தலைவனின் அருமை பொறுமையிலேயே - 11
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 11
தலைவனின் அருமை
பொறுமையிலேயே
தலைமைத்துவத்தில் பயணத்தில் முக்கியமானது தேவஞானம் மாத்திரமல்ல, தேவகுணமுமே. கிறிஸ்துவுடனேகூட தன்னை சிலுவையில் அறைந்துகொள்ளாத தலைவர்களின் தலைமைத்துவம் அநேகரை சிலுவையில் அறைந்துவிடும். எதிரிகள் மனந்திரும்பவேண்டும் என்ன சிந்தைக்கு பதிலாக, எதிரிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற பண்பே உயர்ந்துநிற்கும். இன்றைக்கும் தங்களை எதிர்க்கும் மக்கள் கிறிஸ்துவண்டை வருவதற்காக ஜெபிக்காமல், அவர்கள் அழிந்துபோகவேண்டும் என்கிற மனப்பாங்குடனே ஜெபிக்கும் தலைவர்கள் உண்டே. இது கிறிஸ்துவின் சிந்தையல்லவே. அவர் சிலுவையின் மரணபரியந்தமும் தன்னைத் தானே தாழ்த்தினார் என்றே வேதத்தில் காண்கிறோம். தன்னை காட்டிக்கொடுக்கும்படியாக வந்த தன்னுடைய சீஷனாகிய யூதாஸ் காரியோத்தைப் பார்த்ததும் கெத்சமனேயில் கூட கிறிஸ்துவுக்கு மனதுருக்கம் வந்ததே, அவனை சிநேகிதனே என்றே அழைத்தது உயர்ந்து நிற்கும் கிறிஸ்துவின் தலைமைத்துவத்திற்கு எத்தனை ஆணித்தரமான சான்று. சிலுவையில் அவர் தொங்கிக்கொண்டிருக்கும்போது கூட தன்னை அறைந்தவர்களுக்கும், தனக்கு விரோதமாய் கூச்சலிடும் மக்களுக்கும் விரோதமாக அவரது மனம் மாறவில்லையே. எத்தனை பொறுமை இயேசுவின் தலைமைத்துவத்தில்.
எலிசாவின் வாழ்க்கையில் அவனிடத்தில் பொறுமையில்லாததினால், எத்தனை சிறுபிள்ளைகளின் இறப்புக்கு அவன் காரணமாகிவிட்டான். தன்னை கேலி செய்யும் மக்களைக்கூட பொறுத்துக்கொள்ளாத எலிசாவின் தலைமைத்துவம் குறைவான அளவுடையதே. பொறுமையில்லாதவன் தலைவனாக உருவாக இயலாது. பொறுமையில்லாத தலைவனால் பாடுகளை சகிக்க முடியாது, அவைகளைக் கண்டு விலகியோடவே அவன் விரும்புவான். பொறுமையில்லாத தேவ ஊழியனின் மனம் தன்னை விரோதிக்கிறவர்களின் அழிவில் சந்தோஷப்படும். இயேசு சுவிசேஷத்தை பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது, அவரில் எத்தனை பொறுமை காணப்பட்டது. சீஷர்கள் ஆண்டவரே எலியா வானத்திலிருந்துஅக்கினியை இறக்கி அழித்தது போல இவர்களை நாம் அழித்துவிடலாமா என்று இயேசுவிடம் கேட்டபோது, இயேசுவின் பதில் என்னவாயிருந்தது. நீங்கள் இன்ன ஆவியுடையவர்கள் என்பதை அறியீர்களா என்பதே. அது என்ன பொறுமையில்லாத ஆவி. தலைவனுக்கும், ஊழியனுக்கும் பொறுமை மாத்திரமல்ல நீடிய பொறுமையே தேவை. சுவிசேஷத்திற்கு செவிகொடுக்காத கிராமங்களில் உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வெளியேறுங்கள் என்ற வசனத்தையே சிலர் பிடித்துக்கொண்டு, அந்த முழு கிராமத்தையும் வெறுத்துவிடுகின்றனர். அவர்கள் சுவிசேஷத்திற்கு பாத்திரர்கள் அல்ல என்பது அவர்களது எண்ணம். இதன் இரகசியம் அவர்களுக்குள் காணப்படாத பொறுமையே. பவுல் எருசலேமிற்குள் சென்று பிரசங்கித்து அவர்களால் அடித்து