வெற்றியா? வெற்றிடமா? - 1

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 1


வெற்றியா? வெற்றிடமா?தன்னை மட்டுமே முக்கியப்படுத்தி, சுற்றியிருப்பதெல்லாவற்றையும் மக்கிப்போகச் செய்து, வாழ்க்கையின் விளிம்பைத் தொடும்போதுகூட தன்னிடத்திலிருப்பதை எவரிடத்திலும் எடுத்துக்கொடுக்கும் மனதற்றவர்களாகவே மரித்துப்போகும் மனிதர்கள் இவ்வுலகத்தில் ஏராளம் ஏராளம். நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா? (மத் 20:15) என்ற வசனத்தின்படி, தயாளமாய், தாராளமாய் மனமுவந்து தேவன் தன்னிடத்தில் அள்ளிக் கொடுத்தவைகளை, மற்றவர்களிடத்தில் ஒப்புவிக்கும்போது, அதே தயாள குணத்தோடும், தாராளமான மனதோடும் ஒப்புவிக்க மனதற்றவர்களாகவும், கிள்ளிகூடக் கொடுக்கும் குணமற்றவர்களாகவும் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றைய நாட்களில் மிகுதியே.

என்னைப் போன்றதோர் மனிதன் இனி தேவனால் தெரிந்துகொள்ளப்படப்போவதில்லை, என்னைப்போல இன்னொரு மனிதனை தேவன் ஆயத்தப்படுத்தப்போவதில்லை, எனக்கே எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, என்னைப் போல தாலந்துகள் நிறைந்த தலைவன் உருவாவது கடினமே, என்னைப் போன்ற சிலரது சிரசுகளில் மாத்திரமே இத்தகைய கர்த்தரின் அபிஷேகம் தங்கியிருக்கின்றது என்று பாராட்டுப் பத்திரங்கள் எழுதும் மனிதர்கள் அநேகர். மரணிக்கும்போது, தங்களிடத்திலிருக்கும் தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த பொருட்கள், சொத்துக்கள் மற்றும் ஆடையாபரணங்களை தன்னுடைய குடும்பத்தாரிடத்தில் விட்டுச் செல்வதுபோல, தேவன் தங்களிடத்தில் கொடுத்திருக்கும் விலைமதிப்பற்றவைகளாகிய பல ஆவிக்குரிய காரியங்கள், தாங்கள் முடிவுபெறும் இடத்தில் தங்களுடையதைத் தொடரும்படியாக அடுத்தவருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்ற விருப்பத்துடனான விண்ணப்பத்தை பரத்திற்கு நேராக பல நேரங்களில் நாம் செய்யத் தவறிவிடுகின்றோம். புதைக்கப்படுவதற்கேற்ற பூமிக்குரியவைகளை பொதிந்து பத்திரமாகக் கொடுக்கும் அதே வேளையில், அக்கினியாய் அகத்திற்குள் இருக்கும் ஆண்டவர் அளித்த அன்பளிப்புகள் பலவற்றை அடுத்தவருக்கு அறிவியாமல் மண்ணுக்குள்ளேயே நம்மோடுகூட புதைத்துவிடுகின்றோம்; முடிவில்லாமல் தொடரவேண்டியவைகளை அடுத்தவருக்கு முடிச்சு போட்டுக் கொடுக்க மனமின்றி, நம்மோடு அவைகளுக்கு முடிவுண்டாக்கிவிடுகின்றோம். தலைமுறைகள் அவர்களாகவே தேவனிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளட்டும் என்றும் சில நேரங்களில் நம்முடைய நிலையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளுகின்றோம்.

எனினும், வாழ்க்கை ஓர் தொடரோட்டம் என்பதைப் புரிந்துகொண்டவர்களாக, தான் நிற்கும் இடத்திலேயே மற்றவர்கள் கற்க வழியுண்டாக்கி, சரித்திரமாக தான் சரியும்முன், ஏணியாக நின்று பலரை ஏற்றிவிட்டு அழகுபார்ப்பதே ஆண்டவர் விரும்பும் உயர்ந்த நிலை என்பதை உணர்ந்துகொள்ளும் மனிதர்களும் இந்த உலகில் உண்டு. இந்நிலைக்கு தங்களை அர்ப்பணித்தோரும், ஆயத்தப்படுத்திக்கொண்டோரும் சிலரே. தலைவர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நாம், தலைமுறைகள் ஓடுவதற்கு இடமளித்து சில நேரங்களில் தள்ளி நிற்கவேண்டியதும் அவசியமானதே. எப்பொழுதுமே மின்சார விளக்கு எரிந்துகொண்டிருக்கும் அறையில், சிறியதோர் மெழுகுவர்த்திகூட கொழுத்தப்படுவதற்கு இடமிருப்பதில்லையே! சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் வெளிச்சம் மிகுந்த நேரத்தில், கைளால் டார்ச் லைட்டினை எவரும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லையே. ஓர் சிற்றறையினுள் மின்சார விளக்கும், மெழுகுவர்த்தியும் எரிந்துகொண்டிருந்தால், உள்ளே நுழையும் மனிதர், மெழுகுவர்த்தியையே அணைத்துவிடுவது உலக வழக்கம்; என்றாலும், ஆவிக்குரிய வழக்கில் இது அவ்வப்போது முரண்படாத பட்சத்தில், முன்னோடி தலைவராயிருந்தாலும் முத்துக்களாகிய தலைமுறையினை உருவாக்குவது இயலாதது. 

தலைமுறைகள் உருவாகவேண்டும் என்று விரும்புகின்ற மனிதன் சில நேரங்களில் தன்னை மறைத்துக்கொள்ளுவான், காரியங்களை பின்தொடருவோர் கைகளில் விட்டுவிட்டு சற்றே ஒதுங்கி நிற்பான். தேவன் விரும்பும் இந்நிலைக்கு நம்மை ஒப்புக்கொடுக்காவிடில், நாம் வெற்றியோடு முடிக்கும் இடம் வெற்றிடமாகிவிடும். தலைவர்கள் பிரியும்போது, பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாளுக்கு ஒன்றுமில்லாமல் பட்டினி கிடக்கின்றதைப் போன்ற நிலை உருவாகிவிடும். தலைவர்கள் தங்களது ஓட்டத்தை நிறைவுசெய்யும்போது, அவர்கள் பயணித்த பாதையும் பின்தொடருவோரின் கண்களுக்குப் பூட்டப்பட்டதாகவே காட்சியளிக்கும். 

விளையாட்டில் வீரர்கள் வெற்றிபெறும்போது, வீரர்களுக்கு அளிக்கப்படும் வெற்றிக் கோப்பையினை அவர்கள் ஆனந்தக் களிப்புடன் மேடையில் வாங்கிக்கொள்ளுவார்கள். மேடையின் கீழிருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி வீரர்களுக்குப் பாராட்டுகளும்  தெரிவிப்பார்கள்; ஆனால், மேடையில் பெற்ற அந்த வெற்றிக் கோப்பையினை கொண்டுவந்து, அதனைத் திறந்து பார்த்தால் உள்ளே வெற்றிடமாகத்தான் இருக்கும், காலியாகவே காணப்படும். ஆவிக்குரிய உலகிலும் அநேகருடைய வாழ்க்கையில் இத்தகைய வெற்றியே காணப்படுகின்றது; மற்றவர்களுக்கு முன் பாராட்டும்படியான வெற்றியினை அவர்கள் பெற்றிருந்தாலும், விளையாட்டின் முடிவில் வெற்றிக் கோப்பையைத் திறந்து பார்த்தால் அது காலியாகவே காணப்படுவது கவலைக்குரியது.

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசே 22:30) என்று தேசத்தின் அழிவைத் தடுக்க கர்த்தர் ஆசிப்பதுபோல, நம்முடைய வாழ்க்கையின் முடிவில், நாம் எடுத்துக்கொள்ளப்படும்போது அல்லது மரணமடையும்போது, அந்த இடத்தை யாரைக் கொண்டு அடைப்பேன் என்ற தேடத்தக்கதான நிலையினை தலைவர்களாகிய நாம் ஏற்படுத்திவிடக்கூடாது. 

Comments

Popular posts from this blog

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3