பெலனற்ற தலைவர்கள் - 9

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 9


பெலனற்ற தலைவர்கள் 


மோசே தனது முயற்;சியினால் தலைவனாக முற்பட்டபோது, அது அவனது வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்தினைக் கெர்ண்டுவந்தது. தலைவனாக முற்பட்ட அவனுக்குள், தலைமைத்துவத்தின் எதிரியான பயம் புதைந்திருந்ததை அப்போது அவனில் காணமுடிந்தது. தான் செய்த காரியம் பார்வோனுக்கு தெரிந்துவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து என்று அவன் பயப்பட்டான். எதிரியைக் குறித்த பயம் மனதில் நிறைந்திருந்தால், அவன் தலைவனாவது எப்படி? பார்வோனின் கைகளிலிருந்து இஸ்ரவேல் மக்களை விடுவிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவனுக்கு முன்பாக காணப்பட்டபோதும், அவனோ பார்வோனுக்கு பயப்படுகிறவனாகவே காணப்டுகின்றான். 

சவுலின் நிலையும் இப்படியே காணப்பட்டது. பெலிஸ்தியரின் சேனையிலுள்ள கோலியாத் முன்னே வந்து நின்றபோது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தடுமாறுகின்றான். அவன் தலைவனல்ல என்பது எதிரி வந்தவுடன் நிரூபனமாயிற்று. ஜனங்களுக்குத் தலைவன், ஆனால் எதிரியின் முன்னோ தடுமாறுபவன்.  கோலியாத்தின் முன்பாக சவுலின் பயம் அவனை உறையப்பண்ணிவிட்டது. மக்களைக் காப்பாற்றவேண்டிய ராஜா, மக்களுக்காக யுத்தத்தில் போரிடவேண்டியவன் போரிட பெலனின்றி நிற்பது எத்தனை பரிதாபமான நிலை. அதைவிட பரிதாபமான நிலை, அவன் தனது ஆட்சியில் தனக்கு கீழே இருக்கும் மக்களில் தன்னைவிட பெலமான மனிதன் இருக்கின்றானா என்பதை தேடியது. ஆம், ஆவனை விட தேவபெலத்தோடுள்ள தாவீது அவனுக்கு கீழே காணப்பட்டான். தனது ஆட்சியில் தன்னைவிட பெலமுள்ள மனிதன் இருப்பதைக் காண சவுலுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். இன்றும் தலைமைத்துவத்தில் அமர்ந்திருக்கும் அநேகர் தாங்கள் எல்லாரைக்காட்டிலும் பெலனுள்ளவர்கள், தங்களை மிஞ்சி பெலனுள்ள மனிதர்கள் எவருமேயில்லை என்ற தவறான எண்ணத்தில் காணப்படுகின்றனர். தலைமை பீடத்தில் அமர்ந்துள்ள பலர், தங்களைப்போல, பிரசங்கம் செய்யவோ, ஜெபிக்கவோ, பாடல் பாடவோ, ஆராதனை நடத்தவோ, கன்வென்ஷன் கூட்டங்களில் பேசவோ, பிசாசுகளை துரத்தவோ, அற்புதங்களைச் செய்யவோ, ஆத்துமாக்களை ஆதாயம் செய்யவோ யாருமேயில்லை என்று நினைக்கின்றனர். தங்களைவிட பெலம் வாய்ந்தோர் தங்களிடமே காணப்பட்டாலும், அவர்களுக்கு வாய்ப்பளிக்காததாலும், வழிவிடாததாலும் அவர்களை தலைவர்களாகக் காண அவர்கள் கண்கள் தவறிவிட்டன. தலைமைத்துவத்தில் காணப்படும் இப்படிப்பட்;ட தலைவர்கள் அடுத்த தலைவர்களின் சந்ததிக்கு எப்படி வழிவிடுவார்கள். 