உதைக்கப்பட்டபோதும் கூட, மீண்டும் அந்தப்பட்டணத்திற்குள் எழுந்துபோனானே. இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, அவருக்கு சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே வேதத்தில் நாம் காண்கிறோம். தன்னை ஏற்றுக்கொள்ளாததினால், அவர் திரும்பி பரலோகம் போயிருந்தால் இவ்வுலகத்தின் நிலை என்ன. மனந்திரும்பாத மக்களோடும், மனிதனோடும் பலமுறை பேசி தனது அன்பை எப்படியாகினும் அறிந்துகொள்ளும்வரை காத்திருப்பதுதானே தலைவனது குணமாருக்கவேண்டும். ஒரு வாலிபனை சந்தித்து சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அவன் சுவிசேஷத்திற்கு விரோதமான மனப்பாங்குடன் பேசி, பல கேள்விகளை கேட்டு நம்மை கேலி செய்யும் நிலைக்கு காணப்படுவானென்றால் உடனே நாம் அவனிடம் மறுமுறை பேச விரும்புவதில்லையே. அத்தோடு கூட நாம் நின்றுவிடாமல் இவன் நிச்சயம் திருந்தவே மாட்டான் என்ற முத்திரையும் குத்திவிடுவோம். அவனுக்காக பாரங்கொள்ளாமல், ஜெபிக்காமல் அவனிடமிருந்து அழகாக ஒதுங்கிவிடுவது தலைமைத்துவத்திற்கு அழகல்ல. இது எத்தனை புத்தியீனம், அப்படிப்பட்ட வாலிபனிடம் பேசுமளவிற்கு நம்மிடத்தில் பொறுமையில்லையே. பொறுமையில்லாத மனிதர்களின் தலைமைத்துவம் ஆத்துமாக்களை பின்பற்றியிருக்காது. ஆத்துமாக்கள் தன்னைப் பின்பற்றவேண்டும் என்றே அவர்களது மனம் ஆசிக்கும். இயேசுவின் தலைமைத்துவம் ஆத்துமாக்களை தேடிச் செல்லதாகவேயிருந்தது.
பொறுமையில்லாத ஊழியர்களின் ஊழியத்தில் அவசரம் அதிகமாகக் காணப்படும். கனிகள் ஏதும் கிடைக்கவில்லை என்றால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற நிலை அவர்களில் உருவாகிவிடும். தோட்டக்காரர்களாகிய நாம் அநேக வேளைகளில் எஜமானனே இந்த மரம் இன்னமும் கனிகொடுக்கவில்லை, வீணாக நின்று நிலத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது இதை நாம் வெட்டிவிடலாமா என்றே கேட்டுக்கொண்டிருக்கின்றோம், ஆனால் எஜமானனாகிய தேவனின் பதில் என்ன இந்த மரம் இந்தவருடமும் இருக்கட்டும் என்பதே. இது அவர் ஆத்துமாக்களின் மேல் வைத்திருக்கின்ற மனதுருக்கத்தோடு கூடிய பொறுமையையே காண்பிக்கின்றது. வருகிறேன் என்று சொல்லிப்போன இயேசு இன்னமும் ஏன் தாமதிக்கின்றார் என்று நாம் கருதுவோமானால் அதற்கும் பதில் அவரது பொறுமையே. எல்லாரும் மனந்திதிரும்பவேண்டும் என்று அவர் நீடியபொறுமையோடு இருக்கின்றார். மனந்திரும்பிய மக்களின் ஆசை இயேசு உடனே வரவேண்டும் என்பதே. இப்படிப்பட்ட ஆசையோடு இருக்கும் மக்களுக்கு அந்த வருகையில் எடுத்துக்கொள்ளப்படமுடியாத நிலையில் இருக்கும் எண்ணற்ற கோடிக்கணக்கான ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எப்படியிருக்கும். பொறுமையுள்ள மக்கள் ஆண்டவரே உமது வருகை தாமதிக்கட்டும், இன்னமும் உமது வசனத்தை அறியாத ஜனங்கள் மத்தியில் பணிசெய்ய காலம் தாரும் என்றே ஜெபிப்பார்கள்.
