தேவனையே நம்பும் தலைவன் - 16
தேவனையே நம்பும் தலைவன்
'நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.' 1 சாமுவேல் 17:45
தலைமைத்துவம் என்பது, நம் உடன் இருக்கும் மனிதர்கள் மீதோ, அல்லது சகோதரர்கள் மீதோ அல்லது உடன் பணிசெய்வோர் மீதோ அதிகாரம் செலுத்துவது அல்ல; மாறாக, தேவன் நம் ஒவ்வொருவரின் தோள்களின் மீது வைத்துள்ள பொறுப்பை சுமையாக அல்ல சுகமானதாக உணர்ந்தவர்களாக அதனை ஏற்றுக்கொள்வதும், தேவன் ஒருவரை மாத்திரமே முழுவதும் நம்பிச் சார்ந்தவர்களாக வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும், பாதைகளிலும் மற்றும் பணிகளிலும் முன்னேறிச் செல்வதுமாகும். தலைமைத்துவத்தை அடைந்ததும், தேவனை விட்டுத் தூரமாகச் சென்றுவிடும் தலைவர்கள் பலர், 'தலைவர்கள்' என்று பிறரால் போற்றப்பட்டாலும், தேவனற்றவர்களாக, அதாவது தேவ தயவோ உதவியோ துணையோ இல்லாதவர்களாக தனித்தே விடப்பட்டுவிடுகின்றனர் என்பது பரிதாபத்திற்குரிய செய்தியே! 'என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை' (யோவான் 8:29) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள். இத்தகையை வார்த்தைகளை எப்போதும் சொல்ல இயலாதவர்களாகவோ அல்லது அத்தகையை உறவினை இழந்தவர்களாகவோ தலைவர்கள் ஒருபோதும் காணப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26). உலகம் முழுவதாலும் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களாக நாம் இருந்தாலும், விண்ணவரோடுள்ள உறவு விடுபட்டுப்போகுமாயின் வெளிச்சமில்லாத இருளிலேயே தலைவர்களாயினும் வாழ்க்கையைக் கழிக்க நேரிடும்; இத்தகைய நிலைக்கு கர்த்தர் நம்மை விலக்கிக் காப்பாராக!
தேவனை விட்டுப் பிரியாத தலைவன், தேவனோடுள்ள உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைவன், தன் வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும், அது இன்பமானாலும் துன்பமானாலும் தேவனையே முன்நிறுத்தக் கற்றுக்கொண்டவன் என்பதை மறுப்பதற்கில்லை. அனனியாவும் சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்று ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, பேதுருவினிடத்தில்தான் பொய் சொன்னார்கள்; ஆனால், பேதுருவோ, 'நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய்' (அப்போஸ்தலர் 5:4) என்று சொல்லுகின்றாரே! இது எப்படி? தன்னை அல்ல, தேவனை பேதுரு தன் வாழ்க்கையில் முன்நிறுத்துவதாலேயே! தன்னிடத்தில் பொய் சொல்லிவிட்டார்கள் என்று பேதுரு வருத்தப்படவும் இல்லை, கோபப்படவும் இல்லை; மாறாக, தன்னோடு கூட இருக்கும் தேவனைத் துக்கப்படுத்திவிட்டார்கள் என்பதே பேதுருவின் பார்வை; இப்படிப்பட்ட தலைவர்களிடத்தில் உரசினால்கூட உயிருக்கு ஆபத்துதான்! கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா. 2:20) என்று பவுல் எழுதுவதும், பார்வோனுக்கு முன் நின்ற யோசேப்பு, 'நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார்' (ஆதி 41:16) என்று சொல்லுவதும் இதைத்தானே வெளிப்படுத்துகின்றன. பவுலும் பர்னபாவும் லீஸ்திராவிலே தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்திருந்த மனிதனை நடக்கச் செய்ததை ஜனங்கள் கண்டு, யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டு வந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தபோது, மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம் (அப் 14:13-15) என்று தேவனையல்லவோ முன்நிறுத்தினார்கள். பிரியமானவர்களே! இப்படிப்பட்ட வளர்ச்சியடைந்த ஆவிக்குரிய வாழ்க்கைக்குள் நுழைய ஆண்டவர் நமக்கு அருள்புரிவாராக!