சவுல் செய்த அநேக யுத்தத்தில் அவன் தாவீதை அழைக்கவில்லை, தாவீதை தலைவனாகவும் சவுலின் கண்கள் காணவில்லை. தலைவனாக்கப்படவேண்டியவன் ஆட்டுமந்தைகளோடு கூட படுத்திருக்கின்றான். தன்னைவிட பெலமுள்ளவன் எவனுமில்லை என்ற எண்ணத்தில் இருந்த சவுலின் சிந்தனைகளுக்கு முடிவுண்டாக்கும் யுத்தமே கோலியாத்தின் யுத்தம். கோலியாத்தை சவுல் கண்ட மாத்திரத்தில் அவனை எதிர்க்கும் பெலன் தன்னிடம் இல்லை என்ற எண்ணம் உருவானது. யுத்தத்தில் எப்படியாகிலும் வெற்றிபெறவேண்டுமே, எதிரில் நிற்பதோ எதிரி தன்னிடமோ எதிர்க்க பெலனில்லை. அவனது மனம் அவனையே வாதிக்கத் தொடங்குகின்றது. இறுதியில்தான் தனது தோல்வியை அதாவது அவனது இயலாமையை அவன் தனது மக்களிடத்தில் ஒத்துக்கொள்ளுகின்றான். கோலியாத்தை எதிர்த்து போரிட யாராவது உண்டா? என்ற அழைப்பை தனது மக்களுக்கு அவன் விடுத்தான். அந்த அழைப்பின் உள்ளான அர்த்தம், கோலியாத்தை எதிர்க்க என்னிடத்தில் பெலனில்லை என்பதே. இதுவே இராஜாவின் தோல்வி, தலைவனின் தோல்வி, இது தனக்கு மட்டுமல்ல தேவனுக்கும் இழுக்கைக் கொண்டுவந்தது.  தலைவனாகிய சவுல் தடுமாறும்போது, இஸ்ரவேல் சேனை மாத்திரமல்ல பரலோக தேவனின் நாமமும் நித்திக்கப்பட்டது. சவுலின் மனதிலோ என்னைவிட பெலமுள்ளவன் எனது ராஜ்யத்தில் யார் இருக்கக்கூடும்? என்பதே நிறைந்திருந்தது. அப்படி யாராவது வந்து, ராஜாவே உம்மைவிட நான் பெலன் வாய்ந்தவன், உம்மால் கோலியாத்தோடுகூட போராட முடியவில்லையா, விடும் நான் போர் செய்து வீழ்த்துகின்றேன் என்று சொன்னால் இராஜாவின் மனம் எப்படியிருக்கும். எனது ராஜ்யத்தில் இருக்கின்ற நீ என்னைவிட பெலமுள்ளவனா என்கிற ஆத்திரமே முதலில் உள்ளத்தில் எழும்பும். கோலியாத்தோடுகூட யுத்தம் செய்வதற்கு தாவீது வந்தபோது, அவனது பெலனை சவுல் அறியாதபடியினால் உன்னால முடியாது என்று கூறுகிறான். தன்னைப்போலவே தாவீதையும் சவுல் எடைபோடுகின்றான். சவுலின் மனதோ, தாவீது ஜெயிக்கவேண்டும் என்றல்ல கோலியாத் வெற்றிபெறவேண்டும் என்றே இருந்திருக்கும். ஏனெனில், தாவீது வெற்றிபெற்றுவிட்டால் தோல்வி கோலியாத்திற்கு மட்டுமல்ல, தனக்கும் சேர்ந்தே என்பதை சவுல் நன்றாக அறிந்திருந்தான். கோலியாத் கூட தாவீதின் பெலனை அறியவில்லை, அதை  சந்தித்த அடுத்த நொடியே அவன் தரையில் வீழ்ந்துவிட்டான்.

தாவீது போர்முனையிலும் இல்லை, போர்வீரனாகவும் இல்லை தேவபெலமுள்ளவனின் நிலைமையை சற்று பாருங்கள். பெலமுள்ள மனிதனாகிய தாவீது யுத்தத்திற்கே அழைக்கப்படவில்லை, யுத்தத்திற்கு சென்றவர்கள் எல்லாரும் கோலியாத்தை எதிர்க்க பெலனில்லாதவர்கள். இந்நிலையில் பெலமுள்ள தாவீது அவ்விடத்திற்கு வந்தபோது, பெலனில்லாத அவனது உடன்பிறந்த சகோதரர்களே அவனைத் தடுத்தார்கள். தாவீதின் பெலனை அவனது சகோதரர்கள் கூட அறிந்துகொள்ளவில்லை. தலைவர்களாயிருப்போர், எதிரிகளை சந்திக்கவும் தகுதியுள்ளோராயிருக்கவேண்டும், எதிரியை சந்திக்க பெலனில்லாத மனிதர்களுக்கு தலைமைத்துவம் எதற்கு? கிறிஸ்தவ உலகத்தில் ஊழியர்கள், மிஷனெரிகள், பிஷப்கள், போதகர்கள் போன்ற தலைமைத்துவத்தைச் சுட்டிக்காட்டும் பட்டங்களுக்கு குறைவில்லைதான் ஆனாலும், இப்படிப்பட்ட பட்டங்களைப் பெற்றோர் எதிரிகளின் முன் எப்படி நிற்கிறார்கள் என்று அவர்களின் மற்ற பக்கத்தையும் நாம் பார்க்கவேண்டும். எதிரிகளே இல்லாத பாதை வழியாக செல்லவே இன்று பல தலைவர்கள் விரும்புகின்றனர்.