இந்த உலகத்தில் ஊழியம் செய்து இரத்தசாட்சிகளாக மரித்த மக்களிடம் கூட பொறுமை காணப்படவில்லை என்பதை வெளிப்படுத்தலில் நாம் காணமுடியும். மறுமைக்குள் அவர்கள் பிரவேசித்தபின்பும், தங்களை கொன்ற மக்களை பழிவாங்கவேண்டும் என்றே அவர்களது மனது துடித்தது. அவர்களும் பரலோகம் வரவேண்டும் என்கிற விருப்பம் அவர்களில் இல்லையே. அவர்களின் கேள்விக்கு பதில் காத்திருங்கள் என்பதே. கிறிஸ்து இயேசுவில்; இருந்த சிந்தையே நம்முடைய தலைமைத்துவத்திலும் காணப்படவேண்டும். பூமியிலுள்ள ஆத்துமாக்களை அழிக்க அல்ல அவர்களை அழியாமைக்குள் பிரவேசிக்கச் செய்கின்ற பணியே ஊழியர்களின் பணி.
ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தையும் அவனுக்கு திருப்பிக்கொடு, ஒரு மைல் தூரம் ஒருவன் உன்னை பலவந்தம் பண்ணினால் அவனோடு கூட ஏழு மைல் தூரம் போ, உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு என்பது இயேசு சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தது தலைமைத்துவத்தில் எத்தனை உயர்ந்த சத்தியங்கள். தோழர்களோடு அல்லது நண்பர்களோடு பயணிக்க எல்லோருமே விரும்புவர், ஆனால், ஒரு மனிதன் தலைமைத்துவத்திற்கு தன்னை தயாராக்கிக்கொள்ள வேண்டுமென்றால் அவன் சத்துருக்களோடு பயணிக்க தயங்காதவனாக இருக்கவேண்டும். தன்னை துன்பப்படுத்தும் மக்கள் துன்பப்படவேண்டுமென்று விரும்புவோர் தலைமைப் பதவிக்கு தகுதியில்லாதவர்களே. இயேசு தன்னை துன்பப்படுத்தின மக்களோடு கூட எவ்வளவு பொறுமையோடுகூட நடந்துசென்றார். கெத்சமனேயில் துவங்கிய அவரது பயணம் கொல்கதா வரை எத்தனை பொறுமை நிறைந்ததாயிருந்தது. அவர் பாடுபடும்போது, பதிலுக்கு வையாமலிருந்தார், அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவில்லை, மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் காணப்பட்டார் என்றே இயேசுவின் கல்வாரி பயணத்தை வேதம் சித்தரிக்கின்றது. 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்ற ஜெபம் தலைவர்களாயிருக்கின்ற ஒவ்வொருவருடைய வாயிலுமிருந்து வரவேண்டியது.
எலியாவின் வாழ்க்கையிலும் பொறுமையில்லாதிருந்ததை நாம் காணமுடியும். தனது ஊழியத்தின் பாதையில் அவர் சோர்வடைந்ததோடு, அவன் பொறுமையில்லாதவனாகவும் காணப்பட்டான். தேவனது கட்டளைகள் அவனுக்கு கடினமாகத் தோன்றத் தொடங்கியது. தேவன் பேசுவதைக் கவனிக்கக்கூட மனதில்லாதவனாய், தனது எதிர்கால ஊழியத்தைப் பற்றி சற்றேனும் கரிசனையில்லாதவனாய் தேவனை நோக்கி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லத் தொடங்கிவிட்டான். எலியாவைக்கொண்டு தேவன் செய்யவிரும்பிய பணிகள் இன்னும் தேவனது திட்டத்தில் அதிகமுண்டு, எனினும் பொறுமையில்லாததினால் தனது ஊழியத்தை பாதியிலேயே முடித்துக்கொள்ள எலியா தாயாராகிவிட்டான். தேவன் தன்னை அழைத்த அழைப்பின் மேல் அக்கறை காட்டாமல், தனது பயணத்தின் தூரத்தையும் அவன் உணராமல், அவனுக்கு பெலன் கொடுக்க தேவன் பலமுறை முயற்சி செய்தபோதும் கூட அதை அசட்டைபண்ணும் அளவிற்கு எலியா மாறிவிட்டான். அவனது ஜெபமெல்லாம் 'நான் ஒருவன் மாத்திரமே இருக்கிறேன் என்னையும் எடுத்துக்கொள்ளும்' மனிதர்களால் நான் சாகுமுன் என்னை நீர் எடுத்துக்கொள்ளும் என்பதுதான் எலியாவின் ஜெபமாயிருந்தது. ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்ட எலியா மனிதர்களின் கைகளினால் மரிக்க ஆயத்தமாயில்லை. தேவனது கையினால் அவன் மரிக்கவேண்டும் என்ற எண்ணமே அவனது மனதில் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட எண்ணமுடைய தலைவர்கள் பாடுகளைக் கண்டவுடன் பறந்துவிடுவார்கள். ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, மனிதர்களால் பாடுபடுவதை அவர் உதறித்தள்ளினாரோ? இல்லையே. தன்னை அடிக்கிறவர்கள் தன்னை பாவத்தின் பலியாய் மாற்றுமளவிற்கு எவ்வளவாய் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்தார். எலியாவின் மனதில் நான் மனிதர்களின் கைகளினால் மரிக்கக்கூடாது என்ற விபரீதமான, தலைவனுக்கு ஒவ்வாத சிந்தனை புதைந்திருந்தது. இப்படிப்பட்ட மனதுடைய தலைவர்கள் ஆடுகளுக்காக எப்படி தனது ஜீவனைக் கொடுப்பார்கள். ஆடுகள் என்னவானாலும் பரவாயில்லை நான் பிழைத்தால் போதும் என்று எப்போதும் தனது ஜீவனைக்குறித்தே அக்கறையுள்ளவர்களாகக் காணப்படுவார்கள். ஸ்தேவான் மனிதர்களால் கல்லெறியுண்டு மரிப்பதை தெரிந்துகொண்டானே. அவனது முகத்தில் மரணவேளையில் பாடுகளைக்குறித்த எவ்வித பயங்களும் காணப்படவில்லையே. பவுல் எருசலேமிற்குச் சென்றபோது, பாடுகளைக்குறித்து பயப்பட்டானோ? இல்லையே. பாடுகளைக்குறித்தும், தனது மரணத்தைக்குறித்தும் எப்போதும் பயந்துகொண்டிருக்கும் ஒரு தலைவனால் எப்படி ஆத்துமாக்ளை காப்பாற்றும் ஊழியத்தைச் செய்யமுடியும். பாவத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்துமாக்களுக்காக தன் ஜீவனையே பலியாகவும், பணயமாகவும் வைக்க இப்படிப்பட்ட தலைவர்கள் எப்படி முன்வருவார்கள்? கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்ற பவுலின் வார்த்தைகள் நம்முடைய மனதிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கவேண்டும். சத்தமிட்டு பிரசங்கிக்கும் தலைவர்கள் இரத்தசாட்சிகளாகவும் மரிக்க தயாராயிருக்கவேண்டும். ஆடுகளுக்காக முதலில் ஜீவனை விடவேண்டியது மேய்ப்பனே. ஆடுகளை தனது ஜீவனுக்காக பலிகொடுக்கலாமா? தனது ஜீவனை காப்பாற்றவேண்டும் என்ற மனதுடைய தலைவன், தன் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட அத்தனை ஆடுகளையும், தனது ஜீவனுக்காக பலிகொடுத்துவிடுவான். தன்னைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமுடைய தலைவர்களால் வருகின்ற விபத்துக்களில் இதுவும் ஒன்று. தனது ஜீவனைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமுடைய தலைவர்களின் வாழ்க்கையில் பொறுமை என்பது அரிதானதே.
