தவறுகளை மறைக்கும் தலைவர்கள் - 13

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 13 


தவறுகளை மறைக்கும் தலைவர்கள் 


மோசேயின் செய்த காரியத்தில் புதைந்துள்ள மற்ற காரியங்களையும் நாம் காணத் தவறக்கூடாது. மோசே தன் சகோதரனை அடித்த எகிப்தியனை கொலைசெய்ததோடு மாத்தரமல்லாமல், தான் செய்த அந்த காரியத்தை மறைத்துவிடவேண்டும் என்றும் நினைத்தான். தவறு செய்யத் துணிந்த மோசேயின் மனம் அந்த தவற்றை மறைக்கவும் முனைந்து நின்றது, தவறுகளை மறைப்பது தலைவர்களுக்கு அழகல்லவே. இந்த குணம் காணப்படுமாயின் தலைமைத்துவத்தில் ஒரு தலைவன் நிச்சயம் நிலைத்துநிற்கமுடியாது. பாவஞ் செய்யாத மனிதன் இந்தப் பூமியில் இல்லையே! சாதாரண விசுவாசியாயிருந்தாலும், மிகப்பெரிய தலைவனாக இருந்;தாலும் எதாவது சில விஷயங்களில் தவறுவது மனித இயற்கையே; பாவங்களில் அல்ல. என்றாலும் தான் செய்த காரியம் தவறு என்று தன் மனதே தன்னை வாதிக்கும் போது, அதனைச் சரிப்படுத்த முடியாமல், வெளிமக்களோடும் அதனைக்குறித்து ஆலோசனை கேட்க இயலாமல் அதனை மறைத்துவிடவேண்டும் என்ற மனப்பாங்கே அநேகரிடம் காணப்டுகின்றது. இப்படிப்பட்டோர்  தலைவராயிருப்பது எப்படி? மற்றொரு கூட்டத்தினர், தான் தவறு செய்தாலும், அது வேதத்திற்கு விரோதமானது என்று நன்றாக அறிந்திருந்தும், தன்னைப் பின்பற்றுபவர்களுக்க முன்பாக தன்னுடைய ஆவிக்குரிய எடை குறைந்துபோய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில், அதை எப்படியாவது நியாயப்படுத்தவே முயற்சிசெய்கின்றனர். வேதத்திற்கு ஒத்ததாக தனது செயல்கள் காணப்படாவிட்டாலும், சில வேத வசனங்களையாவது எடுத்துக்காட்டி தனது செயல்களுக்கு வசனங்களை ஒத்துப்போகவைக்கின்றனர். தவறுகளை மறைத்துவிடவேண்டும் என்று ஒரு தலைவன் நினைப்பானாகில் அவனது தலைமைத்துவம் தகுதியுள்ளதாயிராது. தனது பிரசங்கத்தில் குறை காணப்படுமாயின் அதை ஒத்துக்கொள்ள எத்தனை தலைவர்கள் இன்று ஆயத்தம்? ஏதாவது யாராவது அவர்களது பிரசங்கத்தில் சந்தேகங்களைக் கேட்டால், தேவன் பேசினார், அது அப்படித்தான் என்று வாயடைக்கச் செய்துவிடுவார்கள். தேவன் தேவவசனத்திற்கு விரோதமாய் எப்படி பேசுவார். வேதவசனங்களுக்ளு ஒத்துப்போகாத வார்த்தைகளை தேவன் எப்படி பேசுவார். அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல, அந்த ஊழியரின் வாயிலிருந்து வந்த வார்த்தையே. வசனத்தை போதிக்கும் ஊழியரல்ல, வசனமே நமக்கு முக்கியம். ஊழியரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளல்ல, ஊழியரின் வாழ்க்கையும் மக்களிடத்தில் வேதத்திற்கு ஒத்ததாயிருக்கவேண்டியது அவசியம். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத்தேயு 5:15). பவுல் இளம் ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக தான் எழுதிய நிருபத்தில், உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (1தீமோத்தேயு 4:12) என்று எத்தனை அழகாய் எழுதியிருக்கின்றார். மாதிரியாயிருக்க இயலாத தலைவர்கள், தேவன் தங்களிடத்தில் கொடுத்த மந்தைக்கு எப்படி நேர்த்தியான மேய்ப்பர்களாயிருக்க இயலும்.

தவறுகளைச் செய்து சிக்கிக்கொள்வதில் மற்றுமொரு வகையிலும் தலைவர்கள் பிடிபட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மோசே தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த எகிப்தியனைக் கொலை செய்யவில்லை, அந்த எகிப்தியனுக்கும் இவனுக்கும் எந்தவித பகையும் இல்லை. தன் சகோதரனுக்கு உதவினதினாலேயே இந்த பெரும் இன்னலில் மோசே சிக்கிக்கொண்டான். மோசே அந்த மனிதனைக் கொல்லும்போது அங்கு அந்த இஸ்ரவேலனைத் தவிற யாரும் இல்லையே. அப்படியிருக்கையில் மோசேயின் செய்கை எப்படி வெளியே வந்தது? இதை வெளியில் அறிவித்தது யார்? தவறு செய்த மோசே நிச்சயம் தனது தவறை மற்ற யாருக்கும் அறிவித்திருக்கமாட்டான், அப்படி அவன் செய்வதற்கு வாய்ப்பே இல்லலை. இப்படியிருக்க வேறு யாராக இருக்கமுடியும்? நிச்சயமாக மோசே உதவிசெய்த இஸ்ரவேலனாகிய அவனது சகோதரனே. சகோதரனுக்கு உதவி மோசே சங்கடத்தில் மாட்டிக்கொண்டான். மோசே தன் சகோதரன் தனது இந்த செயலை வெளியிலே அறிவிக்கமாட்டான், தெரியப்படுத்தமாட்டான் என்று நினைத்திருப்பான். ஆனால் அவனது நினைவு பொய்த்துவிட்டது. தன் சகோதரனுடைய உயிரைக்குறித்து மோசே கவலைப்பட்டு காப்பாற்றினான், ஆனால், இதை நான் வெளியிலே அறிவித்தால் மோசேயின் உயிருக்கு ஆபத்து வருமே என்று அந்த இஸ்ரவேலனாகிய சகோதரன் கவலைப்படவில்லை. மோசேயின் செயல் இஸ்ரவேல் மனிதர்களிடத்தி;ல் பரவியதோடு மாத்திரமல்லாமல், இஸ்ரவேல் மனிதர்களிடமிருந்து எகிப்தின் மனிதர்களுக்கு பரவி, எகிப்தின் மனிதர்கள் வாயிலாக எகிப்தின் அரண்மனைக்கும் சென்று அரசனின் செவியிலும் ஏறிவிட்டது. 

ஸ்தாபனங்களிலோ அல்லது சபைகளிலோ அல்லது எந்தவிதமான கிறிஸ்தவ ஊழியங்களிலோ தலைவர்களாயிருப்பவர்கள் தங்கள் குடையின் அடியில் இருக்கும் ஒரு சகோதரனின் பார்வையில் செய்யும் தவறுகள், வேதத்திற்கு விரோதமான காரியங்கள் நாளடைவில் அவரது முழு ஐக்கியத்தையும் பாதிக்குமளவிற்கு உருவெடுத்துவிடும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. உடன்படிக்கையோடு தவறுகள் செய்யும் தலைவர்களாகவும் நாம் காணபபடக்கூடாது. நான் செய்த இந்த காரியத்தை சபையில் நீ வெளியிட்டுவிடாதே என்ற தேவையில்லாத உடன்படிக்கை அவசியமில்லை. அப்படிப்பட்ட உடனபடிக்கை ஒன்றை தன் தவறைக் கண்டுவிட்ட சகோதரன் ஒருவனோடு உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் தேவனிடத்திலிருந்தல்ல, சாத்தானிடத்திலிருந்தே வருகின்றது. இப்படிப்பட்ட உடன்படிக்கையினால் கட்டப்பட்டவர்களாயிருக்கும் ஊழியர்கள் உண்டு. கைகள் கட்டப்பட்டவர்கள் எப்படி கட்டிட வேலை செய்யமுடியும். யாரின் முன்னிலையில் அவர் தவறு செய்தாரோ, அல்லது யாருடன் தவறு செய்தாரோ அவரைக் கண்டவுடன் அவருக்கு நிச்சயம் நடுக்கம் உண்டாகுமே. அவரையே நான் முதலில் பிரியப்படுத்தவேண்டும் என்கிற எண்ணமும் சிந்தையும் உண்டாகுமே. அவரை நான் இழந்துவிடக்கூடாது, அவர் என்னைவிட்டு பிரிந்துபோய்விடக்கூடாது, அப்படி அவர் பிரிந்துபோய்விட்டால் நான் அவருடன் அல்லது அவரது முன்னிலையில் செய்த அநேக பாவங்கள் வெளியில் வந்துவிடுமே என்ற அந்த குறிப்பிட்ட நபரைக்குறித்த கவனமும் கரிசனையுமே அதிகமாய் அவருடை வாழ்க்கையில் காணப்படும். தேவனல்ல அந்த குறிப்பிட்ட நபரே இவரை ஆளுகிறவராக காணப்படுவார். தேவனது வார்த்தைக்கல்ல, அந்த நபரின் வார்த்தைக்கே இவர் முதலிடம் கொடுக்கும் தலைவராக மாறிப்போய்விடுவார். சபையில் அல்லது ஸ்தாபனத்தில் உயர்ந்த, நல்ல பொருப்பான பதவியைக் கொடுத்து அவரை அதிகம் கவனிக்கின்றவராக அந்த தலைவர் மாறிப்போய்விடுவார். இப்படிப்பட்ட தலைவரின் ஆவிக்குரிய வாழ்வும் வர வர நிச்சயம் சரிந்தேபோய்விடும். அந்த நபர் யாரோடு பேசினாலும், இவருக்கு பயம் ஆட்டத்தொடங்கிவிடும். ஏனெனில் தனது பிழைகளை அவர் அவரிடம் பகிரங்கப்படுத்திவிடக்கூடாதே என்பதே. சகோதரர்களின் முன்பாகவோ, அல்லது நெருங்கியிருக்கும் நபர்களிடமோ தவறான செயல்களில் தலைவர்கள் சிக்கிக்கொண்டால் அது அவரது தலைமைத்துவத்தையே அழித்துவிடும். தவறுகளை ஒப்புக்கொள்ளாத தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத்தை இழந்தே நிற்பார்கள் அல்லது தங்களது தலைமைத்துவத்தின் மக்களை பிரிவினைக்குள் நடத்திவிடுவார்கள். தங்களது தவறுகளை தலைவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், மக்கள் முன் தெரியும்படி செய்த தவறான செயல்களை மக்கள் முன்னதாகவே அறிக்கையிட்டு தங்களை சுத்திகரித்துக்கொள்ளத் தவறினால், மக்கள் அப்படிப்பட்ட தலைவர்களை பின்பற்றத் தவறிவிடுவார்கள்.

குடும்ப வாழ்விலும் கூட தலைவர்கள் தலைவர்களாகவே இருக்கவேண்டும், குடும்ப வாழ்வும் தலைமைத்துவத்தை வர்ணிக்கும் நல்ல மாதிரி. ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த  அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? (1தீமோத்தேயு 3:5). தலைவராயிருப்போர்  தங்கள் குடும்ப வாழ்க்கையின் மேல் அக்கரையுள்ளோராயிருக்கவேண்டும். குடும்ப வாழ்வில் செய்யும் தவறுகளும் தலைமைத்துவம் கவிழ்ந்துபோவதற்கும், கறைபட்டுப்போவதற்கும் வழிவகுத்துவிடும். மனைவியோடுகூட சரியான உறவு இல்லாத ஒரு மனிதன் தனது மனைவி அமர்ந்திருக்கும் சபையில் எப்படி உறக்க பிரசங்கிக்கமுடியும். தனது தவறுகளை அறிந்த மனைவி அங்கே அமர்ந்திருக்கிறாளே. தான் எத்தனை மணிக்கு எழுப்புகிறேன்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கின்றேன்? யாரோடு எப்படிப்பட்ட உறவு வைத்திருக்கின்றேன்? பிள்ளைகளோடு எப்படி நேரம் செலவழிக்கின்றேன்? பிள்ளைகளை எப்படி நடத்துகின்றேன்? அவர்களுக்கு எப்படி ஆலோசனை அளிக்கின்றேன்? வீட்டு காரியங்களை நான் எப்படி நடத்துகின்றேன்? பணத்தை எப்படி செலவழிக்கின்றேன்? எனது வரவு எவ்வளவு? ஊழியத்தின் பணத்தை எப்படி பயன்படுத்துகின்றேன்? போன்ற பல காரியங்களை அறிந்த அவரது மனைவி அங்கே செய்தி கேட்க அமர்ந்திருக்கும்போது, அவரது செய்தி தேவனைச் சார்ந்ததாயிருக்குமோ? மனைவியைச் சார்ந்ததாகவே இருக்கும். ஒரு காரியத்தை தேவன் சபைக்கு பேசு என்று அவரை ஏவும்போது, அவரது மனைவி அங்கே அமர்ந்திருந்தால், தேவன் சொல்லுகின்ற குறிப்பிட்ட காரியத்தில் தன்னுடைய வாழ்க்கை மாதிரியாயில்லை என்பதை பிரசங்கியார் அறிந்திருப்பாராயின், ஆண்டவரே சொன்னாலும் இவருக்கு பேச துணிச்சல் வருவதில்லை; அதை அப்படியே மறைத்துவிடுவார்கள். இப்படி மனைவியிருக்கையில் தன்னால் பேச இயலாத தலைப்புகள் என்று அந்த பிரசங்கியாரிடம் ஏராளமானவைகள் இருக்கும். பிரசங்க பீடத்தில் பயமில்லாமலும், குற்ற மனமில்லாமலும் தேவன் அருளும் வார்த்தைகளை தைரியமாய் அறிவிக்க தலைவன் ஒருவன் விரும்புவானென்றால், அவன் நிச்சயம் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் பழுதில்லாதவனாக இருக்கவேண்டும். மனைவியிடம் மாத்திரமல்ல, நெருங்கிய வட்டத்திலுள்ள அத்தனைபேருடனும் தலைவன் ஒருவன் தன்னை எல்லாவிதத்திலும் தலைவனாக அடையாளம் காட்டத்தவறக்கூடாது.


Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3