தலைவனின் தனிமைப் பயணம் - 12

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 12


 தலைவனின் தனிமைப் பயணம்


  தலைவனின் வாழ்க்கையிலும், ஊழியத்தின் காரியங்களிலும் தனிமை என்பது தவிர்க்;க முடியாத ஒன்று. தலைவனாகும் மனிதன் தானறியாமலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளுகிறான். ஒருபுறத்தில் இது அவசியமானதுதான் என்றாலும், மற்றொருபுறத்தில் இதில் மறைந்து கிடக்கும் ஆபத்துக்களையும் தலைவர்கள் காணத் தவறிவிடக்கூடாது. அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையைப் பாதுகாக்கும், உற்சாகப்படுத்தும் மேய்ப்பர்களாக அவர்கள் காணப்பட்டாலும், தலைவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்புக்குள்ளாகத் தள்ளப்படுகின்றனர். சபைக்கு வரும் விசுவாசிகளையோ, தன்னைப் பின்பற்றும் மற்ற மக்களையோ அநேக காரியங்களில் கேள்விகேட்டு அவர்களுக்கு ஆலோசனை அளிக்கலாம், ஆனால், தலைவர்களுக்கு ஆலோசனை கிடைப்பது எங்கே? தேவ சந்நிதி மட்டுந்தானா? தலைமைத்துவமே தலைவர்களைத் தனிமைப்படுத்துகின்றது. இப்படி தலைவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது, தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக்குறித்து அதிக கவனமாயிருக்வேண்டியது அவசியம். தனிமை என்ற பாதையில் தலைவர்கள் நுழைந்து செல்லும்போது, அது அவர்களது ஆவிக்குரிய வாழ்வில் தரத்தை தணித்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆண்டவருக்கும் அலுவல்களுக்கும் சரியான நேரத்தை தலைவன் ஒதுக்கத் தவறினால், அது அவரை ஆண்டவரிடமிருந்து பிரித்து அலுவல்களண்டை நடத்திச் சென்றுவிடும். ஊழியத்தை காரணப்படுத்தி தனிவாழ்வில் ஆவிக்குரிய தரத்தை தலைவர்கள் குறைத்துக்கொள்ளக்கூடாது.

     நீங்கள் வேதம் வாசித்தீர்களா, ஜெபித்தீர்களா என்று அநேகரை கேட்கும் தலைவன் தன்னைப்பற்றியும் சிந்திக்கத் தவறிவிடக்கூடாது. தலைவர்கள் பலரிடம்  ஆய்வு நடத்தியதில் வெளிவந்த தகவல் என்னவென்றால், தன்னை 'வேதம் வாசித்தீர்களா' என்று யாருமே கேட்கவில்லை என்பதே. அதற்கு காரணம் தலைவர்கள் இன்று வேதம் வாசித்திருப்பார்கள் என்று மக்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கையே. தங்களைப் பற்றி இத்தனை நிச்சயமான உறுதியை மனதில் கொண்டிருக்கும் தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வளவு உச்சிதமாக அமைத்துக்கொள்ளவேண்டும். மக்களைச் சந்திக்கும் முன் தேவனையும் வேதத்தையும் சந்திப்பதே தலைவனின் முதல்வேலை. ஒவ்வொரு நாளின் அதிகாலை நேரங்களையே தலைவர்கள் இதற்கென ஒதுக்கவேண்டும். பகல் நேரத்தில் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இவைகளை தள்ளிப்போடுவது நியாயமாகாது. காலையில் 10 மணிக்கு ஜெபித்துக்கொள்ளலாம் என்று தலைவன் ஒருவன் நினைத்து வீட்டில் அமர்ந்திருக்கும்போது, 9:30 மணிக்கு சபையின் விசுவாசி ஒருவர் பாரத்துடன் வந்து பேசிக்கொண்டிருப்பார், போதகருக்கோ 10 மணிக்கு ஜெபிக்கவேண்டும் இந்நிலையில் போதகரது நிலை எப்படிக் காணப்படும். அந்த விசுவாசியினிடத்தில் நான் ஜெபிக்கவேண்டும் பின்பு வந்து பேசுகிறீர்களா என்று போதகர் சொல்வாரென்றால், அந்த விசுவாசி என்ன நினைப்பார், நான் அதிகாலையில் ஜெபத்தை முடித்துவிட்டேன் எனது போதகர் இப்போது தான் ஜெபிக்கப் போகிறாறா என்றே வந்தவர் நினைப்பார். அந்த விசுவாசி எப்போது எழுந்துபோவார் என்ற நிலையே போதகருக்கு உருவாகும், அந்த விசுவாசியின் வேதனையான வார்த்தைகளின் மேல் போதகர் கவனம் செலுத்தமாட்டார். எப்போது பேச்சை முடிக்கலாம் என்றே எண்ணிக்கொண்டிருப்பார். சரி நான் ஜெபித்துக்கொள்ளுகிறேன் என்று கூறி அவரை துரத்தாமல் துரத்த அவர் முற்படுவாரே. அல்லவென்றால், தனது ஜெபநேரத்தை மறந்துவிட்டு அந்த விசுவாசியை முக்கியப்படுத்தி அவரோடேயே அமர்ந்துபேசி தனது ஜெபநேரத்தை இழந்துவிடுவார். மக்களோடு அமர்ந்து ஊழியம் செய்கின்ற நேரத்தில் தேவனோடு அமர்ந்திருப்பதையும், தேவனோடு அமர்ந்திருக்கும் நேரத்தில் மக்களோடு அமர்ந்திருப்பதையும் தேவன் விரும்புவதில்லை.

    தனது வீடுகளிலோ அல்லது காரிய ஸ்தலங்களிலோ மாத்திரமல்ல, தான் செல்லும் இடத்திலெங்கும் தலைவன் இச்செயலை கடைப்பிடிக்கவேண்டும். கூட்டங்களினிமித்தம் வேறு இடங்களில் தங்க நேரிட்டாலும், தலைவன் தனது தனிவாழ்வின் ஒழுக்கத்தில் தவறிவிடக்கூடாது. தனிவாழ்வின் ஒழுக்கத்தினால் தலைமுறையைப் பாதிக்கும் தலைவர்களே, உறுதியான தலைவர்கள் சந்ததியை எழும்பும் வல்லமையுடையோர். தலைவனது தடங்களை தலைமுறைகள் கவனித்துக்கொண்டிருக்கின்றனவே. தனிவாழ்வின் ஒழுங்கை பாதுகாக்க இயலாத தலைவனால் தலைமைத்துவத்தையும், தலைமைத்துவத்தின் அடியிலுள்ள மக்களையும் எப்படி பாதுகாக்கமுடியும்.

ஜெபநேரமும் தேவை, தேவன் கொடுத்த விசுவாசிகளும் தேவை. இவ்விரண்டில் எதுவும் இழக்கப்படத்தக்கதல்ல. இரண்டையும் சரியான நேரத்தில் தலைவர்கள் செய்வார்களென்னறால் இரண்டும் நேர்த்தியாய் செய்யப்படுமே. மேய்பனோ அல்லது எந்தத் தலைவனோ தனது விசுவாசிகள் விழிக்கும் முன்னதாக தனது தனிவாழ்க்கையை தேவ சமூகத்தில் வைத்து, தேவ சமூகத்திலிருந்து தனது மக்களுக்கு ஊழியம் செய்ய தயாராகிவிட்டவராகக் காணப்படவேண்டும். போதகர் ஒருவர் காலை 10 மணிக்கு ஜெபித்துக்கொண்டிருப்பார் (தனி ஜெபம்), அவரைத் தேடி ஜெபிக்கும்படிக்கு அவரது சபையின் விசுவாசி வருவார், போதகரின் வீட்டினுள் நுழைந்ததும் அந்த விசுவாசிக்கு கிடைக்கும் பதில் என்னவாயிருக்கும், 'போதகர் ஜெபத்தில் இருக்கிறார்' என்பதே. இந்தப் பதிலைக் கேட்டவுடன் அந்த விசுவாசி சென்றுவிடுவார். அவரது வேதனையைப் போக்கவேண்டிய நேரத்தை போதகர் ஜெபத்தில் போக்கிக்கொண்டிருக்கின்றார். தலைவர்கள் தங்கள் ஜெபத்தையும், வேத தியானத்தையும் சரியான நேரத்தில் செய்துமுடித்திருக்கவேண்டும்.  வேதம் வாசிக்கக் கூட சமயமின்றி ஒரு தலைவன் தன்னை கீழ்தரமான நிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. தேவனிடம் நேரம் செலவிட முடியாத அளவிற்கு அதிகமான கூட்டங்களை ஓழுங்கு செய்து, தன்னுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய அட்டவணையை ஒழுங்கீனமாக மாற்றிக்கொள்வது தலைவனுக்கு எப்படி அழகாகும். 

  தலைவன் ஒருவன் எப்போதும் ஊழியத்திற்கென்றும், மக்களின் தேவைகளுக்கென்றும் ஆயத்தமாயிருக்கவேண்டும். அழைப்பு வந்தபின்பு தன்னை ஆயத்தம் செய்வது தலைவர்களுக்கு அழகல்ல. தலைவர்கள் ஆயத்தத்துடனேயே இருக்கவேண்டும். அதிகாலையிலேயே தேவனை சந்தித்து அவரது கிருபைகளைப் பெற்று மக்களுக்கு ஊழியம் செய்ய தலைவன் தயாராகியிருக்கவேண்டும். திடீரென வரும் அழைப்புகளுக்கும் தலைவன் ஆயத்தமாயிருக்கவேண்டும். திடீரென்று பிரசங்கிக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் 'நான் ஆயத்தமாயில்லையே' என்ற சாக்குப்போக்கு தலைவர்களின் வாயிலிருந்து புறப்பட்டால் அது நன்றாயிருக்குமோ. எந்த கூட்டத்திற்கு சென்றாலும் அந்த கூட்டத்திற்கு ஒத்ததான செய்தியை தலைவன் ஆயத்தம் செய்துவைத்திருந்தால், இந்த சாக்குப்போக்கைத் தடுக்கலாமே. ஞாயிறு ஆராதனையில் தலைவாகள் பங்குபெற்றாலும், அந்த ஆராதனையில் தன்னை செய்தியளிப்பவராகக் கருதிக்கொண்டு ஒரு செய்தியுடன் ஆயத்தமாயிருப்பது தலைவர்களுக்கு எத்தனை அழகாயிருக்கும். ஒருவேளை அந்த ஆராதனையில் செய்தியளிக்கவேண்டிய நபர் வரவில்லையென்றால், அந்த அழைப்பு அங்கே அமர்ந்திருக்கும் தலைவர்களை நோக்கியே நிச்சயம் திரும்பும். அந்நேரத்தில் பயமில்லாமல், தன்னிடம் உள்ள தேவ வார்த்தையைப் பிரசங்கிக்கலாமே. தினமும் ஒரு செய்தி இது தலைவர்களின் தலையாய கடமை. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியே வரும்போது, தலைவனே உன்னிடத்தில் மக்களுக்கென்று புதிய செய்தி உண்டா, அல்லது அழைப்பு வந்தால் தான் அதை ஆயத்தப்படுத்துவாயா? நீ ஆயத்தத்தோடு இருந்தால் அழைப்பு தலைவரைத் தேடி வருமே.

ஆயத்தமுள்ளவர்களே எஜமானின் வீட்டிற்குள் பிரவேசிக்கின்றனர். தங்கள் கைகளில் எண்ணெயில்லாத கன்னிகைகளின் நிலை என்னவாயிற்று, அவர்கள் கன்னிகைகள்தான் ஆனால், வாசலுக்கே வெளியேதான் நிற்கமுடிந்தது உட்பிரவேசிக்க முடியவில்லையே. கன்னிகைகளை நாம் தலைவர்கள் என்று எடுத்துக்கொண்டால். இரண்டு தலைவர்ளின் கூட்டமும் ஆண்டவரை எதிர்கொள்ள தயாராகி புறப்பட்டது நல்லதே, ஆனால், ஒரு கூட்ட தலைவர்களின் ஆயத்தம் ஆண்டவர் வரும் வரை தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. அவர் எப்போது வந்தாலும் அவரைச் சந்திக்க அவர்கள் தயாராயிருந்தார்கள். ஆனால், மற்ற கூட்ட தலைவர்களோ, ஆயத்தப்பட்டது உண்மை, ஆனால் அந்த ஆயத்தம் மணவாளன் வரும்வரை போதுமானதாயிருக்கவில்லை, பாதியிலேயே அவர்களது ஆயத்தம் நின்றுபோனது. விளக்கோடும் அறைகுறையான எண்ணெயோடும் தான் அவர்கள் காணப்பட்டார்கள். மணவாளனள் வருகின்றார் என்ற ஆவலோடுதான் அவர்களும் புறப்பட்டார்கள், ஆனால், இப்போது, அவர் எப்போது வருவாரோ என்ற அசதிக்குள்ளாகக் காணப்படுகின்றனர். ஆயத்தமுள்ளவர்களோடு கூடவே ஆயத்தமில்லாத இவர்களும் உறங்குகின்றனர். தங்களது ஆயத்தத்தைக் குறித்தும் எண்ணெய் குறைந்துபோய்விட்ட தங்கள் விளக்கைக் குறித்தும் அவர்கள் கவலைகொள்ளுவதில்லை. அசதியும், சோம்பலும் அவர்களின் கண்களை அடைத்துப்போட்டதே அதற்குக் காரணம். நடுராத்திரியில் மணவாளன் வந்தபோது 'அவரை எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்' என்ற சத்தம் உண்டானபோது, இப்படிப்பட்ட தலைவர்களின் நிலை தடுமாறத் தொடங்கியது. அப்போதுதான் தனது விளக்கிலுள்ள எண்ணெயை அவர்கள் பார்க்கின்றனர், அதுவரை அதை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. எண்ணெயில்லாமல் திரி மங்கி எரிவது அவர்கள் ஆயத்தமில்லாதவர்கள் என்பதை அடையாளம் காட்டிக்கொடுத்தது. அவர்கள் ஆயத்தப்பட்டு வருவதற்குள் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. இது எத்தனை பரிதாபமான நிலை.  அவர்கள் ஆயத்தத்தோடு இருந்தால் அநேக இடங்களில் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தியிருக்கலாம், தலைவர்களின் ஆயத்தமின்மையே அவர்களது ஊழியத்தின் கதவு அடைக்கப்பட காரணம். ஆதியில் காணப்பட்ட ஆயத்தம் இவர்களில் இல்லை.  தலைவனின் விளக்கு திரியோடு மாத்திரமல்ல, எண்ணெயுடனும் இருக்கவேண்டும், எப்போதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும். எண்ணெயோடு ஆயத்தமாயிருக்கும் தலைவர்களோடு, எண்ணெயில்லாமல் காணப்படும் தலைவர்கள் தங்களை  தயாராக்கிக்கொள்ளவேண்டும். தினமும் தன்னுடைய விளக்கில் எண்ணெயை நிர்பபாமல், அந்த நாளின் ஊழியத்திற்கு தேவையான கிருபைகளை பெற்றுக்கொள்ளாமல் தலைவவன் காணப்படக்கூடாது, இரு சக்கர வாகனத்தின் லைசென்ஸ் ஒருவரிடம் இருக்குமென்றால், அவரிடம் மோட்டார் சைக்கிளை ஓட்டுங்கள் என்று சொன்னால், அவர் நான் ஆயத்தமாகிவிட்டு வருகின்றேன் என்று சொல்லமாட்டாரே. வாகனத்தை ஓட்ட அவர் நன்றாக அறிந்திருந்தால் எந்நேரத்தில் அதற்கான கட்டளை கிடைத்தாலும், அதற்காக அவர் ஆயத்தமாயிருப்பாரே. அதைப்போலவே ஒரு ஊழியனும் காணப்படவேண்டும், மக்களின் தேவைகளுக்கு எப்போதும் தங்களை ஆயத்தமாக்கிவைத்திருப்பதே அவரின் பிரதான பணி. தகப்பன்; வெளியூருக்கு புறப்பட்டு நிற்கும்போது, நானும் வருகிறேன் என்று அவரது இரண்டு பிள்ளைகள் அடம்பிடிக்குமானால், அதைக்கேட்டு அவரும் சரி புறப்படுங்கள் என்று சொல்வாரென்றால், ஆடைகளை ஆயத்தமாய் துவைத்து வைத்திருந்த மகன் ஓடிப்போய் உடனே அவைகளை அணிந்து ஆயத்தமாகிவிடுவான், ஆனால், அழுக்கான ஆடைகளையே உடைய மகன் என்ன செய்வான், அப்பா எனக்கு சட்டை துவைக்கவேண்டும் என்று சொல்லுவான். அவன் சட்டையைத் துவைக்கும் வர அவனது தகப்பன் காத்திருப்பாரோ? ஆயத்தமாக உள்ள தனது மற்ற மகனுடன் புறப்பட்டுச் சென்றுவிடுவாரல்லவா. இதைப்போலவே, ஆயத்தமில்லாத அநேக ஊழியர்களின் வாய்ப்புகளும் வழுவிப்போய்விடுகின்றன. 

தலைவர்களுக்கு ஏற்ற படிப்பினையைத் தரும் மற்றுமொரு உவமையையும் நாம் வேதத்தில் காணலாம். தாலந்துகளை, வரங்களை தேவனிடத்திலிருந்து வாங்கும்போது எல்லோரும் தாழ்மையோடுகூடவே காணப்படுகின்றோம். ஆனால் அந்தத் தாழ்மை நமது ஊழியத்தின் கடைசிவரை நம்மோடு கூட பயணிக்கவேண்டியதும் அவசியமான ஒன்று. தேவனிடத்திலிருந்து அதிமாய் வாங்குகிறவன் எவனும் அவருக்கு அதிகம் கணக்கு கொடுக்கவேண்டும். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகின்றதோ, அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும். இது தேவன் வகுத்து வைத்த சூத்திரம். இதை அவர் மாற்றுபவரல்ல. ஒவ்வொருவருடைய திறமைகளுக்குத் தக்கதாகவே (அவன் செய்யக்கூடிய அளவிற்கே) தேவன் ஊழியத்திற்கு தேவையான தாலந்துகளை கொடுக்கின்றார். இவ்விஷயத்தில் அதிகமாய் பெற்றவன் தன்னைக்குறித்து மேன்மை பாராட்டிக்கொள்வதோ, அல்லது குறைவாகப் பெற்றவன் தன்னை தாழ்ந்த எண்ணத்தோடு காண்பதோ தேவையில்லாதது. எந்த வரத்தைக் காட்டிலும் எந்த வரமும் சிறியதும் அல்ல பெரியதும் அல்ல. தேவன் ஒவ்வொருவனிடத்தில் எவ்வளவு கொடுத்தாரோ அதற்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால், அதையே தேவன் விரும்புகின்றார். தன்னிடத்தில் கொடுக்கப்பட்ட காரியத்தை முழுமையாக செய்துமுடிக்கவேண்டிய பொறுப்பு தலைவனுக்கு உண்டு. 

தன்னிடத்தில் எத்தனையோ ஊழியக்காரர்கள் காணப்பட்டாலும், மூன்று பேரிடத்தில் மாத்திரமே எஜமான் தனது தாலந்துகளை ஒப்படைப்பதை நாம் காணலாம். அங்கு காணப்பட்ட மற்ற ஊழியர்களைக் காட்டிலும் இந்த  மூன்று பேரும் தாலந்துகளைப் பெரும் அளவிற்கு தகுதியோடேயே எஜமானின் பார்வையில் காணப்பட்டனர். அவர்களுக்கு தாலந்துகள் கொடுக்கப்படுவதை மற்ற அநேக ஊழியக்காரர்களின் கண்கள் கண்டிருக்குமே. அப்படியிருக்க தாலந்துகளை பெற்றவர்கள் எத்தனை விழிப்புடன் இருக்கவேண்டும். தாலந்து வாங்கும்போது தன்னை தகுதியுள்ளவனாகக் காட்டிக்கொண்ட ஒரு ஊழியன், அதை வாங்கிய பின்பு புதைத்துவைத்துவிட்டான். இது எத்தனை வேதனைக்குரிய காரியம். ஊழியத்தின் பாதையில் இருக்கும் தலைவர்கள் இதனை தங்கள் மனதில் வைத்தவர்களாகச் செயல்படுவது அவசியம். மற்ற ஊழியர்களெல்லாம் தாங்கள் பெற்றுக்கொண்டதினால் சம்பாதித்தவைகளை அவரிடம் ஒப்படைத்துக்கொண்டிருக்கும்போது, இவனோ, பயத்தினால் நடுங்கிக்கொண்டிருக்கின்றான். அவரிடம் 'இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்' என்று சொல்லுகின்றான். அதை முதலாவது அவர் தரும்போதே செய்திருக்கலாமே, தன்னிடம் இத்தனை நாட்கள் வைத்து பின்பு கொடுக்கவேண்டிய அவசியம் ஏனோ? தாலந்துகளைப் பெற்றிருந்தாலும், அதை அவன் பயன்படுத்தாததினால் தண்டனைக்குரியவனாக மாறிவிட்டான். தாலந்துகளை பெறாத ஊழியர்கள் கூட எஜமானின் தோட்டத்தில் நிம்மதியாக வேலை செய்துகொண்டிருந்திருப்பார்கள். ஆனால், மற்றவர்கள் கண்கள் காண எஜமானிடம் தாலந்துகளை வாங்கிய இவனுக்கோ கிடைத்தது நரகம். அவனை செயல்படவிடாமல் தடுத்தது, எஜமானைக்குறித்த சரியான அறிவில்லாமையே. 'அவர் கடினமானவர்' என்றே எஜமானைக்குறித்து அவனது மனம் சாட்சிசொல்லிக்கொண்டிருந்தது. அவரைக் கண்டவுடன் 'ஆண்டவரே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன்' என்று எல்லார் முன்னிலையிலும் சொல்லுகின்றான். அவனது கூற்றில் எத்தனை தவறு? தேவன் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரா? இல்லையே, அவர் எங்கே தனது வசனத்தை விதைக்கின்றாரோ அங்கேயே விளைச்சலை எதிர்ப்பார்க்கின்றார்.. அந்த ஊழியனை செயல்படவிடாமல் தடுத்தது, அவரைக்குரித்த சரியான அறிவில்லாமையே. கொடுத்ததைக் கேட்டால் அவர் கடினமான மனுஷனா? இது எப்படி நியாயமாகும்?Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3