எலியா தனது ஓட்டத்தில் சோர்ந்துபோனவனாய், தேவனை நோக்கி என்னை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபித்தபோது. தேவன் அவனை உடனே அவனது ஜெபத்தைக்கேட்டு எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக அவனை எப்படியாகிலும் பெலப்படுத்தவேண்டும் என்றே எண்ணினார். தேவனுக்காக பயங்கரமான காரியங்களைச் செய்தாலும், இப்போது சோர்வின் உச்சியில் சூரைச்செடியின் அடியில் எலியா வந்து உறங்கிக்கொண்டிருக்கிறான். உறங்கியதோடு மாத்திரமல்ல அவன் சாப்பிடவுமில்லை, ஆண்டவரே என்னை எடுத்துக்கொள்ளும் என்று உண்ணாவிரதமே இருந்தான். சாகவேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்த, எலியா சாகத்தொடங்கிவிட்டான். தனது உணவை உதறிவிட்டானே. இப்படிப்பட்ட நேரத்திலும் தேவன் அவனை பெலப்படுத்த தனது தூதனை அனுப்பி அடையையும், தண்ணீரையும் அவனுக்குக் கொடுத்தார். அழைப்பை இழந்த எலியாவின் வாழ்க்கையில் அவசரம் வந்து ஒட்டிக்கொண்டது. தேவன் எதைச் சொன்னாலும் செய்வதற்கு அவன் ஆயத்தமாயில்லை. எனவேதான் தேவ பெலத்தையே அவன் அவமதித்துவிடுகின்றான். தூதன் கொடுத்த அடையையும், தண்ணீரையும் சாப்பிட்ட பின்பு எலியாவுக்கு தூக்கம் எப்படித்தான் வந்ததோ? தெரியவில்லை. இரண்டாம் முறையும் தூதன் வந்து எலியாவை தட்டி எழுப்பி 'போஜனம் பண்ணு, நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்' என்று சொன்னபோது அதை புசித்து நாற்பது நாட்கள் நடந்துசென்று பின்பு ஒரு கெபிக்குள் சென்று தங்கிவிட்டான். மீண்டும் கர்த்தர் அவனோடு கூட இடைபட்டு 'எலியாவே இங்கு உனக்கு என்ன காரியம்' என்று கேட்டபோதும் பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறான். தேவனது பெலனை அவமதித்துவிட்டான், தன்னை அழைத்த அழைப்பை மறந்துவிட்டான், தேவனது வற்புறுத்தலுக்கு அவனது மனம் வளைந்துகொடுக்கவில்லை. தான் சாகவேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே தேவனோடு பேசிக்கொண்டிருக்கிறான். இறுதிவரையில் அவனோடு போராடியும் அவன் மாறாத பட்சத்திலேயே தேவன் அவனை எடுத்துக்கொள்ள சித்தமானார். என்றாலும், எலியாவை அவர் எடுத்துக்கொள்ளும் முன்பாக மூன்று காரியங்ளைச் செய்யும்படிக்கு தேவன் அவனுக்கு ஆணையிட்டார். ஆனால், இந்த காரியத்திலும் எலியாவின் பொறுமை காணப்படவில்லை, அவசரமே காணப்பட்டது. ஆசகேலை சீரியாவின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணு, யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணு, எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு என்று மூன்று காரியங்களை கர்த்தர் செய்யும்படி அவனுக்குக் கட்டளை கொடுத்தபோதும். அவன் அதையும் செய்ய ஆயத்தமாயில்லை. தேவனது கட்டளைகளையே நிராகரிக்கும் மனம் எலியாவினிடத்தில் வந்துவிட்டது. என்னுடைய ஊழியத்தை நான் முடிக்கவேண்டும் என்ற எண்ணம் எலியாவின் மனதில் நிறைந்திருந்ததினால், தேவன் முதலில் சொன்ன இரண்டு காரியங்களின்மேல் அவன் அக்கரை காட்டாமல், முதன்முதல் எலிசாவை தனது ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணிவிட்டான். என்னை விட்டால் போதும் என்பதையே இது வெளிக்காட்டுகின்றது. ஆகாப் ராஜாவின் மனந்திரும்புதலை காணும் பாக்கியம் எலியாவுக்குக் கிடைத்தபோதிலும். யேசபேலின் மரணத்தை அவன் கண்கள் காணவில்லை. 'உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய்' (சங்கீதம் 91:7-8) என்ற வசனங்கள் எலியாவின் வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு அவன் வழிவிடவில்லை. சத்துருவைக் கண்டு தனது சகாப்தத்தை முடித்துக்கொண்டான். சத்துருவின் முடிவைக் காணுமளவிற்கு அவனிடத்தில் பொறுமை காணப்படவில்லை.
பொறுமையில்லாமை மாத்திரமல்ல அவனது மனதில் பயமும் நிறைந்திருந்தது. தன் பிராணனைக் குறித்த பயம் அவனை ஊழியத்தின் பாதையிலிருந்து பின்னடையச் செய்துவிட்டது. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான் என் நிமித்தம் தனது ஜீவனை இழக்கக்கொடுக்கிறவனோ அதை சுதந்தரித்துக்கொள்வான் என்பது தானே வேதத்தின் இரகசியம். தன் ஜீவனை இழக்க ஆயத்தமாயிரதோர் எப்படி தேவனுக்கென்று உத்தம ஊழியர்களாயிருக்க முடியும். ஊழியத்தின் பாதையில் எல்லாவற்றிலும் தன் ஜீவனைக் காக்கவேண்டும் என்றே அவர்களது மனம் காணப்படும். பிராண பயமுள்ளவனின் பிரசங்கத்தில் பலம் எப்படியிருக்கும். தலைவன் தன் ஜீவனை கொடுக்கிறவனாக இருக்கவேண்டும். நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான் என்றே இயேசு தன்னை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். தலையைக்கொடுக்கும் தலைவர்கள் தேவை. பவுலின் ஊழியத்தில் அவருக்காக கழுத்தைக் கொடுக்கக்கூடிய மக்கள் காணப்பட்டார்களே. அவர்களது கண்களைப் பிடுங்கி கொடுக்கக்கூடுமானால் அதையும் அவர்கள் செய்திருப்பார்கள் என்று பவுல் அவர்களைக்குறித்து எத்தனை உயர்வாகப் பேசுகின்றார்.
மோசே தேவனிடத்திலிருந்து அற்புதங்களைப் பெற்ற பின்னரும் அவன் தேவனது அழைப்பிற்கு ஆயத்தமாயிருக்கவில்லை, 'ஆண்டவரே நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்' என்றே அவன் கூறினான். அதற்கு காரணம் அவனுக்குள் உறைந்திருந்த பிராணபயமே. தான் முன்னே எகிப்திலிருக்கும்போது செய்த காரியங்கள் அவனது மனதுக்குள் எழும்பத் தொடங்கியது. தலைவனுக்குள் காணப்படக்கூடாத குணங்களில் இதுவும் ஒன்று. மோசேக்கு தேவனது அழைப்பு கிடைத்தபோது, தன்னுடைய வாழ்க்கiயில் தான் பழைய நாட்களில் எகிப்தில் இருக்கும்போது செய்த காரியத்தினால், பயம் அவனுக்குள் உருவாகத் தொடங்கியது. என்னைக் கொல்லத் தேடிய அரசனிடத்திற்கே நான் திரும்பிப்போகவேண்டுமா? நான் எங்கே தவறு செய்தேனோ அங்கேயே மீண்டும் செல்வது எப்படி போன்ற அநேக பயத்தின் கேள்விகள் அவனது நெஞ்சத்தை உலுக்கத்தொடங்கியது. உயிரைக்குறித்த பயம் அவனுக்குள் உயர்ந்துநின்றதாலேயே, ஆண்டவரே வேறு யாரையாவது அனுப்பும் என்று சொல்லுகின்றான். கடந்த காலத்தின் காரியங்களை நினைத்துக்கொண்டிருக்கும் மக்கள் தலைவர்களாகத் தயங்குவார்கள். அவர்களது கண்களுக்கு முன்னதாக தேவனது அழைப்பல்ல, தாங்கள் பழைய நாட்களில் செய்த காரியங்களே வந்து நிற்கும். இவர்கள் தலைவர்களாகாமல், தங்கள் ஆவிக்குரிய வாழ்வை சாதாரணமான முறையில் மறைமுகமாகவே வாழ்ந்து முடிக்கவிரும்புவார்கள். இவர்களைச் சுற்றியுள்ள வேலியை உடைத்து தேவனுக்காக வைராக்கியமாக சேவை செய்ய இவர்கள் தயாராகவேண்டுமே.
தனது ஜீவனைக் காக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் மக்களுக்கு பிரியமான பிரசங்கங்களையெ செய்துகொண்டிருப்பார்கள். அவர்களது பிரசங்கத்தில் பாவத்திற்கு விரோதமான வைராக்கியம் காணப்படாது. மக்கள் தனக்கு விரோதமாக மாறிவிடக்கூடாது என்பதே அவர்களது முதற்குறிக்கோளாகக் காணப்படும். தேவனும், வேத வசனமும், பாவத்தின் சம்பளமும் அவர்களது பிரசங்கத்தில் இரண்டாம் நிலையையே பெற்றிருக்கும். இவர்கள் மக்களைப் பிரியப்படுத்தும் ஊழியர்களாயிருப்பார்கள். மனிதர்கள் பார்க்கவேண்டும் என்று பார்வைக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களாக இவர்கள் காணப்படுவார்கள். மனிதர்களைப் பிரியப்படுத்துவோரின் ஊழியங்கள் தேவனை பிரியப்படுத்துவதாய் எப்படி அமையும். நான் தேவனையா மனிதனையா யாரைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேன் நான் மனிதரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் தேவனுடைய ஊழியக்காரன் அல்லவே என்று பவுல் எத்தனை அழகாய் தன்னுடைய ஊழியத்தையும் அதின் இரகசியத்தையும் வர்ணித்திருக்கின்றார். யோபுவையும் அவனது வாழ்க்கையையும் பெருமையாய் பிரசங்கிக்கிற அநேக தலைவர்களின் வாழ்க்கையில் யோபுவைப்போன்ற பொறுமை காணப்படுவதில்லையே.
மோசே ஆடு மேய்த்த பின்னும் அவனது வாழ்க்கையில் பொறுமையின் பரீட்சையில் அவன் வெற்றியடையவில்லையே. தேவனது விரல்களினால் எழுதப்பட்ட பத்து கற்பனைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை மலையிலிருந்து இறங்குகையில் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்த மக்களைக் கண்டவுடன் உடைத்துவிட்டானே. பாவம் செய்தது மக்கள் தானே, அவனது கையிலிருந்த கற்பலகை என்ன செய்தது. மக்களைக் கண்டவுடன் அவனுக்குள் பொங்கியெழுந்த ஆத்திரம் அவனை அத்தனைக் கோபங்கொள்ளும்படி செய்துவிட்டது. மோசேயின் ஊழியப்பாதையில் பொறுமையில்லாத பல இடங்களை நாம் காணமுடியும். கன்மலையைப் பார்த்து பேசு என்று மோசேயிடம் கர்த்தர் சொன்னபோது கூட அவன் அந்நேரத்தில் பொறுமையிழந்தவனாகவே காணப்பட்டான்.
தலைமைத்துவத்தின் பயிற்சி தலைவர்களிடம் பயிற்சி பெறுவதினாலேயே முழுமை பெற்றுவிடுவதில்லை. நாம் தேவனிடமும் பயிற்சி பெறவேண்டிய அவசியம் உண்டு. மோசே பார்வோனிடத்தில் பெற்ற பயிற்சியில் அவன் பொறுமையை கற்கவில்லையே. தலைவர்களாக காணப்படவேண்டிய நபர்களிடம் பொறுமையில்லாதிருந்தால் அவர்களது தலைமைத்துவம் எப்படி காணப்படும்? எந்த ஒரு காரியத்தையும் அலசிஆராயும் மனப்பாங்கு அவர்களிடம் இருக்காது. ஊழியத்தில் சந்திக்கும் பல கடினமான சூழ்நிலைகளை கடப்பதற்கு பொறுமையில்லாதோரின் மனம் கடினப்படும். ஏன் இந்த தலைமைத்துவத்திற்கு வந்தோம்? என அவர்களது மனம் புழுங்கத் துவங்கும். தலைமைத்துவத்தைக் குறித்த வெறுப்பு அவர்களது நெஞ்சில் உருவாகத்துவங்கும். அத்தோடு தலைமைத்துவம் ஒரு கடினமான நுகமாகவும் அவர்களது கண்களுக்குத் தென்படும். தன்னைப் பின்பற்றிவரும் திரளான மக்களைக் கூட மறந்துவிட்டு, ஆண்டவரே என்னை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபம் இப்படிப்பட்டவர்களின் வாயில் நுழைந்துவிடும். எலியாவும் தேவனிடம் தனது கடினமான சூழ்நிலையில் இப்படியே ஜெபித்தான். பார்வோனிடம் எல்லா வித்தைகளிலும் பயிற்சிபெற்றிருந்தும் மோசேயினிடம் பொறுமை காணப்படாததினாலேயே தேவன் அவனை ஆடு மேய்க்கும் படி அனுமதித்தார். அப்படி அவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது, அவன் தேவனால் தலைவனாக அழைக்கப்பட்டதை மோசேக்கு அறிவுறுத்துகிறார்.
தலைவனாக விரும்பும் ஒவ்வொரு மனிதனும் சுவிசேஷத்தினால் அழைக்கப்பட்டவனாக இருக்கவேண்டும். தேவனாலோ, தேவனது வார்த்தைகளினாலோ அல்லது தேவ வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் ஊழியர்களினாலோ ஆழமான அர்ப்பணிப்போடு கூடிய அழைப்பு தலைவராவோரின் மனதில் ஆழ்ந்திருக்கவேண்டும். தலைமைத்துவத்திற்கென்று தன்னை அர்ப்பணிப்பதைக் காட்டிலும் தேவனுக்கென்று தன்னை அர்ப்பணிக்கும் தலைவர்களே இன்றயே தேவை. தலைமைத்துவ பயிற்சி முகாம்களோ, ஊழிய பயிற்சி ஸ்தாபனங்களோ தலைமைத்துவத்தின் பயிற்சியை கற்றுக்கொடுக்கலாமே தவிற தலைவர்களாக அவர்களை உருவாக்குவதற்கு உத்திரவாதமளிக்க இயலாது. எங்கு எப்படிப்பட்ட பயிற்சி பெற்றாலும், அவனை தலைவனாக முழுமைப்படுத்துவது தேவனே.
Comments
Post a Comment