சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4
தலைவனும், தலைமுறையும்
தொடர் - 4
சுகம் தேடாமல்,
சுமை தாங்கும் தோள்கள் - 4
தலைமைத்துவம் என்பது, தங்கள் சுமைகளை எளிதாக்கிக்கொள்வது அல்ல; மாறாக, சுமப்பதற்கரிதான சுமைகளுக்காகவும் தங்கள் தோள்களை ஆயத்தப்படுத்திக்கொள்வது. தலைமைத்துவம் என்பது தங்களுடைய சுமைகளையும் மற்றவர்களின் தோள்களின் மேல் இறக்கிவைப்பதல்ல; மாறாக, மற்றவர்களுடைய சுமைகளையும் தங்கள் தோள்களின் மேலே ஏற்றிக்கொள்வது. புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் (மத். 20:25-27) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. 'நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது' (அப். 20:34) என்பதுதானே அப்போஸ்தலனாகிய பவுலினுடைய வாழ்க்கையின் அறிக்கை.
மேலும், நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும்படுகிறோம். ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும் (1கொரி. 9:11-15) என்ற பவுலின் வார்த்தைகள் எத்தனை ஆழமான அர்ப்பணிப்புள்ளவைகள். சரீரத்திற்கான இத்தகைய சுமைகள் தலைவர்களுக்கு ஒருபுறமிருக்க,
ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அடுத்த சுமைகளை விட்டும் நாம் ஒதுங்கிச் சென்றுவிடக்கூடாது. இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள் (மத். 23:4) என்று சொல்லுகின்றார். அவர்களிடத்திலிருந்து புறப்பட்டு வந்த போதனைகளாகிய சுமைகளைக் குறித்து இயேசு சற்றாகிலும் குறை சொல்லவில்லை, சுமப்பதற்கு சற்று கடினமானது என்றாலும் அது ஆத்துமாவுக்குச் சுகமானதே. அவ்வாறே, அவர்களுடைய போதகத்தைக் குறித்தும் இயேசு கிறிஸ்து எள்ளளவாகிலும் குறை சொல்லவில்லை; ஏனென்றால், 'அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்' என்று சொல்லுகின்றாரே. அப்படியிருக்க, அவர்களது போதனைகளை அவர் ஏற்றுக்கொள்ளுகின்றாரே, சம்மதிக்கின்றாரே, ஒத்துக்கொள்ளுகிறாரே! அப்படியென்றால், குறை இருப்பது எங்கே? போதனையில் அல்ல; மாறாக, போதிக்கிறவர்களாகிய வேதபாரகர் மற்றும் பரிசேயர் என்பவர்களது வாழ்க்கையிலேயே. இதனையே, 'நீங்கள் அதில் பிரவேசிப்பதில்லை' (மத். 23:13) என்று அவர்களைக் குறித்து இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறுகின்றார். 'அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் (மத் 7:22,23) என்று இயேசு கிறிஸ்து எடுத்துரைக்கும் கூட்டம் இவர்களே.
பிரியமானவர்களே! தலைமைத்துவத்திற்கடுத்தவைகளில் தடம் பதிக்க விரும்பும் நாம், இத்தகைய சுமைகளில் கவனமாயிருக்கவேண்டியது அவசியம். அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படியாகவே நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். எனவே, 'நம்மேல் அடி விழுந்துவிடக்கூடாது' என்ற நினைவோடு, 'ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணக்கூடாது'. மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1கொரி. 9:25-27) என்ற பவுலின் சிந்தனை வரிக்குள் நமது சரீரத்தின் வரைமுறைகளும் ஒடுக்கிக் கீழ்ப்படுத்தப்படட்டும். நம்முடைய கரங்களில் இருக்கும் பட்டயம், நம்முடைய மாம்சீகத்தையும் பட்சிக்கவேண்டும். வேதத்தில் தேவன் நமக்கு எழுதிக்கொடுத்த வசனங்கள் என்னும் விறகுகளின் மேல் ஒவ்வொரு நாளும் நமது சரீரம் பலியாக வைக்கப்படவேண்டும். எஞ்சியது இன்னும் மீதம் இருக்கிறது என்று கரங்களில் எடுத்துச்செல்ல இயலாத அளவிற்கு வசனத்தில் நமது வாழ்க்கை எரிந்போயிருக்கவேண்டும்; அதுவே, யோவானைப் போல, எரிந்து பிரகாசிக்கும் ஒளியாக நாமல்லாத நம்மை பிறருக்குக் காட்டும். (யோவான் 5:5)
அப்பொழுது, ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும், வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும், எல்லாருக்கும் சரியாக நடக்கும் (ஏசா. 24:2), ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன் (ஓசியா 4:9) என்ற ஏசாயா மற்றும் ஓசியா தீர்க்கதரிசிகளின் வரிகள் நமக்கு எச்சரிக்கையாகட்டும். தினம் தினம் வேதம் வாசிக்கவேண்டும், வேதத்தை தியானிக்கவேண்டும்; குறைந்தது ஒரு மணி நேரமாவது ஜெபிக்கவேண்டும், உபவாசம் இருக்கவேண்டும், தசம பாகம் மற்றும் காணிக்கைகளை ஒழுங்காகக் கொடுக்கவேண்டும், ஆலய ஆராதனைகளில் பங்கேற்கவேண்டும், அறிவிக்கப்படாத ஜனங்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும் போன்ற அடிப்படை சுமைகளைப் போதிக்கும் அதே வேளையில், போதிக்கும் நமது வாழ்க்கை நம்முடைய வாயின் வார்த்தைகளின் வலைக்குள் அகப்பட்டுக்கொள்ளக்கூடாதே. வெளியிடங்களில் மக்களின் பார்வைக்கு 'நீண்ட ஜெபம் பண்ணிவிட்டு' (மத். 23:14), அந்தரங்க வாழ்க்கையில் அயர்ந்து தூங்குகிறவர்களாக நாம் காணப்பட்டுவிடக்கூடாதே.
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே (ரோமர் 2:1-5) என்ற வேதத்தின் வரிகள் நமக்கு எதிரிடையாகிவிடக்கூடாதே எனவே மிகுந்த எச்சரிக்கையுடனிருப்போம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் (எபி. 4:12,13).
நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் (மத். 7:2-5) என்ற இயேசு கிறிஸ்துவின் எச்சரிப்பின் சத்தம் நமது காதுகளிலும் தொனிக்கட்டும்.
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷpத்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள் (மத். 23:23-28) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள், ஆசனங்களில் அமர்ந்திருந்தபோதிலும், சுமக்கவேண்டிய சுமைகளை விட்டுவிட்ட வேதபாரகர் மற்றும் பரிசேயர்களது வாழ்க்கையின் பிழைகளைத்தானே எடுத்துக்கூறுகின்றது.
தலைமைத்துவத்தை விரும்புகின்ற நாம், 'ஆடுகளை மேய்ய்பாயாக' என்ற அவரது ஆணைக்கு நம்மை அர்ப்பணித்து முன் செல்லுகின்ற நாம், இத்தகைய சுமைகளைக் குறித்து கவனமாயிருப்போம், பாரும் பரமும் நம்மீது குற்றஞ் சுமத்தாத வாழ்கை வாழுவோம்.
Comments
Post a Comment