வரமா, வசனமா? - 7

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 7 


வரமா, வசனமா? 


ஊழியத்தின் பாதையில் எதற்கு முதலிடம் தரப்படவேண்டும் என்பதை தலைவன் ஒருவன் மறந்துவிடுவானென்றால், அவனுடைய ஊழியத்தில் குறைவுகளும் குழப்பங்களும் ஏற்படுவதை தடுத்து நிறுத்துவது கடினம். தேவன் அமர்ந்திருக்கின்ற இடத்தில் தேவையில்லாத காரியங்கள் அமர்ந்திருக்கும் ஆபத்திற்கு அவன் வழிவிட்டுவிடுவான். தேவன் தந்த வசனங்கள் இவ்வுலகத்தின் மக்களை நித்திய ஜீவனுக்குள் நடத்த போதுமானவைகள். வரங்கள் ஊழியத்தின் பாதையில் அவசியம் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆனால், அந்த வரங்களுக்கே ஊழித்தில் முதல் ஸதானம் என்பதை வேதத்தின் அடிப்படையில் எவரும் ஒத்துக்கொள்ள இயலாது. தேவன் தனது ஊழியர்கள் வசனத்திற்காக தன்னிடம் வரவேண்டும் என்றே விரும்புகிறார். வசனமே மக்களை குணமாக்க போதுமானவைகள். வசனம் ஒரு மனிதனின் மனதில் நுழைந்தால் அவனது குணம் எளிதில் உண்டாகிவிடும். வசனத்திற்கு நேராக மக்களைத் திருப்பாமல் வரங்களுக்கு நேராக மக்களைத் திருப்;புவது சரியான ஊழியமாக எப்படி இருக்கமுடியும். அநேக தலைவர்களின் தடங்கள் இதிலே புரண்டுவிட்டன. ஆண்டவரே இன்று கூட்டத்திற்கு வருகின்ற மக்களை இரட்சியும் என்று ஜெபிப்பதற்குப் பதிலாக, ஆண்டவரே இன்று வரும் மக்களைக் குணமாக்கும் என்பதே பிரதான இடத்தைப் பெறுகின்றது. மக்கள் குணமாக்கப்படவேண்டும் என்ற ஜெபம் குற்றமானது அல்ல, ஆனால் அது வசனத்தைக் காட்டிலும், அவர்களது இரட்சிப்பைக் காட்டிலும் முந்தி நிற்குமென்றல் அது சரியானதல்ல. இன்றய சூழ்நிலையில் அநேக கூட்டங்கள், ஆஸ்பத்திரிகளாக மாறிவிட்டன, அநேக கன்வென்ஷன்கள் நோயாளிளே வந்து படுக்கும் கட்டில்களாகிவிட்டன. மனதிற்கு முதலிடம் தரப்படாமல் மனிதனின் சுகத்திற்கு முதலிடம் தரப்படுவது, பரலோக சுவிசேஷத்தை எப்படி நிறைவு செய்யமுடியும். எங்கு அற்புதங்கள் நடைபெறுகின்றதோ அங்கேயே இன்றய நாட்களில் மக்கள் கூட்டமும் அலைமோதுகின்றது. கடினமான வசனங்கள் விதைக்கப்படுகின்ற இடங்களில் கடுகளவு கூட்ட மக்களே கலந்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட மனப்பான்மையை மக்களிடம் உருவாக்குகிறவர்கள் ஊழியர்களே. 

வரங்களில்லாத ஊழியர்கள், வரங்களுடைய ஊழியர்கள் என்றெல்லாம் தங்களை அடையாளம் காண்பித்துக்கொள்ளுமளவிற்கு கிறிஸ்தவ ஊழிய வட்டாரம் வளர்ந்துவிட்டது. யோவான் செய்த ஊழியத்தில் நடந்த அற்புதங்கள் எத்தனை? அவனது பிரசங்கத்தில் அற்புதங்களல்ல, ஆத்துமாக்ளே ஆதாயம் செய்யப்பட்டன. கடினமான உபதேசத்தையே தன்னைத்தேடிவந்த மக்களைப் பார்த்து அவன் செய்தான். தனது உயிரைக் குறித்தோ, தனது மதிப்பைக் குறித்தோ, தனக்கு பின் வரும் மக்கள் கூட்டத்தைக் குறித்தோ அவன் சற்றேனும் கவலைப்படவில்லை. தேவ வசனத்தைக் குறித்தே அவன் பிரசங்கித்தான். பாவங்களைக் குறித்து கண்டித்து உணர்த்தினான். அவைகளை வைத்திருப்போருக்கு, மேற்பூச்சான ஞானஸ்நானத்தைக் கொடுத்து உலகத்தை ஏமாற்ற அவன் விரும்பவில்லை. ஆவிக்குரிய திருச்சபைகள் என்று அழைக்கப்படுகின்ற திருச்சபைகள் இந்த காரியங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசிம். முழுக்கு ஞானஸ்நானம் வலியுறுத்தப்படும் ஆவிக்குரிய சபைகளில், அதை எடுக்கும் நபர் எப்படிப்பட்டவராயிருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்படவேண்டும். ஆபரணங்களை கழற்றிவி;டுவதினால் ஒருவன் ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகிவிட்டான் என்று அர்த்தமாகிவிடாது, அவன் மனதின் உண்மையான நிலையும், சபையில் அவனது சாட்சியின் தன்மையும், அவனது இரட்சிப்பின் அனுபவமும் உய்த்தாராயப்படவேண்டும். மனந்திரும்பாத நபருக்கு ஏதாவது காரணத்தின் அடிப்படையிலோ, வயதாகிவிட்டது என்றோ, ஆவிக்குரிய சபையில் இருப்பதினால் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்றோ அல்லது திருமணம் முடிக்கவேண்டும் என்பதற்காகவோ ஞானஸநானம் கொடுத்தால், அது தேவனது பார்வையில் உத்தமமாயிருக்குமோ. நான் ஞானஸ்நானம் கொடுக்க தகுதிபெற்றுவிட்டேன், நான் இந்த சபையின் மேய்பபன் என்ற எண்ணத்தினால் இந்த தவற்றை செய்துவிடாதபடி தலைவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவனது பார்வையில்; தான் செய்கின்ற ஊழியம் நேர்த்தியானதாக அமையவேண்டுமே என்ற எண்ணமே அவனில் உறைந்திருந்தது.    யோவானின் தலைமைத்துவம் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்துவதாயிருந்ததே. யோவான் இயேசுவின் முதல் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தினான், இக்காலத்து தலைவர்களாகிய நாம் அவரது இரண்டாம் வருகைக்கென்று மக்களை ஆதாயம் செய்து ஆயத்தம் பண்ணவேண்டிய மிகப்பெரிய பொறுப்பிலுள்ளோம். அநேக இடங்களில் ஒட்டப்படும் கூட்ட சுவரொட்டிகளில், குருடர் காண்கிறார்கள், சப்பாணிகள் நடக்கின்றார்கள், ஊமையர் பேசுகின்றனர் என்று மாத்திரமே அச்சடிக்கின்றனர், ஏன் மரித்தோர் உயிர்த்தெழுகின்றனர் என்று அவர்கள் அடிப்பதில்லை, அந்த வசனத்தில் அவர்களுக்கு இருக்கும் விசுவாசம் அவ்வளவுதான்.

மோசேயினுடைய ஊழியத்திலும் அவன் வசனத்திற்கல்ல, வரங்களுக்கும், அற்புதங்களுக்குமே முதலிடம் கொடுத்துவிட்டான். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும் மாபெரும் திட்டத்திற்கென்று அவனை தேவன் அழைத்தபோது மோசே தேவனை நோக்கி: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்கு தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றே சொன்னான். ஆத்தும ஆதாயப்பணியில் ஊழியனிடம் இருக்கக்கூடாத மூன்று குணங்கள் மோசேயிடம் காணப்பட்டதை இந்த வசனத்தி; நாம்; பார்க்கமுடியும். முதலாவதாக, அவன் தான் தேவனுடைய ஊழியக்காரன் என்று ஜனங்கள் நம்பவேண்டும், அப்போதுதான் அவன் அங்கே செல்லமுடியும் என்று எண்ணுகின்றான். ஜனங்கள் தன்னை நம்பவேண்டும் என்ற எண்ணம் மோசேயினிடத்தில் காணப்பட்டது. இரண்டாவது மக்கள் எனது வார்த்தைகளுக்கு செவிகொடுக்கமாட்டார்கள் என்று சொல்லுகிறான். மூன்றாவதாக, தேவன் தனக்கு தரிசனமானதை ஜனங்கள் எப்படி நம்புவார்கள் என்ற எண்ணமும் அவனது உள்ளான மனதில் உருவாகத் தொடங்கியது. இந்த காரியங்கள் மோசேயின் மனதில் நிறைந்திருந்த காரணத்தினாலேயே அவனுக்கு வரங்கள் கொடுக்கப்பட்டது. இந்த மூன்று காரியங்களுமே அவனது மனதில் எகிப்திற்கு செல்ல முதல் தடையாக இருந்தது. நான் தேவனை நம்புகின்றேன், ஆனால், நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று ஜனங்கள் நம்புவார்களா? நான் தேவ வார்த்தையை விசுவாசிக்கின்றேன், ஆனால், ஜனங்கள் என் வார்த்தைகளை விசுவாசிப்பார்களா? நான் தரிசனம் பெற்றவனாய் இருக்கின்றேன், ஆனால், எனது தரிசனம் மக்களுக்கு தெரியுமா? என்ற கேள்விகள் ஒரு மனிதனுக்குள் உருவாகுமென்றால், அக்கேள்விகள் அவனை தலைமைத்துவத்திலிருந்து ஓரங்கட்டிவிடும். எனக்கும் தேவனுக்கும் இடையிலுள்ள தொடர்பு மக்களுக்குத் தெரியவேண்டும் என்ற எண்ணமுடைய தலைவன், எப்பொழுதும் தனது பிரசங்கத்தில் தேவன் சொன்னார், இயேசு தோன்றினார், இயேசு இன்றைக்கு காலையில் சொன்னதையே நான் உங்களுக்குப் பிரசங்கிக்கிறேன் என்று குறிப்பிட்டுக்கொண்டேயிருப்பார். இதன் ரகசியம், தனக்கும் தேவனுக்கும் இடையிலான உறவை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒழிய வேறெதற்காகவுமல்ல. தனக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு உலகத்திற்கு தெரியவேண்டும் என்று நினைக்கின்ற தலைவன் மாய்மாலத்தினுள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இருக்கிறவராக இருக்கிறேன், இருக்கிறேன் என்பவர் உன்னை அனுப்பினார் என்று மட்டும் தேவன் சொல்வாரென்றால், அது இன்றய நாட்களில் அநேக தலைவர்களுக்குப் போதுமானதாயிராது. இருக்கிறேன் என்று நீர் சொன்னாலும், அதை மக்கள் முன் நான் நிரூபிக்கும்படிக்கு எனக்கு வரங்களைத் தாரும் என்பதே அவர்களது ஜெபமாயிருக்கும். நீர் எழுதிக்கொடுத்த வசனங்கள் மாத்திரம் போதாது வரங்களையும் நீர் தந்தால் தான் ஊழியத்திற்கு போவேன் என்று மோசேயைப்போல அடம்பிடித்துக்கொண்டிருக்கும் மக்கள் மனந்திரும்பவேண்டும்.

தன்னை தேவ ஊழியனாக நிரூபித்துக்காண்பிப்பதே, மேடையேறியவுடன் ஊழியரின் முதற்பணியாக மாறிவிடக்கூடாது. தன் மூலமாக தேவன் குணமாக்கிய காரியங்களைச் சொல்லி சொல்லியே பாதி பிரசங்கத்தை பலர் முடித்துவிடுவார்கள். குணமானவர்கள்தான் குணமாகிவிட்டார்களே, குணமாகாமல் முன்னே அமர்ந்திருக்கும் மக்களுக்காக எதையாவது செய்யவேண்டியதுதானே. தீர்க்கதரிசன வரமுடைய ஊழியர்கள் அநேகர் தாங்கள் தீர்க்கதரிசிகள் என்பதை நிரூபிக்க படுகின்ற பிரயாசங்கள் அதிகம். அப்படி அவர்கள் பிரயாசப்பட்டாலும், பல இடங்களில் இன்னல்களிலும் சிக்கல்களிலும் சிக்கித்தவிப்பது பரிதாபமானதுதான். தேவன் ஒரு மனிதனின் மூலமாக தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, அது நிச்சயம் நிறைவேறும், நிறைவேறவேண்டும். அப்படி நிறைவேறாமல் போகுமாயின் அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல என்பதை வேதம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. தேவன் தங்களை தீர்க்கதரிசிகளாக பயன்படுத்தினாலும், இவர்களும் சில நேரங்களில் தேவன் ஒன்றுமே வெளிப்படுத்தாத நேரங்களில், ஜனங்கள் தங்களை எங்கே தீர்க்கதரிசியல்ல என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் கர்த்தர் சொல்லாதிருந்தும், தங்கள் மனதில் தங்களை தீர்க்தரிசியாக நிரூபிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எதையாவது சொல்லிவிடுகின்றனர். இப்படிப்பட்ட தீர்க்கதரிசனத்தில் தேவன் எப்படி பிரியமாயிருப்பார். மோசே தன்னை அனுப்புகின்ற தேவனுடைய வார்த்தையையல்ல, அவரது வரத்தையே எதிர்பார்த்தான். தரமான தலைமைத்துவத்தை இவ்வுலகத்தின் தலைமுறையினருக்கு காண்பிக்கவிரும்பும் தலைவர்கள் இவ்வித கண்ணியிலிருந்து தங்களை தப்புவித்துக்கொள்வது எத்தனை அவசியமான ஒன்று.

இயேசு தனது சீஷர்களை இவ்வுலகத்தில் ஊழியத்திற்கு அனுப்பியபோது, 'பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது' என்பதையே முதலில் பிரசங்கிக்கும்படிக்குச் அறிவுறுத்தியனுப்பினார். அதன்பின்பே, அற்புதங்களுக்கு அவர் ஊழியத்தில் இடங்கொடுத்தார். கானானிய ஸ்திரியை இயேசு கண்டபோது, 'பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல' என்றே முதலில் கூறினார், பின்னர் அவளுடைய விசுவாசத்தைக் கண்டபோதே அவளை நாய்க்குட்டியாக அல்ல தனது பிள்ளையாகப் பாவித்து அற்புதம் செய்தார். இயேசுவை யார் என்று அறிந்த மக்களுக்கே அற்புதம். இயேசுவை அறிமுகப்படுத்தாமல், அவரருளும் இரட்சிப்பை அறிவிக்காமல், அற்புதங்களை மட்டுமே பிரசங்கித்துக்கொண்டிருக்கும் தலைவர்கள் பிள்ளைகளின் அப்பங்களை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடும் ஊழியர்களாகவே காணப்படுவார்கள். முப்பத்திரண்டு வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரி தன் சரீரத்தில் சுகத்தை அனுபவித்தது அவரை விசுவாசித்ததினாலேயே. பெதஸ்தா குளத்தண்டையில் சுகமடையாமல் படுத்திருந்த மனிதனை இயேசு குணமாக்கியதோடு, அவனை தேவாலயத்தில கண்டு தன்னை யார் என்று அவனுக்கு அடையாளம் காட்டவும் அவர் மறக்கவில்லை. கிறிஸ்துவின் வரங்களல்ல கிறிஸ்துவின் வசனங்களுக்கே தலைவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

வீடுகளுக்கு ஜெபிக்கச் செல்லும்போது, அவர்கள் சுவிசேஷத்தை அறியாதவர்கள், இரட்சிக்கப்படாதவர்கள் என்று காணப்பட்டால், அவர்களுக்கு முதலாவது அறிவிக்கப்படவேண்டியது சுவிசஷமே, அற்புதமல்ல. பாவத்தில் இருக்கும் நபர்களுக்காக ஜெபிக்கும்போதும், அவரது பாவத்தைக்குறித்து  அவருக்கு கண்டித்து உணர்த்தியபின்பே அவருக்காக ஜெபிப்பது நல்லது, இப்படிப்பட்ட ஊழியத்தில் தேவன் பிரியமாயிருப்பார். தீர்க்கதரிசனம் சொல்லும் அநேகர் இன்று பாவத்தைக்குறித்து சொல்லுவதில்லையே. தீர்க்கதரிசனம் என்றாலே அது ஆசீர்வாதமாகவே இருக்கும் என்பதே மக்கள் மனதில் எழுதப்பட்டுவிட்டது. ஊழியத்தில் தேவவசனத்திற்கு முதலிடம் கொடுக்கப்படுமாயின் தேவனது வசனத்தின் கிரியைகளை ஊழியத்தில் காணமுடியும்.

மோசே செய்த உதவி அவனது உயிருக்கு எதிரானது என்பதை அவன் மனம் அறியவில்லை. மோசேயைப் போல சிக்கிக்கொள்ளும் தலைவர்கள் ஏராளம். வேதத்திற்கு புறம்பானது என்று நன்றாக அறிந்திருந்தும், அதை தன் சகோதரன்தானே, என நினைத்து அவனுக்கு முன்பாக செய்தால் அது நிச்சயம் ஒருநாள் ஊழியத்திற்கே ஆபத்தாக வந்துவிடும். லஞ்சம் கொடுப்பது தவறா என்று கேட்டால், அது தவறு என்று அத்தனைபேரும் சொல்லிவிடுவார்கள். ஆனால், இந்த காரியத்திற்காக நீங்கள் ஏன் லஞ்சம் கொடுத்தீர்கள் என்று யாராவது கேட்டால், அது லஞ்சமல்ல அவர் செய்த காரியத்திற்காக அவருக்கு நன்றியாக பரிசாக கொடுத்தேன் என்று மழுப்புவார்கள். அந்த பரிசுத்தொகைதானே லஞ்சம். அது வேதத்திற்கு விரோதமானதுதானே. லஞ்சம் வாங்குபவனுக்கு எப்படியோ அப்படியே லஞ்சம் கொடுப்பவனுக்கும் என்றுதானே வேதம் போதிக்கின்றது. இப்படியிருக்கையில் தனக்கு காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக வேதத்திற்கு விரேதமான ஒரு செயலை செய்துவிட்டு அதை பூசி மறைப்பது எத்தனை பெரிய பாவம். இது தலைவர்களின் தலைமைத்துவத்தில் படிந்துள்ள கறைதானே. 

தேவனுக்கு முன்பாக தனது வாழ்க்கையை அப்பழுக்கற்றதாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பும் மனிதன் ஒவ்வொருவனும், தன் சகோதரர்களுக்கு முன்னதாகவும் அதை அப்பழுக்கற்றதாய் வைத்துக்கொள்ள நிச்சயம் முயலுவான். புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (கொலோசெயர் 4:5). தேவனுக்கு முன்பாக தான் வாழும் வாழ்க்கையைக் குறித்து எந்தவித கரிசனையும் இல்லாத தலைவன், தன் சகோதரர்கள், தன்னைப் பின்பற்றிவரும் மக்கள் கூட்டம் எதைக்குறித்தும் கவலைப்படமாட்டான். தவறான ஒரு வழியில் சகோதரனுக்கு உதவி செய்தாலும், அதை பரலோகம் கவனித்துக்கொண்டிருக்கின்றது என்ற விழிப்புணர்வு தலைவர்களுக்கு தேலை. தனது, பிள்ளைகளில் வேலைக்காகவோ அல்லது படிப்பிற்காகவோ, யாரையாவது அரசியல்வாதியையோ அல்லது அத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரையோ சந்தித்து சிபாரிசு செய்வது குற்றமே. அதற்காக வரும் அத்தனை நபர்களோடுகூட தன் பிள்ளைகளும் சரிசமமாகவே பாவிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இப்படிப்பட்ட தலைவர்களுக்கு உதவுகின்றவர்களும் பாவம் செய்கின்றனர். குறுக்கு வழியில் பயணிப்பது, தலைவர்களின் குறுகிய ஆவிக்குரிய  வளர்ச்சியையே வெளிக்காட்டும். 




Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3