இன்றைக்கும், தலைவர்கள் பலர் தன்னால் இயலாத கடினமான வேலைகளை தன்னிடம் உள்ள மற்றவரிடத்தில் கொடுத்துவிட்டு இலகுவாக தப்பித்துக்கொள்ளுகின்றனர். ஒருவேளை அந்த வேலையை அந்த நபர் எளிதாக செய்துமுடித்துவிட்டால், அதைக்குறித்து அவரை பாராட்டாமல், அது எளிதானதுதானே என்று அந்த நபரை மட்டந்தட்டுவது பல தலைவர்களுக்கு கைவந்தகலை. தான் எதிர்க்கமுடியாத எதிரிகள் இருக்கும் பாதையில் மற்றொருவரை அனுப்பிவிட்டு எதிரிகளில்லாத பாதையில் பயணிக்கும் தலைவர்களின் பாதங்கள் எத்தனை. பிசாசுபிடித்தோரை ஊழியர்களுக்கு முன் கொண்டுவரும்போது, ஒருவேளை அந்த பிசாசு  அவரது ஜெபத்தில் புறப்பட்டுப்போகவில்லையென்றால், அதற்கு அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் அப்பாடா எத்தனை எத்தனை? அதற்குள் ஏராளமான பிசாசுகள் இருக்கின்றது, ஒவ்வொன்றாகத்தான் அவைகளைத் துரத்தமுடியும், அவைகளை துரத்துவதற்கு நீங்கள் இன்ன இன்ன காரியங்களையெல்லாம் செய்யவேண்டும், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும், விக்கிரகங்களை உடைக்கவேண்டும் என்று இவர்கள் இடுகின்ற கட்டளைகள் ஏராளம் ஏராளம். என்னிடத்தி;ல் பெலனில்லை, என்னுடைய ஜெபத்தில் வல்லமையில்லை என்று ஒத்துக்கொள்பவர்கள் எங்கே. அதே நேரத்தில் வேறொரு நபரின் ஜெபத்தினால் அது துரத்தப்படுமாயின் இவர்கள் அதற்கும் பல காரணங்களையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

யுதருக்கு இராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? என்று சாஸ்திரிகள் ஏரோதின் அரண்மனையில் சென்று விசாரித்தபோது, ஏரோதின் மனம் சந்தோஷப்படவில்லை, பிறக்கப்போகின்ற குழைந்தைக்கு எதிரியாகவே மாறியது. தலைவர்களிடம் காணப்படக்கூடாத குணங்களில் இதுவும் ஒன்று. தனது ராஜ்யத்தில் மற்றொரு தலைவன் உருவாவதை அவர்கள் மனம் பொறுத்துக்கொள்ளுவதில்லை. இப்படிப்பட்ட மனதோடு கூடிய போதகர் ஒருவர் இருப்பாரென்றால், அவர் தன்னைவிட நன்றாக வசனத்தை போதிக்கிற யாரும் தனது சபையில் இருக்கக்கூடாது என்றே நினைப்பார். அவர்களது தாலந்துகள் தனது சபையில் வெளிப்பட்டு, தனது ஸ்தானத்தின் மதிப்பிற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், சபையில் அந்த நபருக்கு பிரசங்கிக்க வாய்ப்பளிக்கமாட்டார். அவரை சபையின் காரியங்களில் அதிகம் உற்சாகப்படுத்தவும் மாட்டார். ஜனங்கள் அவர் பக்கம் திரும்பிவிடக்கூடாதே என்ற தவறான மனப்பாங்கே அவரை இந்நிலைக்குத் தள்ளிவிடுகின்றது. தன்னைவிட அதிகமான பெலன் அவரிடத்தில் உண்டு என்று அவருக்கு நன்றாகத் தெரியும், ஆனால், அவரைக் கொண்டு யுத்தம் செய்ய அவர் விரும்புவதில்லை காரணம், அவர் பிரசங்கம் செய்தால் என்னைவிட நன்றாக செய்கிறார் என்று ஜனங்கள் சொல்லுவார்களே, அப்படி ஜனங்கள் சொன்னால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாதே என்ற நினைவே. இப்படிப்பட்ட நினைவோடுகூடிய போதர்கள்  யுத்தத்தில் பெலமில்லாத தங்களது ஆயுதங்களையே பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். பெலமுள்ள மற்றவர்ளைக் குறித்து அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

இதுவே அநேக பிரிவினைகளுக்கு ஆரம்பம். இப்படி வாய்ப்பளிக்கப்படாத பெலமுள்ளவர்கள், தங்கள் பெலனை பயன்படுத்த, அந்த சபையையோ அல்லது ஸ்தாபனத்தையோ விட்டு பிரிந்து சென்றால், ஐக்கியத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால் பிரிந்து சென்றவரை பாவி என்று வர்ணிக்கும் தலைவர்களும் உண்டு. அவர்கள் ஏன் பிரிந்து சென்றார்கள், எனது ஆட்சியில் அவருக்கு என்ன குறை, என்னிடத்தில் உள்ள குணங்களில் எது அவருக்கு விரோதமாயிருந்தது என்று அவர்கள் நினைப்பதில்லை. அப்படி பிரிந்து சென்ற நபர்கள் தனியாய் ஒரு ஊழியம் தொடங்கினாலோ, அல்லது சபையைத் தொடங்கினாலோ இவர்கள் மனம் பொறுத்துக்கொள்வதில்லை. முதலில் அவருக்கு விரோதியாயிருந்தவர், இப்போது அவருடைய ஊழியத்திற்கும் விரோதியாகவே மாறிவிடுவார். அவர்களது ஊழியத்தை ஆதரிக்க இவருக்கு மனமிருக்காது, அவர் செய்கின்ற ஊழியமுறை சரியல்ல என்றே எல்லாரிடமும் அவர் சொல்லத் தொடங்குவார். அவரது குற்றங்களைப் பேசிப் பேசியே இவர் குற்றவாளியாகிவிடுவார். ஏனெனில், அவர் இவரைக் காட்டிலும் பெலனுள்ளவர்,  தங்களிடத்தில் உள்ள குற்றங்களையம், குறைகளையும் அவர்கள் கண்கள் காணாமல் போவதாலேயே இந்த நிலை உருவாகின்றது.

தலைமை பீடத்தில் ராஜாவாக அமர்ந்திருந்த நேபுகாத்நேச்சாரை அவனது பெருமையினிமித்தம் புல் மேயும்படி அனுப்பினார். இராஜாவாகும் தகுதிகள் அத்தனையையும் கொண்டிருந்தும் ஆடுகளோடு தனது வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்த தாவீதை தேவன் தெரிந்தெடுத்து தனது ஜனத்திற்கு தலைவனாக்கினார். 

தங்களது பிழைப்புக்காக தங்களை தலைவர்களாக்கிக்கொள்ளும் கூட்டமும் உண்டு. மற்றவர்களின் வாழ்க்கையை தங்கள் மனதில் கொண்டு அவர்களுக்காக தலைவர்களாகும் கூட்டமும் உண்டு. எது எப்படியாயினும், ஆவிக்குரிய தலைமைத்துவம் என்பது இவ்வுகத்தில் காணப்படும்  அத்தனை தலைமைத்துவத்தைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இவ்வுலகத்தின் வேஷத்தோடு ஒரு மனிதன் தன்னை ஆவிக்குரிய தலைவனாக அடையாளம் காட்ட முற்படுவானென்றால், அவன் தன்னைத் தான் ஏமாற்றிக்கொள்வதோடு, தன்னைப் பின்பற்றும் மக்களையும் ஏமாற்றும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக தன்னைத் தானே தள்ளிக்கொள்ளுகிறான். இவர்களது வாழ்க்கையில் மாய்மாலங்களே நிறைந்திருக்கும். தன்னைப் பின்பற்றிவரும் மக்களைக் குறித்த கரிசனை இவர்களில் காணப்படுவதில்லை.

 

Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3