மனிதனானாலும், மண்ணே! - 2
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 2
தலைவர்களாகிய நாம் தேவன் நம்மை பயன்படுத்தும் வழிகளில் சந்தோஷித்திருந்தாலும், ஆனந்தத்தினால் அனுதினமும் நிறைந்திருந்தாலும், அழைப்பின் மையத்திலேயே இருந்து நாம் பணி செய்துகொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் ஆர்ப்பரிப்பின் சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேயிருந்தாலும், நம்முடைய வாழ்க்கையிலிருந்து நாம் விடைபெறும் நாள் இப்பூமியில் நெருங்கும்போது, தேவனால் நமக்குக் குறிக்கப்பட்ட காலம் இத்தரையில் நிறைவடையும்போது, அவர் தெரிந்தெடுக்கும் மனிதர்களிடத்தில் தயாள மனதுடன் அதனை அளித்துவிட நாம் எப்பொழுதும் தயாராகவும் இருக்கவேண்டும் என்பதே வேதம் தரும் போதனை.
ஆதிப் பிதாக்களாகிய ஆதாமும், ஏவாளும் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமற்போனபோது, இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார் (ஆதி 3:22,23); மனிதனுடைய சரீர ஓட்டத்தின் முடிவு அன்றே மண்ணை நோக்கித் திரும்பிவிட்டது. ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது (பிர. 8:8) என்றே ஆண்டவருடைய ஞானத்தைப் பெற்ற சாலொமோனும் எழுதுகின்றான். என்றபோதிலும், மனிதனுக்கு இதனை ஏற்றுக்கொள்வது சற்று கடினமானதாகவே இருக்கின்றது. இன்றளவிலும் மரணம் மனிதனுக்கு ஓர் போர்க்களமாகவே தோன்றுகின்றது. எப்படியாகிலும் அதிலே வெற்றி பெற்று மேலும் சில நாட்களை இத்தரையில் வாழ்ந்துவிட முடியாதா என்ற எதிர்பார்ப்போடு எல்லா விதங்களிலும் போராடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். என்றாலும், அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி 9:27) என்பதுதானே தேவனின் திட்டம்; இந்த சட்டத்திற்கு நமது சரீரம் நிச்சயம் கீழ்ப்படிந்தேயாகவேண்டும்.
'எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்' (சங். 90:10) என்றே நமது வாழ்நாட்களைக் குறித்து சங்கீதக்காரன் கூறுகின்றான். என்றபோதிலும், வருத்தமாயிருந்தாலும், சஞ்சலமாயிருந்தாலும் வாழ்க்கையை விட்டுவிட மனிதனுக்கோ விருப்பமில்லையே. மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது (சங். 103:15,16) என்பதே நம்மைக் குறித்து வேதம் கூறும் நிதர்சனமான உண்மை.
யோபுவும், தனது துக்கமான நிலைமையிலும் 'என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்' (யோபு 7:6) என்றே வாழ்க்கையைக் குறித்துக் கூறுகின்றான். அதுமாத்திரமல்ல, என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ? (யோபு 6:12) என்றும் யோபு தன் சரீரத்தின் நிலையினைக் குறித்து எடுத்துச் சொல்லுவது, இன்றைய நாட்களில் நம்முடைய வாழ்க்கைக்கும் பொருத்தமானதுதானே. அவ்வாறே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும், 'என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்' (ஏசா. 38:12) என்றே தனது மரணத்தை நினைத்து தேவனை நோக்கிப் பேசுகின்றான். வாழ்க்கையின் முடிவில் வரும்போது, நம்முடைய உதடுகள் உச்சரிப்பது 'மரிக்கப்போகிறேனே' என்ற முறுமுறுப்பா? அல்லது 'எல்லாம் முடிந்தது' என்ற கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றி முடித்த ஆர்ப்பரிப்பா? ஓட்டத்தின் இடையிலேயே 'எடுத்துக்கொள்ளும்' என்று அல்ல, ஓட்டத்தின் முடிவில் அவர் அழைக்கும்போது 'இதோ இருக்கிறேன்' என்ற அர்ப்பணிப்பே நமது வாயிலிருந்து புறப்படட்டும்.
'ஆமணக்கு' போன்ற ஆயுள்
ஆம், நம்முடைய வாழ்நாட்களின் காலம் மிகவும் குறுகியதே. மாம்சமாகிய நம்முடைய சரீரத்தை, 'அழிந்துபோகக்கூடிய பூமிக்குரிய கூடாரமாகிய வீடு' (2 கொரி. 5:1) என்றே வர்ணித்து எழுதுகின்றார் பவுல். யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தற்செயலாகக் கொடுக்கப்பட்ட ஆமணக்குச் செடி ஓங்கி வளர்ந்தபோது, அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். ஆனால், மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டபோது, அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று. அத்துடன், சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான் (யோனா 4:6-8).
ஆம் பிரியமானமானவர்களே, இத்தகைய ஆமணக்குச் செடியைப் போன்றதே நமது மாம்சம். அழகிய மேனியுடன் பிறந்து, வளர்ந்து, தற்செயலாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நமது சரீரத்தின் மேல் அதிக நேரங்களில் நாம் அக்கறை கொண்டு அதிக கவனத்தையும் கூடவே அதற்கென்றே செலுத்திவிடுகின்றோம். இறைவன் கொடுத்திருக்கும் அழகினை மெருகூட்டும் ஆசையில், இன்னும் அநேக செயற்கையானவைகளை இயற்கையான சரீரத்தின் மேல் அள்ளிப் பூசிக் கொள்ளுகின்றோம். தலை முடியிலிருந்து, கால் பாதங்கள் வரை நாம் பிறரது பார்வைக்கு அழகாயிருக்கவேண்டும் என்றே கண்ணாடியின் முன் நின்றுகொண்டிருக்கின்றோம். சத்தியத்தின் சட்டதிட்டங்களையும்கூட சில நேரங்களில் உடலுக்காக உடைத்துவிடுகின்றோம். என்றபோதிலும், காலம் செல்லச் செல்ல, முதிர் வயதினைத் தொட்டு வாழும்போது, சரீரத்தில் உண்டாகும் மாற்றங்களால் மனம் நொந்துகொள்ளுகின்றோம். வாடிப்போன ஆமணக்குச் செடிக்காக யோனா வருத்தப்பட்டதுபோல, அழிவை நெருங்கும் மாம்சமான நமது சரீரத்திற்காக நாம் வருத்தப்படத் தொடங்கிவிடுகின்றோம். இத்தகைய வருத்தம் நமது மனதை அடைக்க அடைக்க, வரும் நாட்களையும், நம்முடைய ஓட்டத்தைத் தொடரவிருக்கும் சக மனிதர்களையும் நம்முடைய மனம் மறந்தேபோய்விடுகின்றது. தலைவர்களுடைய வாழ்க்கையில் இத்தகைய நிலை ஊழியத்தின் எதிர்காலத்தை பேராபத்திற்குள் தள்ளிவிடும். இத்தகைய நிலைக்குள் நாம் நம்மை ஒருபோதும் விழுந்துவிடக்கூடாது.
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஜீவனை விட்ட (லூக். 23:46) இயேசு கிறிஸ்துவைப் போலவும், நகரத்திற்குப் புறம்பே தள்ளி, கல்லெறிந்தபோதிலும், 'கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று தொழுதுகொண்டவனாக' (அப். 7:58,59) தன் ஜீவனை விட்ட ஸ்தேவானைப் போலவும், ஜனங்களால் நாம் துன்பப்படுத்தப்பட்டாலும், நெருக்கப்பட்டாலும், மனதாலோ சமாதானத்தோடு நம்முடைய வாழ்க்கையின் ஓட்டம் வெற்றியாக நிறைவுபெறுவது நிச்சயம். எனவே, நம்முடைய ஓட்டத்தின் முடிவில், நம்முடைய ஓட்டத்தைத் தொடரும் மற்றொருவரை தேவன் அடையாளம் காண்பிக்கும்போது, நம்மிடத்திலிருப்பவைகளைக் காட்டிலும் இரட்டத்தனையாய் வரவிருக்கும் சந்ததிக்கு வழங்க தேவன் ஆயத்தமாயிருக்கும்போது, அவர்களுக்கு வழிவிடவும் அத்துடன், தேவனுக்கும் அத்தகைய மனிதர்களுக்கும் இடையிலே நாம் ஒருபோதும் தடைக்கற்களாக நின்றுவிடாதபடிக்கு தலைவர்களாகிய நாம் கவனமாயிருக்கவேண்டியதும் அவசியம்.
Comments
Post a Comment