நல்ல மேய்ப்பன் -10

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 10


 நல்ல மேய்ப்பன்


நானே நல்ல மேய்ப்பன். ஆடுகளுக்காகத் 

தன் ஜீவனை கொடுக்கிறான். 

யோவான் 10:11


நமக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்திலும் மற்றும் ஜனத்தின் மீதும் நாம்  எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம்; நம்முடைய குணங்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது என்பதை சற்று ஆராய்ந்து அறிந்திருந்தால் நமது தலைமைத்துவம் மேலும் வலுப்படும். எதற்காக நாம் அழைக்கப்பட்டோம்? எத்திட்டத்தைச் செய்துமுடிக்க நாம் உடன்பட்டோம்? என்ற தரிசனம் கலந்த உணர்வு நமது ஊழியத்தின் ஒவ்வொரு துடிப்புகளிலும் வெளிப்படவேண்டும். எனவே பவுல், 'ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை' (2பேதுரு 1:10) என்று எழுதுகின்றார். மேலும் 'அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்வேண்டும்' (எபேசியர் 4:1) என்றும் பவுல் எழுதுகின்றார். ஆவிக்குரிய உன்னத நிலையில் ஏறியமர்ந்து, இளைப்படைந்து வீழ்ந்த பல மாந்தர்களின் தடுமாற்றங்களுக்குக் காரணம் அழைப்பை மறந்துபோனதே; இலட்சியத்தை மறந்துவிட்டு இச்சைகளைப் பின்பற்றியதாலேயே பலருடைய தரிசனங்கள் அவர்களால் நிறைவேற்றப்படவில்லை. 

நாம் எப்படி இருக்கவேண்டும், எதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இவ்வசனம் (யோவான் 10:11) சற்று வெட்டவெளிச்சமாகவே வெளிக்காட்டுகின்றது. பேதுருவினிடம் இயேசு இதைத்தானே ஞாபகமூட்டினார் (யோவான் 21:15-17). இயேசுவினிடத்தில் அன்பாயிருந்தால், அவரைப் பின்பற்றுவதுடன், ஆடுகளையும் மேய்க்கவேண்டும் என்ற கட்டளையையும் நாம் அறிந்திருக்கவேண்டும். ஆடுகளை மேய்த்தால் மட்டும் போதாது, அதற்காக ஜீவனைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்பது அதனுடன் உயர்ந்ததாய் வேதம் போதிக்கும் சத்தியம். நல்ல போதகரே என்றபோது மறுப்பு தெரிவித்த இயேசு (மத் 19:17) தன்னை நல்ல மேய்ப்பன் என்று அறிமுகப்படுத்துகின்றார்; இதன் வாயிலாக போதித்தலிலும், மேய்த்தல் மேன்மையானது என்பது விளங்குகின்றதல்லவா. மேய்த்தால் மாத்திரம் போதாது, ஜீவனையும்; கொடுக்கவேண்டும் என்ற மற்றொரு குணத்தையும் இணைத்துக் கூறுகின்றார் இயேசு. 'மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்' (யோவா 10:12) என்று வேதம் வர்ணிக்கின்றதே. கூலியாளுக்கு ஆடுகள் சொந்தமல்ல என்பதும், தன்னுயிரையே அவன் காப்பாற்ற அவன் நினைக்கின்றான் என்பதையும் இவ்வசனம் வெளிப்படுத்துகின்றது. மேய்ப்பன்; தன்னைத் தான் வெறுக்கிறவனாக இருக்க வேண்டும் (மாற் 8:34, 35). எனது உலக வாழ்க்கையின் சுகங்களைக் காட்டிலும் எனக்கு கொடுக்கப்பட்ட ஆத்துமாக்கள் முக்கியமானவைகள் எனச் செயல்படுகிறவனாக மேய்ப்பன் வாழ வேண்டும்.

(நம்மை) உன்னை மீட்க இயேசு ஜீவனை விட்டார்; நாம் ஏன் ஜீவனுக்காக அதைக் காப்பாற்ற ஓட வேண்டும். நம்முடைய சரிரத்தை சேதப்படுத்த அல்லது அடிப்பதற்கு மற்றவர்களகுக்கு உரிமை உள்ளது. நம்முடைய ஜீவனை நாம் காக்க வேண்டாம். தலைவனாக இருந்தால் தனக்காகக் கலங்க வேண்டாம். ஜனங்களுக்காக, பாவப்பட்ட மக்களுக்காக கலங்க வேண்டும்.

நம்முடைய மேய்ப்பர் தம்மை முற்றிலுமாய் ஒப்பு கொடுத்தார். எத்தனை அடிகள், எத்தனை துன்பங்கள் யாருக்காக தன் ஆடுகளுக்காக அல்லவா. எனக்காக உனக்காக அல்லவா? சிந்தித்து பார் நாம் எப்படிபட்ட மேய்ப்பனாக இருக்கிறோம். எப்படிப்பட்ட தலைவனாக இருக்கிறோம். பொறுப்பள்ள ஊழியத்துக்கு தலைவனாக அழைக்கப்ட்ட நீ பொறுப்பில்லாமல் எப்படி இருக்க முடிகிறர். எப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாய்.

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ? லூக்கா 15:4

இழந்தவைகளைத் தேடும் சுபாவம் நம்மில் காணப்படவேண்டும். ஏனெனில், 'இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்' என்று இயேசுவைக் குறித்து வேதம் கூறுகின்றதே. இழப்புகளை ஏற்படுத்தும் தலைவர்கள் உண்டு, இழப்புகளைக் குறித்து கவலை கொள்ளாத தலைவர்களும் உண்டு, எனிலும், இழந்தவைகளையும், தப்பிப்போனவைகளையும் தேடிக் கண்டுபிடித்து தொழுவத்தில் சேர்க்கும் மனநிலை நமக்கு வேண்டும். நூறு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று காணமற்போனால் மற்ற 99 ஆடுகளை விட்டுவிட்டு காணாமற் போன ஒன்றை தேடி செல்கின்ற நல்ல மேய்ப்பனே தேவன். ஒன்று போனால் போகுது, மற்றவைகள் இருக்கின்றனவே என்று நினைக்கும் மனிதர்களாயிருந்தால், மந்தை முழுவதும் ஒவ்வொன்றாய் மரித்துத் தீர்ந்தாலும், இறுதியில் 'நான் உயிரோடு இருக்கின்றேனே' என்ற திருப்திக்குள்ளாக அவர்கள் சென்றுவிடுவர்; இது உன்னதருக்கு உகந்ததோ? தலைவன் என்பவன் தனக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் பொறுப்பாக இருக்கிறான். 'நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை' (யோவான் 18:9) என்று இயேசு எத்தனையாய் பிதாவிடம் கூறுகின்றார். தலைவன் தன்னை காக்கிறவனாகவும், தன் ஜீவனைக் காக்கிறவனாகவும் மாத்திரம் இருக்கக் கூடாது. தன் ஆடுகளுக்காகக ஜீவனைக் கொடுக்கிற தலைவனாகவும் நாம் நமது தலைமைத்துவத்தில் உயரவேண்டும்; அதுவே நம்மைக் கிறிஸ்துவின் மேய்க்கும் குணத்தோடு நம்மை இணைத்துக்காட்டும். 

இதோ மாதிரியை உங்களுக்கு காண்பித்தேன் என்ற நம்முடைய தேவன் ஆடுகளுக்கு நல்ல மேய்ப்பனாகவும் மற்றவர் கண்ணீரை துடைக்கிறவராகவும் ஜீவனை கொடுக்கிறவராகவும் தனிப்பட்ட மனிதர்கள் மேல் கரிசனை உடைய தேவனாகவும், மனதுருக்கம் உடையவராகவும் இருந்தார்.

மாதிரியை பின்பற்றுகிறாயா? நல்ல மேய்ப்பனாக இருக்கிறயா? மற்றவர் கண்ணீரை காண்கிறாயா? மனதுருக்கம் உடையவர்களாக இருக்கிறோமா? தேவன் நம்மிடம் இதை எதிர்பார்க்கிறார். மற்றவர்கள் தலைவனிடம் இதை எதிர் பார்க்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3