திங்கள், 26 அக்டோபர், 2026

கனத்தைக் கடத்தும் தலைவர்கள் -19

 கனத்தைக் கடத்தும் தலைவர்கள் - 19


கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே! பரிசுத்தத்திற்கென்றும் பரலோகத்திற்கென்றும் நம்மை அழைத்து முன்குறித்து தெரிந்தெடுத்திருக்கின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

'என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்' (1சாமுவேல் 2:30) என்ற தனது வார்த்தையின்படி, அநேகரை தேவன் கனப்படுத்தியிருக்கின்றார். என்றபோதிலும், தலைவர்கள் அந்த கனத்தை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். இன்றைய நாட்களில், தேவனிடத்திலிருந்து தாங்கள் பெற்ற கனத்தை தலைவர்கள் பலர் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தவறிவிடுகின்றனர். 'என்னை விசுவாசிக்கிறவர்கள் என்னிலும் பெரிதானவைகளைச் செய்வார்கள்' என்று இயேசு சொன்னாரே! ஆனால், இன்றோ, பல தலைவர்கள் தங்களைப் பின்பற்றும் அல்லது தங்களிடத்தில் உள்ள மனிதர்கள் தங்களிலும் பெரியவர்களாக மாறிவிடக்கூடாது, உருவெடுத்துவிடக்கூடாது, ஜனங்களால் பாராட்டப்பட்டுவிடக்கூடாது, ஜனங்கள் தங்களுக்கு இதுவரை அளித்துவரும் மரியாதை அவர்கள் மேல் போய்விடக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். தங்களைக் காட்டிலும் ஒருவர் மேலாக உயரும்போது, வசனத்தின் ஆழத்தைப் பேசும்போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறும்போது, அவர்களை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, அத்தகையோரைத் தட்டி தட்டி, குட்டி குட்டி தனது குணத்தினால் கொட்டி கொட்டி மட்டந்தட்ட விளையும் தலைவர்கள் இன்றைய உலகில் ஏராளம். 

மோசே தேவனால் அழைக்கப்பட்டவன், தேவனுக்கென்று தன்னை அர்ப்பணித்தவன்;, பார்வோனுக்கு முன்பாக தேவனை இருக்கிறவராக நிரூபித்தவன்; வாதைகளால் எகிப்தை தேவன் வதைத்தபோது வல்லமையாய் தேவனால் பயன்படுத்தப்பட்டவன். இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்தினின்று புறப்படப்பண்ணி, அற்புதங்களால் வழிநடத்த தேவனால் உபயோகப்படுத்தப்பட்டவன்; தேவனோடு நேரடித் தொடர்பு கொள்ளும் நிலையில் இருந்தவன். தேவனுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயல்பட்டவன். என்றபோதிலும் தனக்குப் பின் ஆடுகளை நடத்தும் மேய்ப்பனை அடையாளம் கண்டு கொள்ள இயலாதவனாகவே தனது வாழ்க்கையின் இறுதிவரை அவன் காணப்பட்டான். தன்னுடைய ஆவி எல்லாருக்குள்ளும் வரவேண்டும் என்று விரும்புகிறவனாக அவன் காணப்பட்டபோதிலும்,  தன்னைப் போல தலைவன் ஒருவனை உருவாக்கவேண்டும் என அவன் அத்தனையாய் அக்கறை கொண்டிருக்கவில்லை. 

'பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார். நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டதுபோல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்' (எண்;ணாகமம் 27:12,13) என்று சொன்னபோது, மோசே கர்த்தரை நோக்கி: 'கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு, அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதி;காரியாக ஏற்படுத்தவேண்டும்' (எண்; 27:16,17) என்கிறான். ஆடுகள் சிதறடிக்கப்பட்டுப்போகுமே என்ற கவலையும் கரிசனையும் அவனிடத்தில் இருந்தபோதிலும், அந்த ஜனங்களைக் கவனிக்கவும், அவர்களுக்குத் தலைமை ஏற்று நடத்த அடுத்தவும் ஒரு தலைவனை உருவாக்கவேண்டும் என்ற கரிசனை அவனிடத்தில் இல்லாமல் போயிற்றே. அவனோடே கூட இருந்த, உதவியாயிருந்த யோசுவாவை தேவன் அடுத்த தலைவனாக அடையாளம் கண்டுகொண்டபோதிலும், மோசேயால் யோசுவாவை அடையாளம் காட்ட இயலாது போயிற்றே. 

ஜனங்களுக்குக் கொடுக்கவேண்டிய பத்துக் கட்டளைகளை தேவனிடத்திலிருந்து பெற்றவனாயிருந்தபோதிலும், தேவன் காண்பித்த ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரியைப் பார்த்தவனாக மோசே காணப்பட்டபோதிலும், தேவ கரத்தினால் செய்யப்பட்ட எத்தனையோ அற்புதங்களையும் அடையாளங்களையும் ருசித்தவனாகவும் பார்த்தவனாகவும் அனுபவித்தவனாகவும் அவன் காணப்பட்டபோதிலும், சிநேகிதனோடே பேசுவதைப் போல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினபோதிலும், கர்த்தருடைய ஆவியைப் பெற்ற நூனின் குமாரனாகிய யோசுவாவை அடுத்த தலைவனாகப் பார்க்கக்கூடாதவனாயிருந்தான் மோசே. யோசுவா ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதவனாயிருந்தாலும், அவனைத் தலைவனாக்க மோசே ஆசை கொண்டதில்லை. தன்னுடைய தலைமைதம்துவத்தை யாரிடம் கொடுப்பது என்ற கேள்வியுடையவனாக ஒருவேளை மோசே காணப்பட்டிருக்கக்கூடும் அல்லது தன்னுடைய குமாரர்கள் தேவனால் ஒருவேளை அடையாளம் காட்டப்படுவார்களோ என அவன் நினைத்திருப்பானோ? நாம் அறியோம்! 

என்றபோதிலும், கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து, இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு (எண்ணாகமம் 27:18-20) என்று சொல்லுகின்றார். இன்றும் பல தலைவர்களின் நிலை இப்படியே; தான் மரிக்கும் வரை தேவனிடத்தில் அடுத்தவரை அடையாளம் காட்ட இயலாத நிலை. 'கனத்தில் கொஞ்சம் கொடு' என்று கர்த்தரே சொல்லும் நிலை. அநேக மேய்ப்பர்கள், ஊழியர்கள் மற்றும் தலைவர்களின் மரணத்தின்போது மந்தைகள் சிதறிப்போவதற்கும், ஊழியங்கள் சீரழிந்துப்போவதற்கும் காரணம் இதுவே! 

மோசேயின் மேலிருந்த ஆவியை அவன் கைகளை வைத்தபோது, எழுபது பேர் மீது கர்த்தர் வைத்தார் தேவன் (எண்ணாகமம் 11:25); வராமல் பாளையத்தில் இருந்தவிட்ட இருவர் மீதிலும் கூட அந்த ஆவி வைக்கப்பட்டது. ஆனால், அருகிலிருந்த யோசுவாவைக் குறித்தோ மோசே அத்தனையாய் கவலைப்படவில்லை, ஏனெனில் அடுத்த தலைவனாக யோசுவாவை மோசேயின் கண்கள் காணவில்லையே! மோசே யோசுவாவை யுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தினான் (யாத்திராகமம் 17:9). ஆனால், அவனை தன் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கவில்லை. கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வை (எண்; 27:18) என மோசேக்குக் கட்டளை கொடுக்கவேண்டியதிருந்தது. இன்றும், தரமான தலைவர்கள் பலர் இருந்தும், தங்களது தலைமுறைகள் தான் அநேகருடைய தலைவர்களின் கண்களில் தெரிகின்றது. ஊழியத்திற்காக கர்த்தர் கொடுத்தவைகளை தாங்கள் சம்பாதித்ததாகக் கருதுவதினாலேயே இன்று அநே ஊழியங்களின் சொத்துக்கள் தலைவர்களிடமிருந்து கைமாறாமலிருக்கின்றன. சொந்தங்களையும், வாரிசுகளையும் வலுக்கட்டாயமாக இழுத்து, கர்த்தருடையதைத் தங்களுடையதாகக் கருதி அதனை தக்கவைக்கவும் மற்றும் பாதுகாக்கவும் பிரயாசப்படுபவர்கள் அநேகர்; இது எத்தனை அபயமான செயல். தேவன் நம்மிடத்தில் கொடுப்பவைகளை, தரமான, தேவனுக்குப் பிரியமான நபராக எவர் காணப்பட்டாலும், அவர்களுடைய கரத்தில் கையளிக்கும் குணம் தலைவர்களுக்குள் உருவாக வேண்டும். இந்த குணமில்லாததினாலேயே அநேக ஊழியங்களின் சம்பத்துக்கள் இன்று குடும்பச் சொத்துக்களாகிவிட்டன. வல்லவர் கையிலிருந்து வாங்கின ஊழியம் பெருகியதினால், அதனை வியாபாரத்தில் கிடைத்த இலாபமாகக் கருதிவிட்ட தலைவர்கள் தடம் புரண்டவர்களே. அத்தகைய ஊழியத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருந்தாலும், வல்லமையாய் தேவனால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சுயம் என்ற சுவற்றிற்குள் தங்களை அடைத்துக்கொண்ட கைதிகளே! 

கர்த்தர் எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்போகிறபோது, தேவனால் எலியாவின் ஸ்தானத்தில் அடையாளம் காட்டப்பட்ட எலிசா, கர்த்தர் எலியாவை நோக்கி, 'ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு'  என்று சொன்னபோது, எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான் (1இரா 19:16). என்றாலும், எதற்காக சால்வையை போடுகிறான் என்பதையோ எலியா எலிசாவினிடத்தில் சொல்லவில்லை. ஆயினும், ஏர் பூட்டி உழுதுகொண்டிருக்கும் தன்மீது ஏன் இந்த சால்வை விழுகின்றது? என்பதை எலியாவின் செயல்களினாலேயே புரிந்துகொண்டவனாக, அதன் அர்த்தத்தையும், அர்ப்பணிப்பினையும், அழைப்பினையும் கூடவே உணர்ந்துகொண்டவனாக, 'என்னைப் பின்பற்றி வா' என்று எலியா வாயினால் உச்சரித்து அழைக்காமலேயே,  'அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்கிறான் எலிசா.  

'எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு' (1இராஜா. 19:16) என்று கர்த்தர் தெளிவாக எலியாவுக்குச் சொல்லியனுப்பியிருந்தாரே. அப்படியென்றால், கர்த்தர் தன்னிடத்தில் சொல்லியிருந்த அந்த செய்தியை எலியா தெளிவாக எலிசாவுக்கு எடுத்துரைத்திருந்திருக்கலாமே. தன்னுடைய ஸ்தானத்தில் இன்னொரு தீர்க்கதரிசி அபிஷேகம்பண்ணப்படுகிறானே என்ற வருத்தம் எலியாவின் இதயத்தை ஒருவேளை அவ்வேளையில் நிறைத்திருந்திருக்கக்கூடுமோ? 'எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு' என்று கர்த்தர் சொல்லியிருக்க, அபிஷேகத்திற்கான எந்த ஒரு காரியத்தையும் எலியா செய்யவில்லையே. 'எலிசாவை அபிஷேகம்பண்ணு' என்று சொல்லிவிட்டாரே, எனவே, வெறுமனே சால்வையை மட்டும் அவன் மீது வீசிவிட்டு போய்விடுவோம், மீதியை கர்த்தர் பார்த்துக்கொள்ளட்டும் என்று எலியா நினைத்திருப்பானோ? தன்னுடைய ஸ்தானத்தில் இன்னொருவனா, தனக்குப் பின் இன்னொருவனா, தன்னோடுகூட இன்னொருவனா, தன்னைப் போல இன்னொருவனா, தான் விரும்பாத இடத்தில் இன்னொருவனா, தான் சாகவேண்டும் என்று நினைக்கின்ற ஊழியத்தில் உயிரோடு இன்னொருவனா என்ற பல்வேறு நினைவுகள் ஒருவேளை எலியாவை துளைத்தெடுத்திருக்கக்கூடுமோ?  அழைக்கும்படியாக அனுப்பின மனிதன், அழைப்பினைக் குறித்து அத்தனை தெளிவாக எடுத்துச்சொல்லாதபோதிலும், சால்வையை எலிசாவின்மேல் போட்டபின், என்னைப் பின்பற்றி வா என்று அழைக்காதபோதிலும், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதனாகிய எலிசாவோ, தேவ மனிதன் தன்னிடத்தில் செய்த சிறியதோர் செயலில் தனது அழைப்பினை தெளிவாகப் புரிந்துகொண்டானே. 

எலியாவோடு கூட கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோதிலும், எலியா எலிசாவை நோக்கி, 'நீ இங்கே இரு; கர்த்தர் என்னை பெத்தேல் மட்டும் போக அனுப்புகிறார்' என்றும், எலிசாவே, 'நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார்' என்றும், 'நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார்' (2 இராஜாக்கள் 2:2,4,6) என்றும் எலிசா தன்னைப் பின்தொடராதபடிக்குத் தடுத்து நிறுத்துகின்றான். இதற்குக் காரணம் என்ன? தன்னைப் பின்தொடரும் எலிசா, ஒரு பெரிய தரிசனத்தோடு தன்னைத் தொடருகின்றான் என்பதை எலியா அறியாததே! எலிசாவுக்குத் தலைமையாயிருக்கிற எலியா எடுத்துக்கொள்ளப்படுகிறதை அறிந்திருந்த பெத்தேலின் தீர்க்கதரிசிகளின் புத்திரரும், எரிகோவின் தீர்க்கதரிசிகளின் புத்திரரும் எலிசாவை நோக்கி, 'இன்றைக்கு உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார்' என்று சொன்னபோதிலும், 'எனக்குத் தெரியும்; சும்மா இருங்கள்' (2 இராஜாக்கள் 2:3,5) என்று தலைவனுக்குப் பின்னாகவே தனது பயணத்தைத் தொடர்ந்தான் எலிசா. இன்றைய நாளிலும், தனக்கடுத்த தலைமுறைத் தலைவர்களை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், 'நீ இங்கே இரு' 'நீ இங்கே இரு' என்றும் சொல்லிக்கொண்டேயிருக்கும் தலைவர்கள் உண்டு.   

இத்தனையாய் எலிசா தன்னைப் பின்தொடருவதின் காரணத்தை அறிந்துகொள்ளும்படியாக, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்று கேட்டபோது, அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்கிறான் (2 இராஜாக்கள் 2:9). அப்பொழுது எலியா, 'அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது' என்கிறான் (2 இராஜாக்கள் 2:10). தேவனால், தெரிந்துகொள்ளப்பட்டிருந்தபோதிலும், தனது பயணத்தின் இறுதிவரை எலிசாவை எலியா உடன் அழைத்துச்செல்ல விரும்பாதது சிந்தனைக்குரியதல்லவா! இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்படும்போது தனது சீஷர்களை உடன் அழைத்துச்சென்றாரே! அதனால்தானே அவர்கள் அத்தனை பெலமான சாட்சிகளாக அவருக்கு சாட்சிபகர்ந்தார்கள். 

அதுமாத்திரமல்ல, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு என்று கர்த்தர் எலியாவினிடத்தில் சொன்னபோது,   எலிசா இருக்கும் இடமட்டும் போய், அவன் மேல் தன் சால்வையைப் போட்டான் எலியா (1இராஜாக்கள் 19:16,19); என்றபோதிலும், அந்த சால்வையை எலிசாவுக்கே எலியா கொடுத்துவிடவில்லை; மீண்டும் எடுத்துக்கொண்டான். ஒருவேளை எலியா தன் சால்வையை எலிசாவினிடத்தில் கொடுத்துவிடவேண்டும் என்று தேவன் எதிர்பார்த்திருப்பாரோ? அதனால்தான் எலியா சுழல்காற்றினால் எடுத்துக்கொள்ளப்படும்போது, சால்வையை கீழே விழச்செய்தாரோ? இன்றைய நாட்களிலும், அநேக தலைவர்கள், அதிகாரங்களைக் கொடுப்பதைப்போல கொடுத்துவிட்டு மீண்டும் தன்வசத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் சுழல்காற்றிற்குப் பின்னர்தான் அவர்கள் கைவசமிருந்த சால்வை கீழே விழும். பிரியமானவர்களே! தலைவர்களாகிய நம்முடைய கரங்களில் கர்த்தர் கொடுத்திருக்கும் தலைமைத்துவப் பணிகளை, கர்த்தர் தெரிந்துகொண்ட மனிதர்களிடம் கையளிக்க நாம் எப்போதும் ஆயத்தமாயிருக்கவேண்டுமே. நம்முடைய அதிகாரங்களை விழச்செய்ய சுழல்காற்றை வீசச்செய்யும் நிலையில் தலைவர்களாகிய நாம் காணப்படக்கூடாது. 

பிரியமானவர்களே! நமக்கு அருகில் இருப்பவர், நமது தலைமைத்துவத்தை ஏற்கும்படியாக ஒருவேளை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நபராக இருக்கலாம்; ஆனால், நம்மால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? நமக்கு அருகில் இருப்பவர்களை வேலையாட்களாக மாத்திரமே பார்த்துக்கொண்டிருக்கும் தலைவர்களாக நாம் காணப்படாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக! நம்மேல் இருக்கும் ஆவி அவர்கள் மேலும் வரவேண்டும் என ஜெபிப்பவர்களாக நாம் காணப்படவேண்டும். நம்முடைய அதிகாரத்தை, நம்முடைய கனத்தில் கொஞ்சத்தை அவர்களுக்குக் கொடுக்க நம்மால் முடிகிறதா? இதனை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எலியாவுக்கு எலிசாவையும், சாமுவேலுக்கு தாவீதையும் தேவனே அடையாளம் காட்டிக்கொடுத்தார். பாரத்தை மற்றவர்கள் மேல் திணித்து திணித்து ஆடுகளையே மாடுகள் போல் வேலை வாங்கும் தலைவர்கள் ஏராளம். ஆனால், ஆடுகளுக்கும் ஆளும் அதிகாரத்தைக் கொடுக்கும் தலைவர்களாக  நாம் மாறவேண்டுமே; ஆடுகளையும் மேய்ப்பனாக  பார்க்கும் ஆவிக்குரிய கண்கள் நமக்கு வேண்டுமே! இன்று, கனத்தைச் (weight) சுமத்தும் தலைவர்கள் பலருக்கு, கனத்தைக்  (responsibility) கொடுப்பதற்கு மனதில்லையே! அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (மத்தேயு 10:1) என்ற இயேசு கிறிஸ்துவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக