தலைமைத்துவமும் தலைமுறையும் - 5

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 5

 

தலைமைத்துவமும் 

தலைமுறையும்

www.sinegithan.in



சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டபோது,  அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான் (1இராஜா. 11:43). அப்பொழுது, ஜனங்கள் ரெகொபெயாமை நோக்கி, 'உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம்' என்று சொன்னபோது, ரெகொபெயாம் ஜனங்களை நோக்கி, 'நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள்' (1 இராஜா. 12:4,5) என்று அனுப்பிவிட்டு, தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் ரெகொபெயாமை நோக்கி, 'நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள்' என்றார்கள். (1இராஜா. 12:6,7)

புதிதாக பதவியில் அமர்ந்த ரெகொபெயாம் புத்தியாய் நடந்துகொள்ள ஏற்ற ஆலோசனைகளை முதியோர்கள் மூலமாக தேவன் வெளிப்படுத்துகின்றார். மகனாயிருந்த ரெகொபெயாம் எத்தனையாய் தன் தகப்பனோடு நேரம் செலவிட்டு, தேவன் தகப்பனுக்குக் கொடுத்திருந்த ஞானத்தைக் கேட்டறிந்திருந்தானோ நாம் அறியோம்; ஆனால், அந்த முதியோர்கள், அவன் தகப்பனாகிய சாலொமோனுக்கு தேவனால் அருளப்பட்டிருந்த ஞானத்தைக் கேட்டவர்கள், அவனது தகப்பனாகிய சாலொமோன் கர்த்தருக்கு விரோதமாகச் செய்த தவறுகளையும் கூடவே இருந்து கண்ணாரக் கண்டவர்கள். சாலொமோன் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்போதும் உடனிருந்திருப்பார்கள், அநேகம் ஸ்திரீகளை சேர்த்துக்கொண்டதையும் பார்த்திருப்பார்கள், பரலோக தேவனுக்கு ஆலயம் கட்டின அதே கைகளினாலேயே அந்நிய தேவர்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் சாலொமோன் ஆலயத்தைக் கட்டினதையும் பார்த்திருப்பார்கள். ஒருவேளை தகப்பனாகிய சாலொமோன் தவறும்போது, அவன் ராஜாவாயிருந்தபடியினால் தட்டிக் கேட்க இயலாத நிலையில் இந்த முதியவர்கள் இருந்திருக்கக்கூடும்; அல்லது, சாலொமோன் தவறும்போது, இந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லியும், ராஜா என்ற அகம்பாவத்தில் சாலொமோன் அவைகளை அசட்டைபண்ணியிருக்கக்கூடும். சாலொமோனின் வளர்ச்சியையும் பார்த்தவர்கள் அவர்கள்; அவ்வாறே, சாலொமோனின் வீழ்ச்சியையும் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அடுத்த தலைமுறையிலாவது ராஜ்யத்தைக் காப்பாற்றிவிடவேண்டும் என்ற தரிசனத்தோடு அந்த முதியவர்கள் காணப்பட்டிருக்கக்கூடும்; அவ்வாறு ராஜ்யத்தைக் காப்பாற்ற, முதியவர்களாகிய தங்கள் ஆலோசனைகளை சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் நிச்சயம் கேட்பான் என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருந்திருக்கக்கூடும். தங்களுக்கும் ரெகொபெயாமுக்கும் அதிக வயது இடைவெளி இருப்பதினால், மூத்தவர்கள் என்ற ஸ்தானத்தில் ரெகொபெயாம் தங்களுக்கு முதலிடம் கொடுக்கக்கூடும் என்று நினைத்திருக்கக்கூடும்; ஆனால், நடந்ததோ, தலைகீழ். அது விபத்தாக மாத்திரமல்ல, விபரீதமாகவும் முடிந்தது. 

'ஜனங்களிடத்தில் என்ன சொல்லுவது?' என்று சிந்திக்கத்தொடங்கினபோது, முதலில் ஆலோசனைகளைப் பெறும்படியாக முதியவர்களை ரெகொபெயாம் அழைத்தது சரிதான்; என்றாலும், முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணினதினால் (1இராஜா. 12:8) அவன் இராஜ்யம் சரிந்துபோயிற்றே! இரண்டாகப் பிரிந்துபோயிற்றே!

இன்றைய நாட்களிலும், ஊழியங்களில் விரிசல்கள் உண்டாவதற்கும், பிரிவினைகள் வளருவதற்கும் காரணம் இதுவே. அஸ்திபாரக் கற்கள் அகற்றப்படுவதினாலேயே, அதின் மேல் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களும் ஆட்டங்காணத் தொடங்குகின்றது. தவைர்களுக்குப் பின் வரும் தலைமுறைகள், முதியவர்களுக்கும் தங்களுக்கும் இடையிலான உறவினை வளர்த்துக்கொள்ளாமல், தங்களோடு வளர்ந்தவர்களுடனேயே பின்னிப் பிணைந்து வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வதினால், முதியவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகிக்கொண்டேயிருக்கின்றது. ஆலோசனை என்ற பெயரில் முதியவர்கள் தங்கள் மீது ஆளுகை செய்துவிடக்கூடாது என்றும், முதியோர்களின் கைகளில் தாங்கள் ஒருபோதும் கைப்பாவைகளாகிவிடக்கூடாது என்றும், தலைமைத்துவத்தில் இருக்கும் சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ள முதியவர்களுடனான உறவு ஒருபோதும் தடையாகிவிடக்கூடாது என்றும், முதியவர்கள் ஏதாகிலும் சொல்லிவிட்டால் அதற்கு முரண்பட்டு நிற்பது கடினமானது என்றும், முதியவர்கள் தங்களுக்கு வழிகாட்ட வைக்கப்பட்டவர்கள் என்பதை மறந்து, முதியவர்களால் தாங்கள் விரும்பிப் பயணிக்கும் வழிகள் அடைக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், முதியவர்களைக் கையாளுவது கடினம் என்றும் கருதி, வெளிப்படையாக மதிப்பளித்தாலும், மனதளவிலோ அவர்களை மறுத்து விலகிச்செல்லவும், தங்களது வாhத்தைகளை மதிக்கும் மனிதர்களோடு மாத்திரமே பயணிக்கவும் விரும்புகின்றது இன்றைய இளைய தலைமுறை; இதுவே, இளைய தலைமுறை தலைவர்களின் இடறுதலுக்கான காரணம். 

ஒருபுறம் முதியோர்களின் ஆலோசனையைக் கேட்டபோதிலும், அவன் அதைக் கேட்க மனதற்றவனாகத் தள்ளிவிட்டான் (1இராஜா. 12:8) என்றே வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார்; நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார்; நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன், என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார்; நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்ல வேண்டும் (1இராஜா. 12:10,11) என்று சொன்னபோது, அழிவுக்கேதுவான அந்த ஆலோசனையே அவனுக்கு அழகானதாகத் தோன்றுகின்றது. 

தன்னோடு வளர்ந்த வாலிபர்களுக்காக ராஜ்யத்தையே பறிகொடுத்தவன் ரெகொபெயாம். இந்த ரெகொபெயாமுக்கு கர்த்தர் கொடுத்தது இறுதியில் ஒரு பங்கே. இன்றைய தலைமுறைத் தலைவர்களாகி நாமும், இளைய தலைமுறையினராக தலைமைத்துவத்தை அலங்கரிக்க அடியெடுத்துவைக்கும் மனிதர்களும் இச்சத்தியத்தை நினைவில்கொண்டால், அஸ்திபாரங்கள் அசைக்கப்படாமல் நாம் காத்துக்கொள்ளமுடியும். இல்லையென்றால், இதோ, துன்மார்க்கர் வில்லைவளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்? (சங். 11:2,3) என்று புலம்பும் நிலைதான் உண்டாகும். 

Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3