தலைமுறைகளை உருவாக்கும் தலைவன் - 6

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 6 


தலைமுறைகளை

 உருவாக்கும் தலைவன்


(Anbinmadal - published in GEMS Satham, Oct. 2023)


வார்த்தையால் வானத்தையும் பூமியையும் வடிவமைத்தவரும், வார்த்தையாகிய தனது ஒரே பேறான குமாரனையே நம்மை மீட்கும் பொருளாகக் கொடுத்தவரும் (யோவான் 3:16), இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவரும் (ரோமர் 4:17), உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தெரிந்துகொள்பவரும் (1 கொரி. 1:28), தாம் ஒருவரே ஞானமுள்ளவரும் (1 தீமோ. 1:17), ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவருமாகிய (1 தீமோ. 6:16) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நாம் எதிர்கொள்ளும் காலங்கள் கடினமாயிருந்தபோதிலும், கடந்த நாட்களைக் கடந்துவர நம்முடைய கால்களுக்குப் பெலன் தந்த தேவனுக்கே எல்லா கனமும், மகிமையும், புகழும் உண்டாவதாக!

இந்த உலகத்தில் வாழும் நாம், கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருக்காகவே நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தாலும், முற்றிலும் முழுமனதோடு ஒப்புக்கொடுத்தவர்களாக அவருடைய அடிச்சுவடுகளில் நடந்தாலும், பிறருக்கு அவரை அறிவித்து அனுதினமும் அவருக்காக ஊழியஞ்செய்தாலும், தனியொரு மனிதனாகவே ஓடி ஓட்டத்தின் இறுதியில் நாம் இருந்த இடத்தை வெற்றிடமாக விட்டுச் சென்றுவிடக்கூடாது. அப்படிச் செய்வோமென்றால், அந்த வெற்றிடம் நாம் உருவாக்கினவைகளையும் உடைத்து ஒன்றுமில்லாமற்செய்துவிடக்கூடும் அல்லது அந்த வெற்றிடத்தை நாம் விரும்பாதவைகள் வந்து ஆக்கிரமித்துவிடக்கூடும். துரத்தப்பட்ட அசுத்த ஆவி, 'நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன்' என்று ஆக்ரோஷத்தோடு, தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து உட்புகுந்ததைப் போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடந்துவிடக்கூடும் (மத். 12:44:45). இத்தகைய காட்சிகள் வீழ்ச்சிக்கு நேராகவே இராஜ்யத்தை வழிநடத்தும் (வெளி 18:2), நாம் சிரமப்பட்டு சிகரமாக உருவாக்கியவைகளைச் சீரழித்துவிடும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.  

இத்தகைய ஆபத்திலிருந்து நாமும் மற்றும் நமது தலைமுறையும் தற்காக்கப்படவேண்டுமென்றால் அல்லது தப்புவிக்கப்படவேண்டுமென்றால்,  நம்மைப் போன்ற அல்லது நம்மைக் காட்டிலும் வலிமையான சந்ததிகள் உருவாக்கப்படவேண்டுமே (சங். 127:5). மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால், என்னை விசுவாசிக்கிறவன் 'நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்' (யோவான் 14:12) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் விருப்பமாயிருந்தது. இதை விடுத்து, 'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' என்று முறைமுறையாகப் பாடும்போது, 'தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்' (1 சாமு. 18:7,8) என்று நாம் ஆத்திரமடைந்துவிடக்கூடாதே. 

தான் எடுத்துக்கொள்ளப்படவிருப்பதை எலியா அறிந்திருந்த போதிலும், தனக்குப் பின் தனது ஊழியத்தைத் தொடரவிருப்பவன் எலிசாவே என்று தெரிந்திருந்தபோதிலும் (1 இராஜா.19:16), இறுதிப் பயணத்தைத் தொடரும் எலியாவுக்கு எலிசாவை உடன் அழைத்துச் செல்ல மனமில்லை. 'நீ இங்கே இரு, நீ இங்கே இரு, நீ இங்கே இரு' (2 இராஜா. 2:2,4,6) என்று மூன்று முறை எலிசாவை எலியா தடுத்து நிறுத்துகின்றான்; தான் எடுத்துக்கொள்ளப்படுவதை எலிசா பார்த்துவிடக்கூடாது என்று எலியா நினைத்தானோ? அல்லவோ நாமறியோம். என்றபோதிலும், நிற்காமல் தொடர்ந்து எலிசா தன்னை பின்பற்றிவருவதைக் கண்ட எலியா, 'நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள்' என்று கேட்டபோது, எலிசா எலியாவை நோக்கி, 'உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்' (2 இராஜா. 2:9) என்ற தனது விருப்பத்தைக் கூறுகின்றான். இதைக் கேட்டதும், 'அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது' (2 இராஜா. 2:10) என்கிறான் எலியா. எலியாவின் இந்த பதில், தன்னிடத்திலிருப்பது தன்னைத் தொடருபவனுக்குக் கிடைக்கவேண்டும் என்ற தாராளமான மனப்பூர்வமான உள்ளத்தை வெளிப்படுத்தவில்லையே!  

'இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா?' என்று தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவினிடத்தில் கேட்டதற்கு அவன்: 'எனக்குத் தெரியும், சும்மா இருங்கள்' (2 இராஜா. 2:3,5) என்றுதானே சொல்லுகின்றான்; அப்படியென்றால், எலியா அன்று எடுத்துக்கொள்ளப்படுவது ஊரறிந்த செய்திதானே; ஆனால், தன்னுடைய ஸ்தானத்தில் அபிஷேகிக்கப்பட்ட எலிசாவை உடன் அழைத்துச் செல்ல விரும்பாதது ஏன்? என்ற கேள்வி நமக்குள் எழுகிறதே. எத்தனையாய் எலிசா எலியாவை பின்பற்றியிருந்தாலும், 'நீ இங்கே இரு' என்ற எலியாவின் வார்த்தைக்கு இணங்கியிருப்பானென்றால், ஒருவேளை கர்த்தர் எலிசாவின் ஊழியத்தை இரட்டத்தனையாக ஆசீர்வதித்திருக்கக்கூடும்; ஆனால்,   அது  எலியாவின் மூலமாக வந்த தொடர்ச்சியாக அல்ல புதியதோர் தொடக்கமாகத்தானே இருந்திருக்கும். உருவாக்கும் மனிதர்களுக்குள் எலியாவின் மனநிலை காணப்படாதிருப்பதும், உருவாகும் மனிதர்களுக்குள் எலிசாவின் மனநிலை காணப்படவேண்டியதும் எத்தனை அவசியம். ஆனால், இயேசு கிறிஸ்துவோ, தான் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன், 'பெத்தானியாவரைக்கும் தன்னுடைய சீஷர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களது கண்களுக்கு முன்பாக அல்லவோ பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (லூக். 24:50,51); எலியாவுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் எத்தனை வித்தியாசம்!

நூனின் குமாரனான யோசுவா மோசேயோடு கூடவே இருந்தபோதிலும், 'நீ உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்' (எண். 27:13) என்று மோசேயினிடத்தில் கர்த்தர் சொன்னபோது, மோசேயின் கண்கள் உடனிருந்த யோசுவாவை தனக்குப் பின் வரும் தலைவனாகக் காணவில்லையே; 'மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும்' (எண்;. 27:17) என்றுதானே மோசே ஜெபிக்கிறான். 'ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான்' (எண்; 20:26) என்று சொன்னதைப் போல, 'உன் கையிலிருக்கிற கோலை உன் குமாரனிடத்தில் கொடுப்பாயாக' என்று கர்த்தர் சொல்லக்கூடும் என ஒருவேளை மோசே நினைத்திருப்பானோ? 'தன் மகனை' மனதில் வைத்துக்கொண்டு, 'ஒரு புருஷனை' என்று மோசே வேண்டுதல் செய்கின்றானோ?  நாம் அறியோம். என்றபோதிலும், மோசேயுடன் இத்தனை காலமாக உருவாக்கப்பட்ட யோசுவாவை கர்த்தரின் கண்கள் தலைவனாகக் கண்டதே. எல்லா கனத்தையும் கொடுத்துவிட்டு, இந்த உலகத்தை விட்டு மோசே பிரிந்துசெல்லவேண்டிய நேரத்திலும், 'உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு' (எண். 27:20) என்றுதானே தேவன் கூறுகின்றார். பிரியமானவர்களே, நாம் உருவாக்கும் மனிதர்களிடத்தில், நம்முடையவைகளையும் மற்றும் கர்த்தர் நம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவைகளையும் மனப்பூர்வமாய் விட்டுச் செல்லும் மனது நம்மிடத்தில் இருந்தால் மாத்திரமே தரமான தலைமுறையினரை நாம் பெற்றெடுக்கமுடியும். நம்மை உருக்கினால் மாத்திரமே தரமான தலைமுறை உருவாகும். ஏலி மற்றும் சாமுவேல் என்பவர்களின் பிள்ளைகள், வாரிசுகள் என்ற வரிசையில்  ஊருக்கு முன் உயர்த்தப்பட்டிருந்தபோதிலும் (1 சாமு. 2:12-17; 1 சாமு. 8:3), உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருந்தபோதிலும், மதிக்கப்படத்தக்க இடத்தில் மனிதர்கள் மத்தியில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், தேவனுக்குப் பிரியமாக உருவாக்கப்படாத அவர்கள் ஜனங்களால் ஒதுக்கப்பட்டுவிட்டார்களே; தேவனும் அதை ஒத்துக்கொண்டாரே. கிதியோனின் சந்ததியும் சரிந்துபோனதை சத்திய வேதம்  நமக்கு எடுத்துக் கூறுகின்றதே (நியா. 9 அதி.). 'தலைவர்களை உருவாக்கும் நாம் நம்முடைய தலைமுறைகளையும் தரமற்றவர்களாகத் தவறவிட்டுவிடக்கூடாது' என்ற எச்சரிப்பின் செய்தியைத்தானே இத்தகைய வேத பகுதிகள் நமக்கு சுமந்துவருகின்றன. 

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன் (1 கொரி. 4:15) என்று எழுதும் பவுல், அழைத்தவரை விட்டு அகன்றுபோய்க்கொண்டிருந்த கலாத்தியரைப் பார்த்து (கலா. 1:6), என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன் (கலா. 4:19) என்ற தனது வேதனையான அனுபவத்தையும் கூடவே வெளிப்படுத்தத் தவறவில்லையே. பெற்றதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று நினைத்தால், பிள்ளைகளின் வாழ்க்கை 'விசுவாசிகள்' என்ற வரிசையிலேயே நின்றிருக்கும் அல்லது அதிலிருந்தும் சரிந்து கீழே விழுந்துவிடவும்கூடும்; ஆனால்,  'கர்ப்பவேதனை' என்ற வலியே தவறிப்போனோரைத் திருத்தவும், வருங்காலத் தலைமுறையினராக அவர்களை உருவாக்கவும் ஏற்ற வழியாக மாறும். 

'என்னிடத்தில் வாருங்கள்' 'என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்' (மத். 11:28,29) என்று இயேசு கிறிஸ்து அழைத்தாரே. அதுமாத்திரமல்ல, தனியொருவராக, தன்னைத் தேடிவரும் ஜனங்களுக்கு உபதேசிப்பதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல், வருங்காலச் சந்ததியினரையும் உருவாக்கும் சீஷர்களையும் உருவாக்கினாரே! நாம் உருவாக்குபவர்களின் மூலமாக, நாம்; செல்ல இயலாத இடங்களுக்கும் நற்செய்தியைப் பயணிக்கச் செய்ய முடியும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

உருவாக்கும் மனிதர்களைக் குறித்து தியானிக்கும் அதே நேரத்தில், உருவாக்கப்படும் மனிதர்களைக் குறித்தும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். வெளிப்புறச் சாயலாக ஒரு மனிதனைப் போல இன்னொரு மனிதன் இவ்வுலகத்தில் எங்காவது ஏதாவது ஒரு பகுதியில் காணப்படக்கூடும்; என்றாலும், அவர்களது உள்ளங்களும்;, எண்ணங்களும், சிந்தனைகளும், விருப்பங்களும் ஒன்றாயிருக்குமா? என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதுதானே பதிலாயிருக்கும்.  என்றபோதிலும், இத்தகைய வெளிப்புறத் தோற்றத்தினால் பிறரைப் போல தங்களை வெள்ளையடித்துக்கொண்டு, மற்றவர்களது தோற்றத்தைக் கொள்ளையடித்துக்கொள்வதையே இன்றைய உலகம் அதிகம் விரும்புகின்றது. தாங்கள் விரும்பும் தலைவர்களைப் போல, நடிகர்களைப் போல, நடிகைகளைப் போல, அரசியல்வாதிகளைப் போல தங்கள் சிகைகளையும், சரீரங்களையும், தோற்றங்களையும் அலங்கரித்துக்கொள்ள விரும்பும் மனிதர்கள் இவ்வுலகத்தில் அநேகர். 'நாகரீகம்' என்ற பெயரில் அருவருக்கச் செய்யும் ஆடைகளும், நாடே 'அழகு' என்று வர்ணித்தாலும் அரோசிக்கத்தக்க மற்றும் வசனத்திற்கு விரோதமான வாடை வீசும் அலங்காரங்களும் அத்துடன் உலகம் ஒத்துக்கொள்ளும் 'அநாகரீகமானவைகளும்' அவர்களால் அரங்கேற்றப்படுவது அருவருப்பானதே. 

கிறிஸ்துவைப் பின்பற்றும் தலைமுறையினரும் இந்நாட்களில் இத்தகைய உலகத்திற்கடுத்தவைகளில் தடுக்கி விழுவதும், அவைகள் சரியே என சீர்ப்படுத்துவோரிடத்தில் தர்க்கித்துப் பேசுவதும்  உருவாக்கப்படும் தலைமுறையினரைக் குறித்த கரிசனையை இன்னும் நமக்குள் பாரமாக்குகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. கர்த்தர் அருளித் தந்த வேதமும் வசனமும் மற்றும் அவைகளில் போதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கான வாழ்க்கை முறைகளும் மாறாதிருக்க, வசனத்திற்கு சற்று விகற்பமாயிருந்தாலும், 'நாம் காலத்திற்கேற்பச் சற்று மாறிக்கொள்வது தவறல்ல' என்ற போதனைக்கு இடங்கொடுத்துவிட்டவர்கள், 'ஆலயமான தங்கள் சரீரத்தில் உலகத்தை ஆளவிட்டுவிட்டார்கள்' என்பதே உண்மை. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான் என்பதும், தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம் (நீதி. 26:5,12) என்பதும் கர்த்தரிடத்தில் ஞானத்தைப் பெற்ற சாலொமோனின் வார்த்தைகள் அல்லவா! இப்படிப்பட்டவர்களைக் குறித்துதானே ஏசாயா தீர்க்கதரிசியும், 'தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!' (ஏசா. 5:21) என்று எழுதுகின்றார். மேலும், 'ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்' (யோபு 37:24) என்றும் வாசிக்கின்றோமே. பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும் (நீதி. 22:15) என்பதே ஞானியின் வார்த்தை; ஆனால், தண்டனையின் பிரம்புக்குத் தங்களைத் தூரமாக்கிக்கொண்டு, 'நெஞ்சில் ஒட்டியிருக்கும் மதியீனத்தோடு' ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறையினர் இந்நாட்களில் அநேகர். உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிற (மத். 11:17) இவர்களது வாழ்க்கையை வசனத்திற்கேற்ப வடிவமைப்பதும், திருந்தியவர்களாகத் திரும்பப் பயணிக்கச் செய்வதும் நமது கடமையல்லவா! 

அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? (எபி. 12:9) என்ற எபிரெய ஆக்கியோனின் வரிகளும் கற்றுக்கொடுப்பது இதைத்தானே! 'நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்' (எரே. 2:30) என்றும், 'அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே' (எபி. 12:5) என்றும்,   'நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?' (எபி 12:7) என்றும் இன்னும் ஆழமான வரிகளின் மூலம் எபிரெய ஆக்கியோன் கூற விரும்புவதும் 'உருவாக்குதலுக்கடுத்த' ரகசியம்தானே.

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறை யுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் (கலா. 6:14) என்பதல்லவோ அப்போஸ்தலனாகிய பவுலின் வரிகள். 'அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது' என்ற அவர் செய்து முடித்த ஒரு பகுதியோடு நம்முடைய வாழ்க்கை நின்றுவிடாமல் 'நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்'  என்ற மறுபகுதியிலும் நம்முடைய வாழ்க்கை மறுரூபப்படவேண்டும்; இல்லையென்றால், 'அவரால் சிலுவையிலறையப்பட்டவைகளை', 'உலகத்திற்குச் சிலுவையிலறையப்படாத நாம்' எந்நேரத்திலும் பொறுக்கி எடுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படி (2 பேதுரு 2:22) நமக்கும் சம்பவித்துவிடக்கூடும். 

எனவே மற்றவர்களை உருவாக்கும் பவுல் தன்னுடைய நிலையைக் குறித்து, 'கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்' (கலா. 2:20) என்றும், மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1 கொரி. 9:27) என்றும் எழுதுகின்றார்; இந்த வரிகள் பவுலை அல்ல, கிறிஸ்துவையே அவரது வாழ்க்கையில் பிரகாசிக்கச் செய்தது என்றால் அது மிகையாகாதே; அத்துடன், 'அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்' (ரோம. 12:1,2) என்று சொல்லுமளவிற்கு நமக்கு மாதிரியாகவும் மாறினதே. வருங்காலத் தலைமுறைக்கு மாதிரிகளாயிருக்கவேண்டுமென்றால், வருங்காலத் தலைவர்களாக உருவாகவேண்டுமென்றால் மேற்கண்ட உண்மையிலிருந்து நாம் ஓரமாக ஒதுங்கிச் சென்றுவிடக்கூடாது. நம்மைச் சரிப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களைச் சீர்ப்படுத்த இயலாததே.  

'முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன்' (அப். 26:29); 'சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன'; (கலா. 4:12), 'நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்' (2 தெச 3:9) என்ற பவுலின் வரிகளை உச்சரிக்கும் அளவிற்கு நமது உதடுகளும் உள்ளமும் பெலன் பெறட்டும். பிலேமோனால் சிறைக்கு அனுப்பப்பட்ட ஒநேசிமுவைக் குறித்து, 'கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமு' (பிலே. 1:10) என்று பவுல் எழுதும் வரிகள், எத்தனையாய் சிறையிலிருக்கும் அவரது உடலைத் தாண்டிய உள்ளத்தை வெளிப்படுத்துகின்றது. தலைமுறையினரை உருவாக்கும் பணியில் இத்தகைய சிந்தை நம்மையும் கவ்விப்பிடிக்கட்டும்; கிருபை உடனிருப்பதாக!


வீரர்கள் வாழ்ந்த இடம் வெற்றிடம் ஆகலாமா? 

வீழ்ந்தவன், இராஜ்யத்தை மீண்டும் வந்தாளலாமா? 

நானொருவன் என்று தினம் நாம் கணக்கு போடலாமா? 

ஏழாயிரம் இருப்பதையும் அறியாமல் நாம் வாழலாமா?


வாழும் தலைமுறையிலும் வலிமையானோர் வேண்டுமே

வாழும் தலைவர்களே அதை உருவாக்கிட வேண்டுமே 

சிங்காசனமோ, சிறையோ பொறாமையேதும் கொள்ளாமலே

சினமின்றி சிநேகத்தாலே அதை சம்பாதிக்க வேண்டுமே


சத்தியம் அறிவிக்கும் சந்ததி நித்தம் பெருகட்டும்

சத்துருவை அழித்திடும் சக்தியாய் உருவெடுக்கட்டும்

யுத்தம் செய்யும் உலகை முற்றும் அது ஜெயிக்கட்டும்

நித்தம் நித்தம் ஜெயத்தையே தன் வசமாக்கட்டும்


அன்பரின் அறுவடைப் பணியில் 

சகோ. P.J. கிருபாகரன் 

Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3