வேதாகமத்தில் தலைமைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய பல தேவமனிதர்களுள், தாவீதும் ஒருவன். தாவீது அரண்மனையில் வளர்ந்தவன் அல்ல; மாறாக, ஆடுகளை மேய்த்த சாதாரணதோர் மேய்ப்பன். என்றபோதிலும், தேவன் தாவீதை ஒரு சிறந்த தலைவனாக உருவாக்கினார், தன் ஜனத்தை ஆளத் தகுதியான அரசனாகவும் அவனைத் தெரிந்துகொண்டார். வீழ்ந்துபோன சவுலின் சிங்காசனத்தில் அரசனாக ஒருவனை வீற்றிருக்கச் செய்ய, 'தன்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தேடினார்' தேவன் (1 சாமு. 13:14) என்பதே வேதம் நமக்குத் தரும் தகவல்; இதற்குத் தகுதியாயிருந்து சிங்காசனத்தில் அமர்ந்தவன்தான் தாவீது. 'தன்னோடு தேவன் இருக்கிறார்' என்ற தைரியமே தாவீதை வீரனும் தைரியமுள்ளவனுமாக மாற்றியது. உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து,அதை அடித்துக் கொன்றுபோட்டேன் (1சாமு. 17:34,35) என்ற தாவீதின் கூற்று, 'தேவன் அவனோடிருந்ததை உணர்ந்து அவன் செய்துமுடித்தவைகளின் வெற்றியையே வெளிப்படுத்துகின்றது'.
கோலியாத்தை அவன் பார்த்தபோதும், கோலியாத்தையும் தன்னையும் தாவீது ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. கோலியாத்தின் உருவத்தையோ, கவசங்களையோ, அவன் அணிந்திருந்த யுத்த ஆடைகளையோ, வைத்திருந்த ஆயுதங்களையோ கண்டு தாவீது அஞ்சவில்லை; காரணம், 'தாவீது தன்னையும் கோலியாத்தையும் போர்க்களத்தில் பார்க்கவில்லை'; மாறாக, 'கோலியாத்தையும் தேவனையுமே போர்க்களத்தில் பார்த்தான்'. தன்னை நிந்தித்ததாக தாவீது எண்ணவில்லை; மாறாக, 'நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன்' (1சாமு 17:45) என்றே சொல்லுகின்றான்.
அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தபோது (எண்; 13:32,33), நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் (எண்; 13:30) என்கிறான் காலேப்; இந்த தைரியம் எப்படி வந்தது? மற்றவர்கள் கானான் தேசத்து ஜனங்களையும் தங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள்; ஆனால், காலேப், தேவனையும் கானான் தேசத்து ஜனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வெற்றியைக் கணக்கிட்டான். கிறிஸ்துவில் பிரியமானோரே! தேவன் இந்நாட்களில் தேடுவது, திறமையானவர்களை அல்ல; தம்மை முழுவதுமாக நம்புபவர்களையே! அவர்களயே தன்னுடைய இராஜ்யத்திற்கும் இவ்வுலக மாந்தர்களுக்கும் பயனுள்ளவர்களாக மாற்றுகிறார்.
பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் தேவனையே நம்பும் தலைவர்களாகவும், இன்பத்திலும் துன்பத்திலும் அவரையே முன்நிறுத்தி வெற்றியினைத் தக்கவைத்துக்கொள்ளும் தலைவர்களாகவும் வாழ தேவன் நமக்கு கிருபை செய்வாராக!
சிந்திப்போம்:
என் தலைமை மனித ஞானத்தின் மேல் இருக்கிறதா, தேவன் மேல் இருக்கிறதா?
சவால்களைப் பார்த்து பயப்படுகிறேனா, அல்லது தேவனை நம்பி முன்னேறுகிறேனா?
என் வாழ்க்கை தேவனுக்கே மகிமை சேர்க்கிறதா?
'கர்த்தாவே, தாவீதைப் போல உம்மை முழுமையாக நம்புகிற தலைவராக என்னை உருவாக்கும். பயத்தை வேரருத்து, விசுவாசத்தில் வளர்ச்சியடைந்து, சுயமகிமையைத் தூக்கி எறிந்து, உம்மையே ஒவ்வொரு நாளும் வாஞ்சிக்க கிருபை தாரும். நான் அல்ல நீரே என்று சொல்லும் பாத்திரமாக என்னை மாற்றும்' ஆமேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக