செவ்வாய், 20 அக்டோபர், 2026

தன்னையே நியாயப்படுத்தும் தலைவன் -17


பிரியமானவர்களே! ஒரு தலைவனின் வீழ்ச்சி அவனுடைய பதவி பறிக்கப்படும்போதுதான் ஆரம்பமாகிறதா? அவன் சிம்மாசனத்திலிருந்து இறக்கப்படும்போதுதான் அவனுடைய தோல்வி வெளிப்படுகிறதா? இல்லை! தேவனுடைய வார்த்தை அவனைத் திருத்தும்போது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, தன்னுடைய தவறுகளையே நியாயப்படுத்தத் தொடங்குகிற இடத்திலேயே அவனுடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிடுகிறது! மனிதர்களுக்கு முன்பாகத் தன்னுடைய மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் ஒரு தலைவன், தேவனுக்கு முன்பாகத் தன்னுடைய நிலையை இழந்துகொண்டிருக்கிறான் என்பதை உணராமல் போய்விடுவது எத்தனை வேதனையானது! தலைவர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களில், தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் அவற்றை தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டேயிருக்கும் மனப்பான்மை மிகவும் ஆபத்தான ஒன்று.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, இஸ்ரவேலின் முதல் ராஜாவாக உயர்த்தப்பட்ட சவுலின் வாழ்க்கை இதற்குச் சாட்சியாக நம்முன் நிற்கின்றதே! ராஜாவாக உயர்த்தப்பட்ட அவன், தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியத் தவறியபோது, தன்னுடைய தவறை உணர்த்திய சாமுவேலின் வார்த்தைகளைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தன்னுடைய செயல்களையே நியாயப்படுத்த முயன்றான். இறுதியில், 'கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்' (1 சாமுவேல் 15:22) என்ற தேவவார்த்தைக்கு முன்பாக அவனுடைய தலைமைத்துவத்தின் தவறு சுட்டிக்காட்டப்படுகின்றதே!

பிரியமானவர்களே! ஒரு தலைவரை உயர்த்துவது அவருடைய பதவியாக இருக்கலாம்; ஆனால், அவரை நிலைநிறுத்துவது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிற இருதயமே! தேவன் திருத்தும்போது தன்னைத் தாழ்த்திக்கொள்ளாமல், தன்னுடைய தவறுகளை மறைக்கவும் மக்கள் முன் அதனை நியாயப்படுத்தவும் முற்படும் மனப்பான்மை, தலைவர்களின் வீழ்ச்சிக்கான மிக ஆபத்தான காரணங்களில் ஒன்றல்லவா! 

தலைமைப் பொறுப்பு என்பது உயர்ந்த இருக்கையில் அமர்ந்திருப்பதற்காகக் கொடுக்கப்படுகிறதல்ல; மாறாக, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே கொடுக்கப்படுவது. அப்படியிருக்க, தலைவர்கள் தங்களுடைய விருப்பத்தையே தேவனுடைய சித்தமாக எண்ணிக்கொள்ளத் தொடங்கினால், அவர்களுடைய அஸ்திபாரம் அங்கேயே ஆட்டங்காணத் தொடங்கிவிடுமல்லவா! அமலேக்கியரையும் அவர்களுக்குள்ள எல்லாவற்றையும் அழிக்கும்படி சவுலுக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தார் (1 சாமுவேல் 15:3). ஆனால், அவனோ, ஆகாகையும், தன்னுடைய கண்களுக்கு நல்லவைகளாகக் காணப்பட்ட ஆடுமாடுகளையும் உயிரோடே வைத்துக்கொண்டான் (1 சாமுவேல் 15:8,9). தேவனுடைய கட்டளையில் தனக்குப் பிடித்தவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, தனக்குப் பிடிக்காதவற்றைத் தவிர்த்துவிடுகிற தலைமை, கீழ்ப்படிதலுள்ள தலைமை என்று சொல்லப்படுமா? தன்னுடைய கண்களுக்கு விருப்பமானவைகளானாலும், தேவனுடைய கட்டளைகளுக்கு முன்னால் அவைகளைக் கருக்கிப்போடுபவனே தேவன் விரும்பும் தலைவன்.

மேலும், சாமுவேல் சவுலைச் சந்தித்தபோது, தன்னுடைய தவற்றை உடனடியாக சவுல் ஒப்புக்கொள்ளாமல், 'ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்' என்று தன்னுடைய தவற்றை ஜனங்கள் மீது மடைமாற்றிவிட்டு (1 சாமுவேல் 15:15), தான் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொண்டதாகக் கூறுகின்றான் (1 சாமுவேல் 15:20). தான் செய்தது தவறு என்பதை உணர்த்துவதற்காக தேவனுடைய வார்த்தை அவனுக்கு முன்பாக வைக்கப்பட்டபோதிலும், தன்னுடைய செயல்களை நியாயப்படுத்துவதிலேயே அவன் முனைப்பாக இருந்தான். பிரியமானவர்களே! தவறு செய்வது ஒரு தலைவனின் வீழ்ச்சிக்கான தொடக்கமாக ஒருவேளை காணப்படலாம்; ஆனால், அந்தத் தவறை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டேயிருப்பது, தலைவனின் வீழ்ச்சியை இன்னும் ஆழமாக்கிவிடுகிறதல்லவா!

'நான் பாவஞ்செய்தேன்' என்று சவுல் ஒப்புக்கொண்டாலும் (1 சாமுவேல் 15:24), அவனுடைய வார்த்தைகளிலோ அவனுடைய செயல்பாட்டில் ஜனங்களுக்கு முன்பாகத் தன்னை மதிப்புக்குரியவனாகக் காட்டிக்கொள்ளும் விருப்பம் வெளிப்படுகின்றது. 'இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பி வாரும்' என்றே சாமுவேலிடம் கேட்கின்றான் (1 சாமுவேல் 15:30). சாமுவேலின் இந்த வார்த்தைகள், தேவனுடைய பார்வையில் தன்னைச் சரிப்படுத்திக்கொள்வதைவிட, மனிதர்களுடைய பார்வையில் தன்னுடைய மதிப்பைக் காப்பாற்றிக்கொள்வதற்கே அவன் அதிக அக்கறை காட்டினானோ என்று எண்ணத்தோன்றுகின்றதல்லவா!

இன்றைய நாட்களில், சபைகளிலும் ஊழியங்களிலும் தலைமைப் பொறுப்புகளிலும் இருப்பவர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எத்தனை முக்கியமானது! ஒரு தலைவர் தவறான முடிவினை எடுத்திருக்கலாம்;, ஒருவேளை ஒருவரிடம் அநியாயமாக நடந்திருக்கலாம்; அல்லது தேவனுடைய வார்த்தைக்கு முரணான செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம். என்றபோதிலும், தன்னுடைய தவறை மறைப்பதற்காக மற்றவர்களைக் குற்றப்படுத்துவதும், தன்னுடைய செயலுக்குப் பல்வேறு காரணங்களைக் கூறுவதும், தன்னை எதிர்ப்பவர்களைத் தவறானவர்களாகச் சித்தரிப்பதும் தலைமைத்துவத்தின் பலவீனத்தைத்தானே வெளிப்படுத்துகின்றது! தவறை ஒப்புக்கொண்டால் தன்னுடைய மதிப்பு குறைந்துவிடும் என்று எண்ணுகிற தலைவர்கள், உண்மையில் தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கான கதவையே அடைத்துக்கொள்கிறார்கள்.

இதற்கு, ராஜாவாகிய தாவீதும் ஓர் உதாரணமாகத் திகழ்கின்றானே! நாத்தான் தீர்க்கதரிசி அவனுடைய பாவத்தைச் சுட்டிக்காட்டியபோது, தன்னுடைய தவறை மறைக்கவோ, தீர்க்கதரிசியைக் குற்றப்படுத்தவோ முயலாமல், 'நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்' என்று ஒப்புக்கொண்டான் (2 சாமுவேல் 12:13). 'தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17) என்ற வார்த்தைகள், தன்னைத் தாழ்த்திக்கொண்டு தேவனிடம் திரும்புகிறவர்களின் இருதயத்தையே நமக்கு நினைவுபடுத்துகின்றன.

பிரியமானவர்களே! தலைவர்களின் உண்மையான மதிப்பு அவர்களுக்குக்  கீழ்  எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதில் வெளிப்படுவதில்லை; மாறாக, தேவனுடைய வார்த்தைக்கு எவ்வளவு தாழ்மையுடன் அவர்கள் கீழ்ப்படிகிறார்கள் என்பதிலேயே வெளிப்படுகிறது. மனிதர்களது பாராட்டைப் பெறுவதற்காகத் தவறை மறைப்பதைவிட, தேவனுக்குப் பிரியமானவர்களாக இருப்பதற்காகத் தவறை ஒப்புக்கொண்டு திருந்துவது மேலானதல்லவா! 'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்' (நீதி. 28:13) என்ற தேவவார்த்தை தலைவர்கள் பிரசங்கிக்கவேண்டியது மாத்திரமல்லாமல்ல, தங்களுக்கும் பிரசங்கமாக்கிக்கொள்ளவேண்டிய ஒன்று.

பதவியைப் பாதுகாப்பதற்காக உண்மையைப் பலியாக்கிவிடவேண்டாம்; பெயரையும் புகழையும் காப்பாற்றுவதற்காக தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்துவிடவும் வேண்டாம். தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவர்கள் அனைவரும் தலைவர்களின் எதிரிகள் அல்ல; தடம் மாறும் தலைவர்களின் பாதைகளில் ஒலிக்க தேவனால் அனுமதிக்கப்படும் எச்சரிக்கை மணிகளே! நம்முடைய தலைமைத்துவம் மனிதர்களுடைய பாராட்டில் அல்ல; தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் நிலைத்திருக்கட்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக