் காணப்படுமாயின் தலைமைத்துவத்தில் ஒரு தலைவன் நிச்சயம் நிலைத்துநிற்கமுடியாது. பாவஞ் செய்யாத மனிதன் இந்தப் பூமியில் இல்லையே! சாதாரண விசுவாசியாயிருந்தாலும், மிகப்பெரிய தலைவனாக இருந்;தாலும் எதாவது சில விஷயங்களில் தவறுவது மனித இயற்கையே; பாவங்களில் அல்ல. என்றாலும் தான் செய்த காரியம் தவறு என்று தன் மனதே தன்னை வாதிக்கும் போது, அதனைச் சரிப்படுத்த முடியாமல், வெளிமக்களோடும் அதனைக்குறித்து ஆலோசனை கேட்க இயலாமல் அதனை மறைத்துவிடவேண்டும் என்ற மனப்பாங்கே அநேகரிடம் காணப்டுகின்றது. இப்படிப்பட்டோர் தலைவராயிருப்பது எப்படி? மற்றொரு கூட்டத்தினர், தான் தவறு செய்தாலும், அது வேதத்திற்கு விரோதமானது என்று நன்றாக அறிந்திருந்தும், தன்னைப் பின்பற்றுபவர்களுக்க முன்பாக தன்னுடைய ஆவிக்குரிய எடை குறைந்துபோய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில், அதை எப்படியாவது நியாயப்படுத்தவே முயற்சிசெய்கின்றனர். வேதத்திற்கு ஒத்ததாக தனது செயல்கள் காணப்படாவிட்டாலும், சில வேத வசனங்களையாவது எடுத்துக்காட்டி தனது செயல்களுக்கு வசனங்களை ஒத்துப்போகவைக்கின்றனர். தவறுகளை மறைத்துவிடவேண்டும் என்று ஒரு தலைவன் நினைப்பானாகில் அவனது தலைமைத்துவம் தகுதியுள்ளதாயிராது. தனது பிரசங்கத்தில் குறை காணப்படுமாயின் அதை ஒத்துக்கொள்ள எத்தனை தலைவர்கள் இன்று ஆயத்தம்? ஏதாவது யாராவது அவர்களது பிரசங்கத்தில் சந்தேகங்களைக் கேட்டால், தேவன் பேசினார், அது அப்படித்தான் என்று வாயடைக்கச் செய்துவிடுவார்கள். தேவன் தேவவசனத்திற்கு விரோதமாய் எப்படி பேசுவார். வேதவசனங்களுக்ளு ஒத்துப்போகாத வார்த்தைகளை தேவன் எப்படி பேசுவார். அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல, அந்த ஊழியரின் வாயிலிருந்து வந்த வார்த்தையே. வசனத்தை போதிக்கும் ஊழியரல்ல, வசனமே நமக்கு முக்கியம். ஊழியரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளல்ல, ஊழியரின் வாழ்க்கையும் மக்களிடத்தில் வேதத்திற்கு ஒத்ததாயிருக்கவேண்டியது அவசியம். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத்தேயு 5:15). பவுல் இளம் ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக தான் எழுதிய நிருபத்தில், உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (1தீமோத்தேயு 4:12) என்று எத்தனை அழகாய் எழுதியிருக்கின்றார். மாதிரியாயிருக்க இயலாத தலைவர்கள், தேவன் தங்களிடத்தில் கொடுத்த மந்தைக்கு எப்படி நேர்த்தியான மேய்ப்பர்களாயிருக்க இயலும்.
தவறுகளைச் செய்து சிக்கிக்கொள்வதில் மற்றுமொரு வகையிலும் தலைவர்கள் பிடிபட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மோசே தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த எகிப்தியனைக் கொலை செய்யவில்லை, அந்த எகிப்தியனுக்கும் இவனுக்கும் எந்தவித பகையும் இல்லை. தன் சகோதரனுக்கு உதவினதினாலேயே இந்த பெரும் இன்னலில் மோசே சிக்கிக்கொண்டான். மோசே அந்த மனிதனைக் கொல்லும்போது அங்கு அந்த இஸ்ரவேலனைத் தவிற யாரும் இல்லையே. அப்படியிருக்கையில் மோசேயின் செய்கை எப்படி வெளியே வந்தது? இதை வெளியில் அறிவித்தது யார்? தவறு செய்த மோசே நிச்சயம் தனது தவறை மற்ற யாருக்கும் அறிவித்திருக்கமாட்டான், அப்படி அவன் செய்வதற்கு வாய்ப்பே இல்லலை. இப்படியிருக்க வேறு யாராக இருக்கமுடியும்? நிச்சயமாக மோசே உதவிசெய்த இஸ்ரவேலனாகிய அவனது சகோதரனே. சகோதரனுக்கு உதவி மோசே சங்கடத்தில் மாட்டிக்கொண்டான். மோசே தன் சகோதரன் தனது இந்த செயலை வெளியிலே அறிவிக்கமாட்டான், தெரியப்படுத்தமாட்டான் என்று நினைத்திருப்பான். ஆனால் அவனது நினைவு பொய்த்துவிட்டது. தன் சகோதரனுடைய உயிரைக்குறித்து மோசே கவலைப்பட்டு காப்பாற்றினான், ஆனால், இதை நான் வெளியிலே அறிவித்தால் மோசேயின் உயிருக்கு ஆபத்து வருமே என்று அந்த இஸ்ரவேலனாகிய சகோதரன் கவலைப்படவில்லை. மோசேயின் செயல் இஸ்ரவேல் மனிதர்களிடத்தி;ல் பரவியதோடு மாத்திரமல்லாமல், இஸ்ரவேல் மனிதர்களிடமிருந்து எகிப்தின் மனிதர்களுக்கு பரவி, எகிப்தின் மனிதர்கள் வாயிலாக எகிப்தின் அரண்மனைக்கும் சென்று அரசனின் செவியிலும் ஏறிவிட்டது.
ஸ்தாபனங்களிலோ அல்லது சபைகளிலோ அல்லது எந்தவிதமான கிறிஸ்தவ ஊழியங்களிலோ தலைவர்களாயிருப்பவர்கள் தங்கள் குடையின் அடியில் இருக்கும் ஒரு சகோதரனின் பார்வையில் செய்யும் தவறுகள், வேதத்திற்கு விரோதமான காரியங்கள் நாளடைவில் அவரது முழு ஐக்கியத்தையும் பாதிக்குமளவிற்கு உருவெடுத்துவிடும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. உடன்படிக்கையோடு தவறுகள் செய்யும் தலைவர்களாகவும் நாம் காணபபடக்கூடாது. நான் செய்த இந்த காரியத்தை சபையில் நீ வெளியிட்டுவிடாதே என்ற தேவையில்லாத உடன்படிக்கை அவசியமில்லை. அப்படிப்பட்ட உடனபடிக்கை ஒன்றை தன் தவறைக் கண்டுவிட்ட சகோதரன் ஒருவனோடு உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் தேவனிடத்திலிருந்தல்ல, சாத்தானிடத்திலிருந்தே வருகின்றது. இப்படிப்பட்ட உடன்படிக்கையினால் கட்டப்பட்டவர்களாயிருக்கும் ஊழியர்கள் உண்டு. கைகள் கட்டப்பட்டவர்கள் எப்படி கட்டிட வேலை செய்யமுடியும். யாரின் முன்னிலையில் அவர் தவறு செய்தாரோ, அல்லது யாருடன் தவறு செய்தாரோ அவரைக் கண்டவுடன் அவருக்கு நிச்சயம் நடுக்கம் உண்டாகுமே. அவரையே நான் முதலில் பிரியப்படுத்தவேண்டும் என்கிற எண்ணமும் சிந்தையும் உண்டாகுமே. அவரை நான் இழந்துவிடக்கூடாது, அவர் என்னைவிட்டு பிரிந்துபோய்விடக்கூடாது, அப்படி அவர் பிரிந்துபோய்விட்டால் நான் அவருடன் அல்லது அவரது முன்னிலையில் செய்த அநேக பாவங்கள் வெளியில் வந்துவிடுமே என்ற அந்த குறிப்பிட்ட நபரைக்குறித்த கவனமும் கரிசனையுமே அதிகமாய் அவருடை வாழ்க்கையில் காணப்படும். தேவனல்ல அந்த குறிப்பிட்ட நபரே இவரை ஆளுகிறவராக காணப்படுவார். தேவனது வார்த்தைக்கல்ல, அந்த நபரின் வார்த்தைக்கே இவர் முதலிடம் கொடுக்கும் தலைவராக மாறிப்போய்விடுவார். சபையில் அல்லது ஸ்தாபனத்தில் உயர்ந்த, நல்ல பொருப்பான பதவியைக் கொடுத்து அவரை அதிகம் கவனிக்கின்றவராக அந்த தலைவர் மாறிப்போய்விடுவார். இப்படிப்பட்ட தலைவரின் ஆவிக்குரிய வாழ்வும் வர வர நிச்சயம் சரிந்தேபோய்விடும். அந்த நபர் யாரோடு பேசினாலும், இவருக்கு பயம் ஆட்டத்தொடங்கிவிடும். ஏனெனில் தனது பிழைகளை அவர் அவரிடம் பகிரங்கப்படுத்திவிடக்கூடாதே என்பதே. சகோதரர்களின் முன்பாகவோ, அல்லது நெருங்கியிருக்கும் நபர்களிடமோ தவறான செயல்களில் தலைவர்கள் சிக்கிக்கொண்டால் அது அவரது தலைமைத்துவத்தையே அழித்துவிடும். தவறுகளை ஒப்புக்கொள்ளாத தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத்தை இழந்தே நிற்பார்கள் அல்லது தங்களது தலைமைத்துவத்தின் மக்களை பிரிவினைக்குள் நடத்திவிடுவார்கள். தங்களது தவறுகளை தலைவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், மக்கள் முன் தெரியும்படி செய்த தவறான செயல்களை மக்கள் முன்னதாகவே அறிக்கையிட்டு தங்களை சுத்திகரித்துக்கொள்ளத் தவறினால், மக்கள் அப்படிப்பட்ட தலைவர்களை பின்பற்றத் தவறிவிடுவார்கள்.
குடும்ப வாழ்விலும் கூட தலைவர்கள் தலைவர்களாகவே இருக்கவேண்டும், குடும்ப வாழ்வும் தலைமைத்துவத்தை வர்ணிக்கும் நல்ல மாதிரி. ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? (1தீமோத்தேயு 3:5). தலைவராயிருப்போர் தங்கள் குடும்ப வாழ்க்கையின் மேல் அக்கரையுள்ளோராயிருக்கவேண்டும். குடும்ப வாழ்வில் செய்யும் தவறுகளும் தலைமைத்துவம் கவிழ்ந்துபோவதற்கும், கறைபட்டுப்போவதற்கும் வழிவகுத்துவிடும். மனைவியோடுகூட சரியான உறவு இல்லாத ஒரு மனிதன் தனது மனைவி அமர்ந்திருக்கும் சபையில் எப்படி உறக்க பிரசங்கிக்கமுடியும். தனது தவறுகளை அறிந்த மனைவி அங்கே அமர்ந்திருக்கிறாளே. தான் எத்தனை மணிக்கு எழுப்புகிறேன்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கின்றேன்? யாரோடு எப்படிப்பட்ட உறவு வைத்திருக்கின்றேன்? பிள்ளைகளோடு எப்படி நேரம் செலவழிக்கின்றேன்? பிள்ளைகளை எப்படி நடத்துகின்றேன்? அவர்களுக்கு எப்படி ஆலோசனை அளிக்கின்றேன்? வீட்டு காரியங்களை நான் எப்படி நடத்துகின்றேன்? பணத்தை எப்படி செலவழிக்கின்றேன்? எனது வரவு எவ்வளவு? ஊழியத்தின் பணத்தை எப்படி பயன்படுத்துகின்றேன்? போன்ற பல காரியங்களை அறிந்த அவரது மனைவி அங்கே செய்தி கேட்க அமர்ந்திருக்கும்போது, அவரது செய்தி தேவனைச் சார்ந்ததாயிருக்குமோ? மனைவியைச் சார்ந்ததாகவே இருக்கும். ஒரு காரியத்தை தேவன் சபைக்கு பேசு என்று அவரை ஏவும்போது, அவரது மனைவி அங்கே அமர்ந்திருந்தால், தேவன் சொல்லுகின்ற குறிப்பிட்ட காரியத்தில் தன்னுடைய வாழ்க்கை மாதிரியாயில்லை என்பதை பிரசங்கியார் அறிந்திருப்பாராயின், ஆண்டவரே சொன்னாலும் இவருக்கு பேச துணிச்சல் வருவதில்லை; அதை அப்படியே மறைத்துவிடுவார்கள். இப்படி மனைவியிருக்கையில் தன்னால் பேச இயலாத தலைப்புகள் என்று அந்த பிரசங்கியாரிடம் ஏராளமானவைகள் இருக்கும். பிரசங்க பீடத்தில் பயமில்லாமலும், குற்ற மனமில்லாமலும் தேவன் அருளும் வார்த்தைகளை தைரியமாய் அறிவிக்க தலைவன் ஒருவன் விரும்புவானென்றால், அவன் நிச்சயம் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் பழுதில்லாதவனாக இருக்கவேண்டும். மனைவியிடம் மாத்திரமல்ல, நெருங்கிய வட்டத்திலுள்ள அத்தனைபேருடனும் தலைவன் ஒருவன் தன்னை எல்லாவிதத்திலும் தலைவனாக அடையாளம் காட்டத்தவறக்கூடாது.
தலைவனின் தனிமைப் பயணம் - 12
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 12
தலைவனின் தனிமைப் பயணம்
தலைவனின் வாழ்க்கையிலும், ஊழியத்தின் காரியங்களிலும் தனிமை என்பது தவிர்க்;க முடியாத ஒன்று. தலைவனாகும் மனிதன் தானறியாமலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளுகிறான். ஒருபுறத்தில் இது அவசியமானதுதான் என்றாலும், மற்றொருபுறத்தில் இதில் மறைந்து கிடக்கும் ஆபத்துக்களையும் தலைவர்கள் காணத் தவறிவிடக்கூடாது. அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையைப் பாதுகாக்கும், உற்சாகப்படுத்தும் மேய்ப்பர்களாக அவர்கள் காணப்பட்டாலும், தலைவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்புக்குள்ளாகத் தள்ளப்படுகின்றனர். சபைக்கு வரும் விசுவாசிகளையோ, தன்னைப் பின்பற்றும் மற்ற மக்களையோ அநேக காரியங்களில் கேள்விகேட்டு அவர்களுக்கு ஆலோசனை அளிக்கலாம், ஆனால், தலைவர்களுக்கு ஆலோசனை கிடைப்பது எங்கே? தேவ சந்நிதி மட்டுந்தானா? தலைமைத்துவமே தலைவர்களைத் தனிமைப்படுத்துகின்றது. இப்படி தலைவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது, தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக்குறித்து அதிக கவனமாயிருக்வேண்டியது அவசியம். தனிமை என்ற பாதையில் தலைவர்கள் நுழைந்து செல்லும்போது, அது அவர்களது ஆவிக்குரிய வாழ்வில் தரத்தை தணித்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆண்டவருக்கும் அலுவல்களுக்கும் சரியான நேரத்தை தலைவன் ஒதுக்கத் தவறினால், அது அவரை ஆண்டவரிடமிருந்து பிரித்து அலுவல்களண்டை நடத்திச் சென்றுவிடும். ஊழியத்தை காரணப்படுத்தி தனிவாழ்வில் ஆவிக்குரிய தரத்தை தலைவர்கள் குறைத்துக்கொள்ளக்கூடாது.
நீங்கள் வேதம் வாசித்தீர்களா, ஜெபித்தீர்களா என்று அநேகரை கேட்கும் தலைவன் தன்னைப்பற்றியும் சிந்திக்கத் தவறிவிடக்கூடாது. தலைவர்கள் பலரிடம் ஆய்வு நடத்தியதில் வெளிவந்த தகவல் என்னவென்றால், தன்னை 'வேதம் வாசித்தீர்களா' என்று யாருமே கேட்கவில்லை என்பதே. அதற்கு காரணம் தலைவர்கள் இன்று வேதம் வாசித்திருப்பார்கள் என்று மக்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கையே. தங்களைப் பற்றி இத்தனை நிச்சயமான உறுதியை மனதில் கொண்டிருக்கும் தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வளவு உச்சிதமாக அமைத்துக்கொள்ளவேண்டும். மக்களைச் சந்திக்கும் முன் தேவனையும் வேதத்தையும் சந்திப்பதே தலைவனின் முதல்வேலை. ஒவ்வொரு நாளின் அதிகாலை நேரங்களையே தலைவர்கள் இதற்கென ஒதுக்கவேண்டும். பகல் நேரத்தில் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இவைகளை தள்ளிப்போடுவது நியாயமாகாது. காலையில் 10 மணிக்கு ஜெபித்துக்கொள்ளலாம் என்று தலைவன் ஒருவன் நினைத்து வீட்டில் அமர்ந்திருக்கும்போது, 9:30 மணிக்கு சபையின் விசுவாசி ஒருவர் பாரத்துடன் வந்து பேசிக்கொண்டிருப்பார், போதகருக்கோ 10 மணிக்கு ஜெபிக்கவேண்டும் இந்நிலையில் போதகரது நிலை எப்படிக் காணப்படும். அந்த விசுவாசியினிடத்தில் நான் ஜெபிக்கவேண்டும் பின்பு வந்து பேசுகிறீர்களா என்று போதகர் சொல்வாரென்றால், அந்த விசுவாசி என்ன நினைப்பார், நான் அதிகாலையில் ஜெபத்தை முடித்துவிட்டேன் எனது போதகர் இப்போது தான் ஜெபிக்கப் போகிறாறா என்றே வந்தவர் நினைப்பார். அந்த விசுவாசி எப்போது எழுந்துபோவார் என்ற நிலையே போதகருக்கு உருவாகும், அந்த விசுவாசியின் வேதனையான வார்த்தைகளின் மேல் போதகர் கவனம் செலுத்தமாட்டார். எப்போது பேச்சை முடிக்கலாம் என்றே எண்ணிக்கொண்டிருப்பார். சரி நான் ஜெபித்துக்கொள்ளுகிறேன் என்று கூறி அவரை துரத்தாமல் துரத்த அவர் முற்படுவாரே. அல்லவென்றால், தனது ஜெபநேரத்தை மறந்துவிட்டு அந்த விசுவாசியை முக்கியப்படுத்தி அவரோடேயே அமர்ந்துபேசி தனது ஜெபநேரத்தை இழந்துவிடுவார். மக்களோடு அமர்ந்து ஊழியம் செய்கின்ற நேரத்தில் தேவனோடு அமர்ந்திருப்பதையும், தேவனோடு அமர்ந்திருக்கும் நேரத்தில் மக்களோடு அமர்ந்திருப்பதையும் தேவன் விரும்புவதில்லை.
தனது வீடுகளிலோ அல்லது காரிய ஸ்தலங்களிலோ மாத்திரமல்ல, தான் செல்லும் இடத்திலெங்கும் தலைவன் இச்செயலை கடைப்பிடிக்கவேண்டும். கூட்டங்களினிமித்தம் வேறு இடங்களில் தங்க நேரிட்டாலும், தலைவன் தனது தனிவாழ்வின் ஒழுக்கத்தில் தவறிவிடக்கூடாது. தனிவாழ்வின் ஒழுக்கத்தினால் தலைமுறையைப் பாதிக்கும் தலைவர்களே, உறுதியான தலைவர்கள் சந்ததியை எழும்பும் வல்லமையுடையோர். தலைவனது தடங்களை தலைமுறைகள் கவனித்துக்கொண்டிருக்கின்றனவே. தனிவாழ்வின் ஒழுங்கை பாதுகாக்க இயலாத தலைவனால் தலைமைத்துவத்தையும், தலைமைத்துவத்தின் அடியிலுள்ள மக்களையும் எப்படி பாதுகாக்கமுடியும்.
ஜெபநேரமும் தேவை, தேவன் கொடுத்த விசுவாசிகளும் தேவை. இவ்விரண்டில் எதுவும் இழக்கப்படத்தக்கதல்ல. இரண்டையும் சரியான நேரத்தில் தலைவர்கள் செய்வார்களென்னறால் இரண்டும் நேர்த்தியாய் செய்யப்படுமே. மேய்பனோ அல்லது எந்தத் தலைவனோ தனது விசுவாசிகள் விழிக்கும் முன்னதாக தனது தனிவாழ்க்கையை தேவ சமூகத்தில் வைத்து, தேவ சமூகத்திலிருந்து தனது மக்களுக்கு ஊழியம் செய்ய தயாராகிவிட்டவராகக் காணப்படவேண்டும். போதகர் ஒருவர் காலை 10 மணிக்கு ஜெபித்துக்கொண்டிருப்பார் (தனி ஜெபம்), அவரைத் தேடி ஜெபிக்கும்படிக்கு அவரது சபையின் விசுவாசி வருவார், போதகரின் வீட்டினுள் நுழைந்ததும் அந்த விசுவாசிக்கு கிடைக்கும் பதில் என்னவாயிருக்கும், 'போதகர் ஜெபத்தில் இருக்கிறார்' என்பதே. இந்தப் பதிலைக் கேட்டவுடன் அந்த விசுவாசி சென்றுவிடுவார். அவரது வேதனையைப் போக்கவேண்டிய நேரத்தை போதகர் ஜெபத்தில் போக்கிக்கொண்டிருக்கின்றார். தலைவர்கள் தங்கள் ஜெபத்தையும், வேத தியானத்தையும் சரியான நேரத்தில் செய்துமுடித்திருக்கவேண்டும். வேதம் வாசிக்கக் கூட சமயமின்றி ஒரு தலைவன் தன்னை கீழ்தரமான நிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. தேவனிடம் நேரம் செலவிட முடியாத அளவிற்கு அதிகமான கூட்டங்களை ஓழுங்கு செய்து, தன்னுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய அட்டவணையை ஒழுங்கீனமாக மாற்றிக்கொள்வது தலைவனுக்கு எப்படி அழகாகும்.
தலைவன் ஒருவன் எப்போதும் ஊழியத்திற்கென்றும், மக்களின் தேவைகளுக்கென்றும் ஆயத்தமாயிருக்கவேண்டும். அழைப்பு வந்தபின்பு தன்னை ஆயத்தம் செய்வது தலைவர்களுக்கு அழகல்ல. தலைவர்கள் ஆயத்தத்துடனேயே இருக்கவேண்டும். அதிகாலையிலேயே தேவனை சந்தித்து அவரது கிருபைகளைப் பெற்று மக்களுக்கு ஊழியம் செய்ய தலைவன் தயாராகியிருக்கவேண்டும். திடீரென வரும் அழைப்புகளுக்கும் தலைவன் ஆயத்தமாயிருக்கவேண்டும். திடீரென்று பிரசங்கிக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் 'நான் ஆயத்தமாயில்லையே' என்ற சாக்குப்போக்கு தலைவர்களின் வாயிலிருந்து புறப்பட்டால் அது நன்றாயிருக்குமோ. எந்த கூட்டத்திற்கு சென்றாலும் அந்த கூட்டத்திற்கு ஒத்ததான செய்தியை தலைவன் ஆயத்தம் செய்துவைத்திருந்தால், இந்த சாக்குப்போக்கைத் தடுக்கலாமே. ஞாயிறு ஆராதனையில் தலைவாகள் பங்குபெற்றாலும், அந்த ஆராதனையில் தன்னை செய்தியளிப்பவராகக் கருதிக்கொண்டு ஒரு செய்தியுடன் ஆயத்தமாயிருப்பது தலைவர்களுக்கு எத்தனை அழகாயிருக்கும். ஒருவேளை அந்த ஆராதனையில் செய்தியளிக்கவேண்டிய நபர் வரவில்லையென்றால், அந்த அழைப்பு அங்கே அமர்ந்திருக்கும் தலைவர்களை நோக்கியே நிச்சயம் திரும்பும். அந்நேரத்தில் பயமில்லாமல், தன்னிடம் உள்ள தேவ வார்த்தையைப் பிரசங்கிக்கலாமே. தினமும் ஒரு செய்தி இது தலைவர்களின் தலையாய கடமை. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியே வரும்போது, தலைவனே உன்னிடத்தில் மக்களுக்கென்று புதிய செய்தி உண்டா, அல்லது அழைப்பு வந்தால் தான் அதை ஆயத்தப்படுத்துவாயா? நீ ஆயத்தத்தோடு இருந்தால் அழைப்பு தலைவரைத் தேடி வருமே.
ஆயத்தமுள்ளவர்களே எஜமானின் வீட்டிற்குள் பிரவேசிக்கின்றனர். தங்கள் கைகளில் எண்ணெயில்லாத கன்னிகைகளின் நிலை என்னவாயிற்று, அவர்கள் கன்னிகைகள்தான் ஆனால், வாசலுக்கே வெளியேதான் நிற்கமுடிந்தது உட்பிரவேசிக்க முடியவில்லையே. கன்னிகைகளை நாம் தலைவர்கள் என்று எடுத்துக்கொண்டால். இரண்டு தலைவர்ளின் கூட்டமும் ஆண்டவரை எதிர்கொள்ள தயாராகி புறப்பட்டது நல்லதே, ஆனால், ஒரு கூட்ட தலைவர்களின் ஆயத்தம் ஆண்டவர் வரும் வரை தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. அவர் எப்போது வந்தாலும் அவரைச் சந்திக்க அவர்கள் தயாராயிருந்தார்கள். ஆனால், மற்ற கூட்ட தலைவர்களோ, ஆயத்தப்பட்டது உண்மை, ஆனால் அந்த ஆயத்தம் மணவாளன் வரும்வரை போதுமானதாயிருக்கவில்லை, பாதியிலேயே அவர்களது ஆயத்தம் நின்றுபோனது. விளக்கோடும் அறைகுறையான எண்ணெயோடும் தான் அவர்கள் காணப்பட்டார்கள். மணவாளனள் வருகின்றார் என்ற ஆவலோடுதான் அவர்களும் புறப்பட்டார்கள், ஆனால், இப்போது, அவர் எப்போது வருவாரோ என்ற அசதிக்குள்ளாகக் காணப்படுகின்றனர். ஆயத்தமுள்ளவர்களோடு கூடவே ஆயத்தமில்லாத இவர்களும் உறங்குகின்றனர். தங்களது ஆயத்தத்தைக் குறித்தும் எண்ணெய் குறைந்துபோய்விட்ட தங்கள் விளக்கைக் குறித்தும் அவர்கள் கவலைகொள்ளுவதில்லை. அசதியும், சோம்பலும் அவர்களின் கண்களை அடைத்துப்போட்டதே அதற்குக் காரணம். நடுராத்திரியில் மணவாளன் வந்தபோது 'அவரை எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்' என்ற சத்தம் உண்டானபோது, இப்படிப்பட்ட தலைவர்களின் நிலை தடுமாறத் தொடங்கியது. அப்போதுதான் தனது விளக்கிலுள்ள எண்ணெயை அவர்கள் பார்க்கின்றனர், அதுவரை அதை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. எண்ணெயில்லாமல் திரி மங்கி எரிவது அவர்கள் ஆயத்தமில்லாதவர்கள் என்பதை அடையாளம் காட்டிக்கொடுத்தது. அவர்கள் ஆயத்தப்பட்டு வருவதற்குள் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. இது எத்தனை பரிதாபமான நிலை. அவர்கள் ஆயத்தத்தோடு இருந்தால் அநேக இடங்களில் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தியிருக்கலாம், தலைவர்களின் ஆயத்தமின்மையே அவர்களது ஊழியத்தின் கதவு அடைக்கப்பட காரணம். ஆதியில் காணப்பட்ட ஆயத்தம் இவர்களில் இல்லை. தலைவனின் விளக்கு திரியோடு மாத்திரமல்ல, எண்ணெயுடனும் இருக்கவேண்டும், எப்போதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும். எண்ணெயோடு ஆயத்தமாயிருக்கும் தலைவர்களோடு, எண்ணெயில்லாமல் காணப்படும் தலைவர்கள் தங்களை தயாராக்கிக்கொள்ளவேண்டும். தினமும் தன்னுடைய விளக்கில் எண்ணெயை நிர்பபாமல், அந்த நாளின் ஊழியத்திற்கு தேவையான கிருபைகளை பெற்றுக்கொள்ளாமல் தலைவவன் காணப்படக்கூடாது, இரு சக்கர வாகனத்தின் லைசென்ஸ் ஒருவரிடம் இருக்குமென்றால், அவரிடம் மோட்டார் சைக்கிளை ஓட்டுங்கள் என்று சொன்னால், அவர் நான் ஆயத்தமாகிவிட்டு வருகின்றேன் என்று சொல்லமாட்டாரே. வாகனத்தை ஓட்ட அவர் நன்றாக அறிந்திருந்தால் எந்நேரத்தில் அதற்கான கட்டளை கிடைத்தாலும், அதற்காக அவர் ஆயத்தமாயிருப்பாரே. அதைப்போலவே ஒரு ஊழியனும் காணப்படவேண்டும், மக்களின் தேவைகளுக்கு எப்போதும் தங்களை ஆயத்தமாக்கிவைத்திருப்பதே அவரின் பிரதான பணி. தகப்பன்; வெளியூருக்கு புறப்பட்டு நிற்கும்போது, நானும் வருகிறேன் என்று அவரது இரண்டு பிள்ளைகள் அடம்பிடிக்குமானால், அதைக்கேட்டு அவரும் சரி புறப்படுங்கள் என்று சொல்வாரென்றால், ஆடைகளை ஆயத்தமாய் துவைத்து வைத்திருந்த மகன் ஓடிப்போய் உடனே அவைகளை அணிந்து ஆயத்தமாகிவிடுவான், ஆனால், அழுக்கான ஆடைகளையே உடைய மகன் என்ன செய்வான், அப்பா எனக்கு சட்டை துவைக்கவேண்டும் என்று சொல்லுவான். அவன் சட்டையைத் துவைக்கும் வர அவனது தகப்பன் காத்திருப்பாரோ? ஆயத்தமாக உள்ள தனது மற்ற மகனுடன் புறப்பட்டுச் சென்றுவிடுவாரல்லவா. இதைப்போலவே, ஆயத்தமில்லாத அநேக ஊழியர்களின் வாய்ப்புகளும் வழுவிப்போய்விடுகின்றன.
தலைவர்களுக்கு ஏற்ற படிப்பினையைத் தரும் மற்றுமொரு உவமையையும் நாம் வேதத்தில் காணலாம். தாலந்துகளை, வரங்களை தேவனிடத்திலிருந்து வாங்கும்போது எல்லோரும் தாழ்மையோடுகூடவே காணப்படுகின்றோம். ஆனால் அந்தத் தாழ்மை நமது ஊழியத்தின் கடைசிவரை நம்மோடு கூட பயணிக்கவேண்டியதும் அவசியமான ஒன்று. தேவனிடத்திலிருந்து அதிமாய் வாங்குகிறவன் எவனும் அவருக்கு அதிகம் கணக்கு கொடுக்கவேண்டும். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகின்றதோ, அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும். இது தேவன் வகுத்து வைத்த சூத்திரம். இதை அவர் மாற்றுபவரல்ல. ஒவ்வொருவருடைய திறமைகளுக்குத் தக்கதாகவே (அவன் செய்யக்கூடிய அளவிற்கே) தேவன் ஊழியத்திற்கு தேவையான தாலந்துகளை கொடுக்கின்றார். இவ்விஷயத்தில் அதிகமாய் பெற்றவன் தன்னைக்குறித்து மேன்மை பாராட்டிக்கொள்வதோ, அல்லது குறைவாகப் பெற்றவன் தன்னை தாழ்ந்த எண்ணத்தோடு காண்பதோ தேவையில்லாதது. எந்த வரத்தைக் காட்டிலும் எந்த வரமும் சிறியதும் அல்ல பெரியதும் அல்ல. தேவன் ஒவ்வொருவனிடத்தில் எவ்வளவு கொடுத்தாரோ அதற்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால், அதையே தேவன் விரும்புகின்றார். தன்னிடத்தில் கொடுக்கப்பட்ட காரியத்தை முழுமையாக செய்துமுடிக்கவேண்டிய பொறுப்பு தலைவனுக்கு உண்டு.
தன்னிடத்தில் எத்தனையோ ஊழியக்காரர்கள் காணப்பட்டாலும், மூன்று பேரிடத்தில் மாத்திரமே எஜமான் தனது தாலந்துகளை ஒப்படைப்பதை நாம் காணலாம். அங்கு காணப்பட்ட மற்ற ஊழியர்களைக் காட்டிலும் இந்த மூன்று பேரும் தாலந்துகளைப் பெரும் அளவிற்கு தகுதியோடேயே எஜமானின் பார்வையில் காணப்பட்டனர். அவர்களுக்கு தாலந்துகள் கொடுக்கப்படுவதை மற்ற அநேக ஊழியக்காரர்களின் கண்கள் கண்டிருக்குமே. அப்படியிருக்க தாலந்துகளை பெற்றவர்கள் எத்தனை விழிப்புடன் இருக்கவேண்டும். தாலந்து வாங்கும்போது தன்னை தகுதியுள்ளவனாகக் காட்டிக்கொண்ட ஒரு ஊழியன், அதை வாங்கிய பின்பு புதைத்துவைத்துவிட்டான். இது எத்தனை வேதனைக்குரிய காரியம். ஊழியத்தின் பாதையில் இருக்கும் தலைவர்கள் இதனை தங்கள் மனதில் வைத்தவர்களாகச் செயல்படுவது அவசியம். மற்ற ஊழியர்களெல்லாம் தாங்கள் பெற்றுக்கொண்டதினால் சம்பாதித்தவைகளை அவரிடம் ஒப்படைத்துக்கொண்டிருக்கும்போது, இவனோ, பயத்தினால் நடுங்கிக்கொண்டிருக்கின்றான். அவரிடம் 'இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்' என்று சொல்லுகின்றான். அதை முதலாவது அவர் தரும்போதே செய்திருக்கலாமே, தன்னிடம் இத்தனை நாட்கள் வைத்து பின்பு கொடுக்கவேண்டிய அவசியம் ஏனோ? தாலந்துகளைப் பெற்றிருந்தாலும், அதை அவன் பயன்படுத்தாததினால் தண்டனைக்குரியவனாக மாறிவிட்டான். தாலந்துகளை பெறாத ஊழியர்கள் கூட எஜமானின் தோட்டத்தில் நிம்மதியாக வேலை செய்துகொண்டிருந்திருப்பார்கள். ஆனால், மற்றவர்கள் கண்கள் காண எஜமானிடம் தாலந்துகளை வாங்கிய இவனுக்கோ கிடைத்தது நரகம். அவனை செயல்படவிடாமல் தடுத்தது, எஜமானைக்குறித்த சரியான அறிவில்லாமையே. 'அவர் கடினமானவர்' என்றே எஜமானைக்குறித்து அவனது மனம் சாட்சிசொல்லிக்கொண்டிருந்தது. அவரைக் கண்டவுடன் 'ஆண்டவரே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன்' என்று எல்லார் முன்னிலையிலும் சொல்லுகின்றான். அவனது கூற்றில் எத்தனை தவறு? தேவன் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரா? இல்லையே, அவர் எங்கே தனது வசனத்தை விதைக்கின்றாரோ அங்கேயே விளைச்சலை எதிர்ப்பார்க்கின்றார்.. அந்த ஊழியனை செயல்படவிடாமல் தடுத்தது, அவரைக்குரித்த சரியான அறிவில்லாமையே. கொடுத்ததைக் கேட்டால் அவர் கடினமான மனுஷனா? இது எப்படி நியாயமாகும்?
தலைவனின் அருமை பொறுமையிலேயே - 11
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 11
தலைவனின் அருமை
பொறுமையிலேயே
தலைமைத்துவத்தில் பயணத்தில் முக்கியமானது தேவஞானம் மாத்திரமல்ல, தேவகுணமுமே. கிறிஸ்துவுடனேகூட தன்னை சிலுவையில் அறைந்துகொள்ளாத தலைவர்களின் தலைமைத்துவம் அநேகரை சிலுவையில் அறைந்துவிடும். எதிரிகள் மனந்திரும்பவேண்டும் என்ன சிந்தைக்கு பதிலாக, எதிரிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற பண்பே உயர்ந்துநிற்கும். இன்றைக்கும் தங்களை எதிர்க்கும் மக்கள் கிறிஸ்துவண்டை வருவதற்காக ஜெபிக்காமல், அவர்கள் அழிந்துபோகவேண்டும் என்கிற மனப்பாங்குடனே ஜெபிக்கும் தலைவர்கள் உண்டே. இது கிறிஸ்துவின் சிந்தையல்லவே. அவர் சிலுவையின் மரணபரியந்தமும் தன்னைத் தானே தாழ்த்தினார் என்றே வேதத்தில் காண்கிறோம். தன்னை காட்டிக்கொடுக்கும்படியாக வந்த தன்னுடைய சீஷனாகிய யூதாஸ் காரியோத்தைப் பார்த்ததும் கெத்சமனேயில் கூட கிறிஸ்துவுக்கு மனதுருக்கம் வந்ததே, அவனை சிநேகிதனே என்றே அழைத்தது உயர்ந்து நிற்கும் கிறிஸ்துவின் தலைமைத்துவத்திற்கு எத்தனை ஆணித்தரமான சான்று. சிலுவையில் அவர் தொங்கிக்கொண்டிருக்கும்போது கூட தன்னை அறைந்தவர்களுக்கும், தனக்கு விரோதமாய் கூச்சலிடும் மக்களுக்கும் விரோதமாக அவரது மனம் மாறவில்லையே. எத்தனை பொறுமை இயேசுவின் தலைமைத்துவத்தில்.
எலிசாவின் வாழ்க்கையில் அவனிடத்தில் பொறுமையில்லாததினால், எத்தனை சிறுபிள்ளைகளின் இறப்புக்கு அவன் காரணமாகிவிட்டான். தன்னை கேலி செய்யும் மக்களைக்கூட பொறுத்துக்கொள்ளாத எலிசாவின் தலைமைத்துவம் குறைவான அளவுடையதே. பொறுமையில்லாதவன் தலைவனாக உருவாக இயலாது. பொறுமையில்லாத தலைவனால் பாடுகளை சகிக்க முடியாது, அவைகளைக் கண்டு விலகியோடவே அவன் விரும்புவான். பொறுமையில்லாத தேவ ஊழியனின் மனம் தன்னை விரோதிக்கிறவர்களின் அழிவில் சந்தோஷப்படும். இயேசு சுவிசேஷத்தை பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது, அவரில் எத்தனை பொறுமை காணப்பட்டது. சீஷர்கள் ஆண்டவரே எலியா வானத்திலிருந்துஅக்கினியை இறக்கி அழித்தது போல இவர்களை நாம் அழித்துவிடலாமா என்று இயேசுவிடம் கேட்டபோது, இயேசுவின் பதில் என்னவாயிருந்தது. நீங்கள் இன்ன ஆவியுடையவர்கள் என்பதை அறியீர்களா என்பதே. அது என்ன பொறுமையில்லாத ஆவி. தலைவனுக்கும், ஊழியனுக்கும் பொறுமை மாத்திரமல்ல நீடிய பொறுமையே தேவை. சுவிசேஷத்திற்கு செவிகொடுக்காத கிராமங்களில் உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வெளியேறுங்கள் என்ற வசனத்தையே சிலர் பிடித்துக்கொண்டு, அந்த முழு கிராமத்தையும் வெறுத்துவிடுகின்றனர். அவர்கள் சுவிசேஷத்திற்கு பாத்திரர்கள் அல்ல என்பது அவர்களது எண்ணம். இதன் இரகசியம் அவர்களுக்குள் காணப்படாத பொறுமையே. பவுல் எருசலேமிற்குள் சென்று பிரசங்கித்து அவர்களால் அடித்து உதைக்கப்பட்டபோதும் கூட, மீண்டும் அந்தப்பட்டணத்திற்குள் எழுந்துபோனானே. இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, அவருக்கு சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே வேதத்தில் நாம் காண்கிறோம். தன்னை ஏற்றுக்கொள்ளாததினால், அவர் திரும்பி பரலோகம் போயிருந்தால் இவ்வுலகத்தின் நிலை என்ன. மனந்திரும்பாத மக்களோடும், மனிதனோடும் பலமுறை பேசி தனது அன்பை எப்படியாகினும் அறிந்துகொள்ளும்வரை காத்திருப்பதுதானே தலைவனது குணமாருக்கவேண்டும். ஒரு வாலிபனை சந்தித்து சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அவன் சுவிசேஷத்திற்கு விரோதமான மனப்பாங்குடன் பேசி, பல கேள்விகளை கேட்டு நம்மை கேலி செய்யும் நிலைக்கு காணப்படுவானென்றால் உடனே நாம் அவனிடம் மறுமுறை பேச விரும்புவதில்லையே. அத்தோடு கூட நாம் நின்றுவிடாமல் இவன் நிச்சயம் திருந்தவே மாட்டான் என்ற முத்திரையும் குத்திவிடுவோம். அவனுக்காக பாரங்கொள்ளாமல், ஜெபிக்காமல் அவனிடமிருந்து அழகாக ஒதுங்கிவிடுவது தலைமைத்துவத்திற்கு அழகல்ல. இது எத்தனை புத்தியீனம், அப்படிப்பட்ட வாலிபனிடம் பேசுமளவிற்கு நம்மிடத்தில் பொறுமையில்லையே. பொறுமையில்லாத மனிதர்களின் தலைமைத்துவம் ஆத்துமாக்களை பின்பற்றியிருக்காது. ஆத்துமாக்கள் தன்னைப் பின்பற்றவேண்டும் என்றே அவர்களது மனம் ஆசிக்கும். இயேசுவின் தலைமைத்துவம் ஆத்துமாக்களை தேடிச் செல்லதாகவேயிருந்தது.
பொறுமையில்லாத ஊழியர்களின் ஊழியத்தில் அவசரம் அதிகமாகக் காணப்படும். கனிகள் ஏதும் கிடைக்கவில்லை என்றால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற நிலை அவர்களில் உருவாகிவிடும். தோட்டக்காரர்களாகிய நாம் அநேக வேளைகளில் எஜமானனே இந்த மரம் இன்னமும் கனிகொடுக்கவில்லை, வீணாக நின்று நிலத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது இதை நாம் வெட்டிவிடலாமா என்றே கேட்டுக்கொண்டிருக்கின்றோம், ஆனால் எஜமானனாகிய தேவனின் பதில் என்ன இந்த மரம் இந்தவருடமும் இருக்கட்டும் என்பதே. இது அவர் ஆத்துமாக்களின் மேல் வைத்திருக்கின்ற மனதுருக்கத்தோடு கூடிய பொறுமையையே காண்பிக்கின்றது. வருகிறேன் என்று சொல்லிப்போன இயேசு இன்னமும் ஏன் தாமதிக்கின்றார் என்று நாம் கருதுவோமானால் அதற்கும் பதில் அவரது பொறுமையே. எல்லாரும் மனந்திதிரும்பவேண்டும் என்று அவர் நீடியபொறுமையோடு இருக்கின்றார். மனந்திரும்பிய மக்களின் ஆசை இயேசு உடனே வரவேண்டும் என்பதே. இப்படிப்பட்ட ஆசையோடு இருக்கும் மக்களுக்கு அந்த வருகையில் எடுத்துக்கொள்ளப்படமுடியாத நிலையில் இருக்கும் எண்ணற்ற கோடிக்கணக்கான ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எப்படியிருக்கும். பொறுமையுள்ள மக்கள் ஆண்டவரே உமது வருகை தாமதிக்கட்டும், இன்னமும் உமது வசனத்தை அறியாத ஜனங்கள் மத்தியில் பணிசெய்ய காலம் தாரும் என்றே ஜெபிப்பார்கள்.
இந்த உலகத்தில் ஊழியம் செய்து இரத்தசாட்சிகளாக மரித்த மக்களிடம் கூட பொறுமை காணப்படவில்லை என்பதை வெளிப்படுத்தலில் நாம் காணமுடியும். மறுமைக்குள் அவர்கள் பிரவேசித்தபின்பும், தங்களை கொன்ற மக்களை பழிவாங்கவேண்டும் என்றே அவர்களது மனது துடித்தது. அவர்களும் பரலோகம் வரவேண்டும் என்கிற விருப்பம் அவர்களில் இல்லையே. அவர்களின் கேள்விக்கு பதில் காத்திருங்கள் என்பதே. கிறிஸ்து இயேசுவில்; இருந்த சிந்தையே நம்முடைய தலைமைத்துவத்திலும் காணப்படவேண்டும். பூமியிலுள்ள ஆத்துமாக்களை அழிக்க அல்ல அவர்களை அழியாமைக்குள் பிரவேசிக்கச் செய்கின்ற பணியே ஊழியர்களின் பணி.
ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தையும் அவனுக்கு திருப்பிக்கொடு, ஒரு மைல் தூரம் ஒருவன் உன்னை பலவந்தம் பண்ணினால் அவனோடு கூட ஏழு மைல் தூரம் போ, உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு என்பது இயேசு சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தது தலைமைத்துவத்தில் எத்தனை உயர்ந்த சத்தியங்கள். தோழர்களோடு அல்லது நண்பர்களோடு பயணிக்க எல்லோருமே விரும்புவர், ஆனால், ஒரு மனிதன் தலைமைத்துவத்திற்கு தன்னை தயாராக்கிக்கொள்ள வேண்டுமென்றால் அவன் சத்துருக்களோடு பயணிக்க தயங்காதவனாக இருக்கவேண்டும். தன்னை துன்பப்படுத்தும் மக்கள் துன்பப்படவேண்டுமென்று விரும்புவோர் தலைமைப் பதவிக்கு தகுதியில்லாதவர்களே. இயேசு தன்னை துன்பப்படுத்தின மக்களோடு கூட எவ்வளவு பொறுமையோடுகூட நடந்துசென்றார். கெத்சமனேயில் துவங்கிய அவரது பயணம் கொல்கதா வரை எத்தனை பொறுமை நிறைந்ததாயிருந்தது. அவர் பாடுபடும்போது, பதிலுக்கு வையாமலிருந்தார், அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவில்லை, மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் காணப்பட்டார் என்றே இயேசுவின் கல்வாரி பயணத்தை வேதம் சித்தரிக்கின்றது. 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்ற ஜெபம் தலைவர்களாயிருக்கின்ற ஒவ்வொருவருடைய வாயிலுமிருந்து வரவேண்டியது.
எலியாவின் வாழ்க்கையிலும் பொறுமையில்லாதிருந்ததை நாம் காணமுடியும். தனது ஊழியத்தின் பாதையில் அவர் சோர்வடைந்ததோடு, அவன் பொறுமையில்லாதவனாகவும் காணப்பட்டான். தேவனது கட்டளைகள் அவனுக்கு கடினமாகத் தோன்றத் தொடங்கியது. தேவன் பேசுவதைக் கவனிக்கக்கூட மனதில்லாதவனாய், தனது எதிர்கால ஊழியத்தைப் பற்றி சற்றேனும் கரிசனையில்லாதவனாய் தேவனை நோக்கி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லத் தொடங்கிவிட்டான். எலியாவைக்கொண்டு தேவன் செய்யவிரும்பிய பணிகள் இன்னும் தேவனது திட்டத்தில் அதிகமுண்டு, எனினும் பொறுமையில்லாததினால் தனது ஊழியத்தை பாதியிலேயே முடித்துக்கொள்ள எலியா தாயாராகிவிட்டான். தேவன் தன்னை அழைத்த அழைப்பின் மேல் அக்கறை காட்டாமல், தனது பயணத்தின் தூரத்தையும் அவன் உணராமல், அவனுக்கு பெலன் கொடுக்க தேவன் பலமுறை முயற்சி செய்தபோதும் கூட அதை அசட்டைபண்ணும் அளவிற்கு எலியா மாறிவிட்டான். அவனது ஜெபமெல்லாம் 'நான் ஒருவன் மாத்திரமே இருக்கிறேன் என்னையும் எடுத்துக்கொள்ளும்' மனிதர்களால் நான் சாகுமுன் என்னை நீர் எடுத்துக்கொள்ளும் என்பதுதான் எலியாவின் ஜெபமாயிருந்தது. ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்ட எலியா மனிதர்களின் கைகளினால் மரிக்க ஆயத்தமாயில்லை. தேவனது கையினால் அவன் மரிக்கவேண்டும் என்ற எண்ணமே அவனது மனதில் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட எண்ணமுடைய தலைவர்கள் பாடுகளைக் கண்டவுடன் பறந்துவிடுவார்கள். ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, மனிதர்களால் பாடுபடுவதை அவர் உதறித்தள்ளினாரோ? இல்லையே. தன்னை அடிக்கிறவர்கள் தன்னை பாவத்தின் பலியாய் மாற்றுமளவிற்கு எவ்வளவாய் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்தார். எலியாவின் மனதில் நான் மனிதர்களின் கைகளினால் மரிக்கக்கூடாது என்ற விபரீதமான, தலைவனுக்கு ஒவ்வாத சிந்தனை புதைந்திருந்தது. இப்படிப்பட்ட மனதுடைய தலைவர்கள் ஆடுகளுக்காக எப்படி தனது ஜீவனைக் கொடுப்பார்கள். ஆடுகள் என்னவானாலும் பரவாயில்லை நான் பிழைத்தால் போதும் என்று எப்போதும் தனது ஜீவனைக்குறித்தே அக்கறையுள்ளவர்களாகக் காணப்படுவார்கள். ஸ்தேவான் மனிதர்களால் கல்லெறியுண்டு மரிப்பதை தெரிந்துகொண்டானே. அவனது முகத்தில் மரணவேளையில் பாடுகளைக்குறித்த எவ்வித பயங்களும் காணப்படவில்லையே. பவுல் எருசலேமிற்குச் சென்றபோது, பாடுகளைக்குறித்து பயப்பட்டானோ? இல்லையே. பாடுகளைக்குறித்தும், தனது மரணத்தைக்குறித்தும் எப்போதும் பயந்துகொண்டிருக்கும் ஒரு தலைவனால் எப்படி ஆத்துமாக்ளை காப்பாற்றும் ஊழியத்தைச் செய்யமுடியும். பாவத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்துமாக்களுக்காக தன் ஜீவனையே பலியாகவும், பணயமாகவும் வைக்க இப்படிப்பட்ட தலைவர்கள் எப்படி முன்வருவார்கள்? கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்ற பவுலின் வார்த்தைகள் நம்முடைய மனதிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கவேண்டும். சத்தமிட்டு பிரசங்கிக்கும் தலைவர்கள் இரத்தசாட்சிகளாகவும் மரிக்க தயாராயிருக்கவேண்டும். ஆடுகளுக்காக முதலில் ஜீவனை விடவேண்டியது மேய்ப்பனே. ஆடுகளை தனது ஜீவனுக்காக பலிகொடுக்கலாமா? தனது ஜீவனை காப்பாற்றவேண்டும் என்ற மனதுடைய தலைவன், தன் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட அத்தனை ஆடுகளையும், தனது ஜீவனுக்காக பலிகொடுத்துவிடுவான். தன்னைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமுடைய தலைவர்களால் வருகின்ற விபத்துக்களில் இதுவும் ஒன்று. தனது ஜீவனைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமுடைய தலைவர்களின் வாழ்க்கையில் பொறுமை என்பது அரிதானதே.
எலியா தனது ஓட்டத்தில் சோர்ந்துபோனவனாய், தேவனை நோக்கி என்னை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபித்தபோது. தேவன் அவனை உடனே அவனது ஜெபத்தைக்கேட்டு எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக அவனை எப்படியாகிலும் பெலப்படுத்தவேண்டும் என்றே எண்ணினார். தேவனுக்காக பயங்கரமான காரியங்களைச் செய்தாலும், இப்போது சோர்வின் உச்சியில் சூரைச்செடியின் அடியில் எலியா வந்து உறங்கிக்கொண்டிருக்கிறான். உறங்கியதோடு மாத்திரமல்ல அவன் சாப்பிடவுமில்லை, ஆண்டவரே என்னை எடுத்துக்கொள்ளும் என்று உண்ணாவிரதமே இருந்தான். சாகவேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்த, எலியா சாகத்தொடங்கிவிட்டான். தனது உணவை உதறிவிட்டானே. இப்படிப்பட்ட நேரத்திலும் தேவன் அவனை பெலப்படுத்த தனது தூதனை அனுப்பி அடையையும், தண்ணீரையும் அவனுக்குக் கொடுத்தார். அழைப்பை இழந்த எலியாவின் வாழ்க்கையில் அவசரம் வந்து ஒட்டிக்கொண்டது. தேவன் எதைச் சொன்னாலும் செய்வதற்கு அவன் ஆயத்தமாயில்லை. எனவேதான் தேவ பெலத்தையே அவன் அவமதித்துவிடுகின்றான். தூதன் கொடுத்த அடையையும், தண்ணீரையும் சாப்பிட்ட பின்பு எலியாவுக்கு தூக்கம் எப்படித்தான் வந்ததோ? தெரியவில்லை. இரண்டாம் முறையும் தூதன் வந்து எலியாவை தட்டி எழுப்பி 'போஜனம் பண்ணு, நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்' என்று சொன்னபோது அதை புசித்து நாற்பது நாட்கள் நடந்துசென்று பின்பு ஒரு கெபிக்குள் சென்று தங்கிவிட்டான். மீண்டும் கர்த்தர் அவனோடு கூட இடைபட்டு 'எலியாவே இங்கு உனக்கு என்ன காரியம்' என்று கேட்டபோதும் பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறான். தேவனது பெலனை அவமதித்துவிட்டான், தன்னை அழைத்த அழைப்பை மறந்துவிட்டான், தேவனது வற்புறுத்தலுக்கு அவனது மனம் வளைந்துகொடுக்கவில்லை. தான் சாகவேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே தேவனோடு பேசிக்கொண்டிருக்கிறான். இறுதிவரையில் அவனோடு போராடியும் அவன் மாறாத பட்சத்திலேயே தேவன் அவனை எடுத்துக்கொள்ள சித்தமானார். என்றாலும், எலியாவை அவர் எடுத்துக்கொள்ளும் முன்பாக மூன்று காரியங்ளைச் செய்யும்படிக்கு தேவன் அவனுக்கு ஆணையிட்டார். ஆனால், இந்த காரியத்திலும் எலியாவின் பொறுமை காணப்படவில்லை, அவசரமே காணப்பட்டது. ஆசகேலை சீரியாவின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணு, யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணு, எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு என்று மூன்று காரியங்களை கர்த்தர் செய்யும்படி அவனுக்குக் கட்டளை கொடுத்தபோதும். அவன் அதையும் செய்ய ஆயத்தமாயில்லை. தேவனது கட்டளைகளையே நிராகரிக்கும் மனம் எலியாவினிடத்தில் வந்துவிட்டது. என்னுடைய ஊழியத்தை நான் முடிக்கவேண்டும் என்ற எண்ணம் எலியாவின் மனதில் நிறைந்திருந்ததினால், தேவன் முதலில் சொன்ன இரண்டு காரியங்களின்மேல் அவன் அக்கரை காட்டாமல், முதன்முதல் எலிசாவை தனது ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணிவிட்டான். என்னை விட்டால் போதும் என்பதையே இது வெளிக்காட்டுகின்றது. ஆகாப் ராஜாவின் மனந்திரும்புதலை காணும் பாக்கியம் எலியாவுக்குக் கிடைத்தபோதிலும். யேசபேலின் மரணத்தை அவன் கண்கள் காணவில்லை. 'உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய்' (சங்கீதம் 91:7-8) என்ற வசனங்கள் எலியாவின் வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு அவன் வழிவிடவில்லை. சத்துருவைக் கண்டு தனது சகாப்தத்தை முடித்துக்கொண்டான். சத்துருவின் முடிவைக் காணுமளவிற்கு அவனிடத்தில் பொறுமை காணப்படவில்லை.
பொறுமையில்லாமை மாத்திரமல்ல அவனது மனதில் பயமும் நிறைந்திருந்தது. தன் பிராணனைக் குறித்த பயம் அவனை ஊழியத்தின் பாதையிலிருந்து பின்னடையச் செய்துவிட்டது. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான் என் நிமித்தம் தனது ஜீவனை இழக்கக்கொடுக்கிறவனோ அதை சுதந்தரித்துக்கொள்வான் என்பது தானே வேதத்தின் இரகசியம். தன் ஜீவனை இழக்க ஆயத்தமாயிரதோர் எப்படி தேவனுக்கென்று உத்தம ஊழியர்களாயிருக்க முடியும். ஊழியத்தின் பாதையில் எல்லாவற்றிலும் தன் ஜீவனைக் காக்கவேண்டும் என்றே அவர்களது மனம் காணப்படும். பிராண பயமுள்ளவனின் பிரசங்கத்தில் பலம் எப்படியிருக்கும். தலைவன் தன் ஜீவனை கொடுக்கிறவனாக இருக்கவேண்டும். நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான் என்றே இயேசு தன்னை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். தலையைக்கொடுக்கும் தலைவர்கள் தேவை. பவுலின் ஊழியத்தில் அவருக்காக கழுத்தைக் கொடுக்கக்கூடிய மக்கள் காணப்பட்டார்களே. அவர்களது கண்களைப் பிடுங்கி கொடுக்கக்கூடுமானால் அதையும் அவர்கள் செய்திருப்பார்கள் என்று பவுல் அவர்களைக்குறித்து எத்தனை உயர்வாகப் பேசுகின்றார்.
மோசே தேவனிடத்திலிருந்து அற்புதங்களைப் பெற்ற பின்னரும் அவன் தேவனது அழைப்பிற்கு ஆயத்தமாயிருக்கவில்லை, 'ஆண்டவரே நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்' என்றே அவன் கூறினான். அதற்கு காரணம் அவனுக்குள் உறைந்திருந்த பிராணபயமே. தான் முன்னே எகிப்திலிருக்கும்போது செய்த காரியங்கள் அவனது மனதுக்குள் எழும்பத் தொடங்கியது. தலைவனுக்குள் காணப்படக்கூடாத குணங்களில் இதுவும் ஒன்று. மோசேக்கு தேவனது அழைப்பு கிடைத்தபோது, தன்னுடைய வாழ்க்கiயில் தான் பழைய நாட்களில் எகிப்தில் இருக்கும்போது செய்த காரியத்தினால், பயம் அவனுக்குள் உருவாகத் தொடங்கியது. என்னைக் கொல்லத் தேடிய அரசனிடத்திற்கே நான் திரும்பிப்போகவேண்டுமா? நான் எங்கே தவறு செய்தேனோ அங்கேயே மீண்டும் செல்வது எப்படி போன்ற அநேக பயத்தின் கேள்விகள் அவனது நெஞ்சத்தை உலுக்கத்தொடங்கியது. உயிரைக்குறித்த பயம் அவனுக்குள் உயர்ந்துநின்றதாலேயே, ஆண்டவரே வேறு யாரையாவது அனுப்பும் என்று சொல்லுகின்றான். கடந்த காலத்தின் காரியங்களை நினைத்துக்கொண்டிருக்கும் மக்கள் தலைவர்களாகத் தயங்குவார்கள். அவர்களது கண்களுக்கு முன்னதாக தேவனது அழைப்பல்ல, தாங்கள் பழைய நாட்களில் செய்த காரியங்களே வந்து நிற்கும். இவர்கள் தலைவர்களாகாமல், தங்கள் ஆவிக்குரிய வாழ்வை சாதாரணமான முறையில் மறைமுகமாகவே வாழ்ந்து முடிக்கவிரும்புவார்கள். இவர்களைச் சுற்றியுள்ள வேலியை உடைத்து தேவனுக்காக வைராக்கியமாக சேவை செய்ய இவர்கள் தயாராகவேண்டுமே.
தனது ஜீவனைக் காக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் மக்களுக்கு பிரியமான பிரசங்கங்களையெ செய்துகொண்டிருப்பார்கள். அவர்களது பிரசங்கத்தில் பாவத்திற்கு விரோதமான வைராக்கியம் காணப்படாது. மக்கள் தனக்கு விரோதமாக மாறிவிடக்கூடாது என்பதே அவர்களது முதற்குறிக்கோளாகக் காணப்படும். தேவனும், வேத வசனமும், பாவத்தின் சம்பளமும் அவர்களது பிரசங்கத்தில் இரண்டாம் நிலையையே பெற்றிருக்கும். இவர்கள் மக்களைப் பிரியப்படுத்தும் ஊழியர்களாயிருப்பார்கள். மனிதர்கள் பார்க்கவேண்டும் என்று பார்வைக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களாக இவர்கள் காணப்படுவார்கள். மனிதர்களைப் பிரியப்படுத்துவோரின் ஊழியங்கள் தேவனை பிரியப்படுத்துவதாய் எப்படி அமையும். நான் தேவனையா மனிதனையா யாரைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேன் நான் மனிதரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் தேவனுடைய ஊழியக்காரன் அல்லவே என்று பவுல் எத்தனை அழகாய் தன்னுடைய ஊழியத்தையும் அதின் இரகசியத்தையும் வர்ணித்திருக்கின்றார். யோபுவையும் அவனது வாழ்க்கையையும் பெருமையாய் பிரசங்கிக்கிற அநேக தலைவர்களின் வாழ்க்கையில் யோபுவைப்போன்ற பொறுமை காணப்படுவதில்லையே.
மோசே ஆடு மேய்த்த பின்னும் அவனது வாழ்க்கையில் பொறுமையின் பரீட்சையில் அவன் வெற்றியடையவில்லையே. தேவனது விரல்களினால் எழுதப்பட்ட பத்து கற்பனைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை மலையிலிருந்து இறங்குகையில் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்த மக்களைக் கண்டவுடன் உடைத்துவிட்டானே. பாவம் செய்தது மக்கள் தானே, அவனது கையிலிருந்த கற்பலகை என்ன செய்தது. மக்களைக் கண்டவுடன் அவனுக்குள் பொங்கியெழுந்த ஆத்திரம் அவனை அத்தனைக் கோபங்கொள்ளும்படி செய்துவிட்டது. மோசேயின் ஊழியப்பாதையில் பொறுமையில்லாத பல இடங்களை நாம் காணமுடியும். கன்மலையைப் பார்த்து பேசு என்று மோசேயிடம் கர்த்தர் சொன்னபோது கூட அவன் அந்நேரத்தில் பொறுமையிழந்தவனாகவே காணப்பட்டான்.
தலைமைத்துவத்தின் பயிற்சி தலைவர்களிடம் பயிற்சி பெறுவதினாலேயே முழுமை பெற்றுவிடுவதில்லை. நாம் தேவனிடமும் பயிற்சி பெறவேண்டிய அவசியம் உண்டு. மோசே பார்வோனிடத்தில் பெற்ற பயிற்சியில் அவன் பொறுமையை கற்கவில்லையே. தலைவர்களாக காணப்படவேண்டிய நபர்களிடம் பொறுமையில்லாதிருந்தால் அவர்களது தலைமைத்துவம் எப்படி காணப்படும்? எந்த ஒரு காரியத்தையும் அலசிஆராயும் மனப்பாங்கு அவர்களிடம் இருக்காது. ஊழியத்தில் சந்திக்கும் பல கடினமான சூழ்நிலைகளை கடப்பதற்கு பொறுமையில்லாதோரின் மனம் கடினப்படும். ஏன் இந்த தலைமைத்துவத்திற்கு வந்தோம்? என அவர்களது மனம் புழுங்கத் துவங்கும். தலைமைத்துவத்தைக் குறித்த வெறுப்பு அவர்களது நெஞ்சில் உருவாகத்துவங்கும். அத்தோடு தலைமைத்துவம் ஒரு கடினமான நுகமாகவும் அவர்களது கண்களுக்குத் தென்படும். தன்னைப் பின்பற்றிவரும் திரளான மக்களைக் கூட மறந்துவிட்டு, ஆண்டவரே என்னை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபம் இப்படிப்பட்டவர்களின் வாயில் நுழைந்துவிடும். எலியாவும் தேவனிடம் தனது கடினமான சூழ்நிலையில் இப்படியே ஜெபித்தான். பார்வோனிடம் எல்லா வித்தைகளிலும் பயிற்சிபெற்றிருந்தும் மோசேயினிடம் பொறுமை காணப்படாததினாலேயே தேவன் அவனை ஆடு மேய்க்கும் படி அனுமதித்தார். அப்படி அவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது, அவன் தேவனால் தலைவனாக அழைக்கப்பட்டதை மோசேக்கு அறிவுறுத்துகிறார்.
தலைவனாக விரும்பும் ஒவ்வொரு மனிதனும் சுவிசேஷத்தினால் அழைக்கப்பட்டவனாக இருக்கவேண்டும். தேவனாலோ, தேவனது வார்த்தைகளினாலோ அல்லது தேவ வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் ஊழியர்களினாலோ ஆழமான அர்ப்பணிப்போடு கூடிய அழைப்பு தலைவராவோரின் மனதில் ஆழ்ந்திருக்கவேண்டும். தலைமைத்துவத்திற்கென்று தன்னை அர்ப்பணிப்பதைக் காட்டிலும் தேவனுக்கென்று தன்னை அர்ப்பணிக்கும் தலைவர்களே இன்றயே தேவை. தலைமைத்துவ பயிற்சி முகாம்களோ, ஊழிய பயிற்சி ஸ்தாபனங்களோ தலைமைத்துவத்தின் பயிற்சியை கற்றுக்கொடுக்கலாமே தவிற தலைவர்களாக அவர்களை உருவாக்குவதற்கு உத்திரவாதமளிக்க இயலாது. எங்கு எப்படிப்பட்ட பயிற்சி பெற்றாலும், அவனை தலைவனாக முழுமைப்படுத்துவது தேவனே.
நல்ல மேய்ப்பன் -10
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 10
நல்ல மேய்ப்பன்
நானே நல்ல மேய்ப்பன். ஆடுகளுக்காகத்
தன் ஜீவனை கொடுக்கிறான்.
யோவான் 10:11
நமக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்திலும் மற்றும் ஜனத்தின் மீதும் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம்; நம்முடைய குணங்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது என்பதை சற்று ஆராய்ந்து அறிந்திருந்தால் நமது தலைமைத்துவம் மேலும் வலுப்படும். எதற்காக நாம் அழைக்கப்பட்டோம்? எத்திட்டத்தைச் செய்துமுடிக்க நாம் உடன்பட்டோம்? என்ற தரிசனம் கலந்த உணர்வு நமது ஊழியத்தின் ஒவ்வொரு துடிப்புகளிலும் வெளிப்படவேண்டும். எனவே பவுல், 'ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை' (2பேதுரு 1:10) என்று எழுதுகின்றார். மேலும் 'அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்வேண்டும்' (எபேசியர் 4:1) என்றும் பவுல் எழுதுகின்றார். ஆவிக்குரிய உன்னத நிலையில் ஏறியமர்ந்து, இளைப்படைந்து வீழ்ந்த பல மாந்தர்களின் தடுமாற்றங்களுக்குக் காரணம் அழைப்பை மறந்துபோனதே; இலட்சியத்தை மறந்துவிட்டு இச்சைகளைப் பின்பற்றியதாலேயே பலருடைய தரிசனங்கள் அவர்களால் நிறைவேற்றப்படவில்லை.
நாம் எப்படி இருக்கவேண்டும், எதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இவ்வசனம் (யோவான் 10:11) சற்று வெட்டவெளிச்சமாகவே வெளிக்காட்டுகின்றது. பேதுருவினிடம் இயேசு இதைத்தானே ஞாபகமூட்டினார் (யோவான் 21:15-17). இயேசுவினிடத்தில் அன்பாயிருந்தால், அவரைப் பின்பற்றுவதுடன், ஆடுகளையும் மேய்க்கவேண்டும் என்ற கட்டளையையும் நாம் அறிந்திருக்கவேண்டும். ஆடுகளை மேய்த்தால் மட்டும் போதாது, அதற்காக ஜீவனைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்பது அதனுடன் உயர்ந்ததாய் வேதம் போதிக்கும் சத்தியம். நல்ல போதகரே என்றபோது மறுப்பு தெரிவித்த இயேசு (மத் 19:17) தன்னை நல்ல மேய்ப்பன் என்று அறிமுகப்படுத்துகின்றார்; இதன் வாயிலாக போதித்தலிலும், மேய்த்தல் மேன்மையானது என்பது விளங்குகின்றதல்லவா. மேய்த்தால் மாத்திரம் போதாது, ஜீவனையும்; கொடுக்கவேண்டும் என்ற மற்றொரு குணத்தையும் இணைத்துக் கூறுகின்றார் இயேசு. 'மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்' (யோவா 10:12) என்று வேதம் வர்ணிக்கின்றதே. கூலியாளுக்கு ஆடுகள் சொந்தமல்ல என்பதும், தன்னுயிரையே அவன் காப்பாற்ற அவன் நினைக்கின்றான் என்பதையும் இவ்வசனம் வெளிப்படுத்துகின்றது. மேய்ப்பன்; தன்னைத் தான் வெறுக்கிறவனாக இருக்க வேண்டும் (மாற் 8:34, 35). எனது உலக வாழ்க்கையின் சுகங்களைக் காட்டிலும் எனக்கு கொடுக்கப்பட்ட ஆத்துமாக்கள் முக்கியமானவைகள் எனச் செயல்படுகிறவனாக மேய்ப்பன் வாழ வேண்டும்.
(நம்மை) உன்னை மீட்க இயேசு ஜீவனை விட்டார்; நாம் ஏன் ஜீவனுக்காக அதைக் காப்பாற்ற ஓட வேண்டும். நம்முடைய சரிரத்தை சேதப்படுத்த அல்லது அடிப்பதற்கு மற்றவர்களகுக்கு உரிமை உள்ளது. நம்முடைய ஜீவனை நாம் காக்க வேண்டாம். தலைவனாக இருந்தால் தனக்காகக் கலங்க வேண்டாம். ஜனங்களுக்காக, பாவப்பட்ட மக்களுக்காக கலங்க வேண்டும்.
நம்முடைய மேய்ப்பர் தம்மை முற்றிலுமாய் ஒப்பு கொடுத்தார். எத்தனை அடிகள், எத்தனை துன்பங்கள் யாருக்காக தன் ஆடுகளுக்காக அல்லவா. எனக்காக உனக்காக அல்லவா? சிந்தித்து பார் நாம் எப்படிபட்ட மேய்ப்பனாக இருக்கிறோம். எப்படிப்பட்ட தலைவனாக இருக்கிறோம். பொறுப்பள்ள ஊழியத்துக்கு தலைவனாக அழைக்கப்ட்ட நீ பொறுப்பில்லாமல் எப்படி இருக்க முடிகிறர். எப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாய்.
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ? லூக்கா 15:4
இழந்தவைகளைத் தேடும் சுபாவம் நம்மில் காணப்படவேண்டும். ஏனெனில், 'இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்' என்று இயேசுவைக் குறித்து வேதம் கூறுகின்றதே. இழப்புகளை ஏற்படுத்தும் தலைவர்கள் உண்டு, இழப்புகளைக் குறித்து கவலை கொள்ளாத தலைவர்களும் உண்டு, எனிலும், இழந்தவைகளையும், தப்பிப்போனவைகளையும் தேடிக் கண்டுபிடித்து தொழுவத்தில் சேர்க்கும் மனநிலை நமக்கு வேண்டும். நூறு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று காணமற்போனால் மற்ற 99 ஆடுகளை விட்டுவிட்டு காணாமற் போன ஒன்றை தேடி செல்கின்ற நல்ல மேய்ப்பனே தேவன். ஒன்று போனால் போகுது, மற்றவைகள் இருக்கின்றனவே என்று நினைக்கும் மனிதர்களாயிருந்தால், மந்தை முழுவதும் ஒவ்வொன்றாய் மரித்துத் தீர்ந்தாலும், இறுதியில் 'நான் உயிரோடு இருக்கின்றேனே' என்ற திருப்திக்குள்ளாக அவர்கள் சென்றுவிடுவர்; இது உன்னதருக்கு உகந்ததோ? தலைவன் என்பவன் தனக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் பொறுப்பாக இருக்கிறான். 'நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை' (யோவான் 18:9) என்று இயேசு எத்தனையாய் பிதாவிடம் கூறுகின்றார். தலைவன் தன்னை காக்கிறவனாகவும், தன் ஜீவனைக் காக்கிறவனாகவும் மாத்திரம் இருக்கக் கூடாது. தன் ஆடுகளுக்காகக ஜீவனைக் கொடுக்கிற தலைவனாகவும் நாம் நமது தலைமைத்துவத்தில் உயரவேண்டும்; அதுவே நம்மைக் கிறிஸ்துவின் மேய்க்கும் குணத்தோடு நம்மை இணைத்துக்காட்டும்.
இதோ மாதிரியை உங்களுக்கு காண்பித்தேன் என்ற நம்முடைய தேவன் ஆடுகளுக்கு நல்ல மேய்ப்பனாகவும் மற்றவர் கண்ணீரை துடைக்கிறவராகவும் ஜீவனை கொடுக்கிறவராகவும் தனிப்பட்ட மனிதர்கள் மேல் கரிசனை உடைய தேவனாகவும், மனதுருக்கம் உடையவராகவும் இருந்தார்.
மாதிரியை பின்பற்றுகிறாயா? நல்ல மேய்ப்பனாக இருக்கிறயா? மற்றவர் கண்ணீரை காண்கிறாயா? மனதுருக்கம் உடையவர்களாக இருக்கிறோமா? தேவன் நம்மிடம் இதை எதிர்பார்க்கிறார். மற்றவர்கள் தலைவனிடம் இதை எதிர் பார்க்கிறார்கள்.