வாழும் தலைவர்களா? வீழும் தலைவர்களா?
இன்றைய நாட்களில், தலைமைத்துவத்தில் இருக்கும் பல தலைவர்கள் விழுவது தங்களுக்கே தெரிவதில்லை; மக்களையும், மற்றவர்களையும் காப்பாற்றுவதில் முனைப்புக் காட்டும் பல தலைவர்கள், தாங்கள் வீழ்கிறோம் என தெரிந்தாலும் அதினின்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது தற்காத்துக்கொள்ளவோ முயற்சிப்பதில்லை. ஆரம்ப நாட்களில் தேவன் மேல் இருந்த வைராக்கியத்தை வீழ்ச்சியாக மாற்ற சத்துரு எடுக்கும் ஆயுதங்களுக்கும், விரிக்கும் வலைகளுக்கும் பல தலைவர்களும் கூட தப்பவில்லை என்பது நமக்கு முன்பாகவும் வைக்கப்பட்டிருக்கும் சவால்தான். அவ்வாறு சத்துருவின் வலைகளில் சிக்கிக்கொண்டிருந்தாலும், இன்றும் இன்னும் சிரித்த முகத்தோடு காட்சியளித்து தங்கள் தலைமைத்துவத்திற்கு வெளிப்புற வெள்ளையடிப்பதிலேதான் பலர் கவனமாயிருக்கின்றார்களே தவிர, அகத்தினுள் காணப்படும் அழுகினவைகளை அகற்றிப்போட அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. கர்த்தருடைய கட்டளையைக் கைக்கொள்ளாதுபோன கீழ்ப்படியாதுபோன சவுல், சாமுவேலுக்கு வணக்கம் சொன்னதுபோல, இன்றும் பல தலைவர்கள் சவுலாக மாறி வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர், வணக்கத்தை வாங்கிக்கொண்டிருக்கின்றனர். பிரியமானவர்களே! இத்தகைய தலைவர்களுக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியதுடன், அத்தகைய தலைவர்களின் குறைகளுக்குப் பின்னால் திரிவதும், அவைகளையே அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதில் நேரமெடுப்பதும் நம்மைத் வழிதப்பிச் சென்றுவிடப்பண்ணிவிடக்கூடாது என்பதிலும் நாம் கவனமுடனிருக்கவேண்டும். வைராக்கியமாய் தேவனுடைய பணியினைத் தொடங்கி, விட்டுக்கொடுக்காமல் வீறுகொண்டு எழுந்து செயல்பட்டு, கிறிஸ்துவுக்காய் ஆத்துமாக்களை ஆதாயம் செய்யக் கிளம்பிச் சென்ற பலரும் இதற்கு இரையாகிப்போனது பரிதாபமானதே!
ஒரு காலத்தில் கிறிஸ்துவுக்காக வீராப்பாக வாழ்ந்தவர்களாயிருந்தபோதிலும், தாங்கள் வீழ்ந்ததைக் காட்டிக்கொள்ளாமல், அதனைக் குறித்துக் கவலைப்படாமல், கபட்டுத்தனமாய், கள்ள ஆடாய் மாறி, மந்தைக்குள்ளேயே மற்றவர்களைக் கெடுத்துக்கொண்டிருக்கும் ஆடாக தலைவனே மாறிவிட்டால் அக்கூட்டத்தின் நிலை என்ன ஆவது? என்றோ நம்மை கிறிஸ்துவுக்குள் நடத்த ஒருவர் உதவியாயிருந்தார் என்பதற்காக, அவர் எப்போதும் நம்முடைய ஆவிக்குரிய நிலையை விட உயர்ந்தவராகவே இருப்பார் என்று நாம் எண்ணிக்கொண்டே இருந்துவிடமுடியாது. நமக்கு இயேசுவை அடையாளம் காட்டிக்கொடுத்த நபர், நாம் வளரும்போது, வளராமல் பின் தங்கிவிட்டால் ஆட்டின் வளர்ச்சி மேய்ப்பனைக் காட்டிலும் உயர்ந்ததாகிவிடுமல்லவா! இவ்வகை ஆடுகள் மேய்ப்பனின் ஆவிக்குரிய தன்மையை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்; ஆனால், மேய்ப்பனைத் திருத்த இயலாது திண்டாடும். இத்தகைய ஆடுகளின் நிலை பரிதாபத்திற்குரியதே. இத்தகைய நிலையில் மந்தையிலிருந்து பிரிந்துபோகும் ஆடுகளும், தலைவனால் மந்தையிலிருந்து வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்படும் ஆடுகளும் கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை; ஏனெனில், அவைகளே வருங்கால தலைவர்கள்.
தவறான தலைமைத்துவத்திற்குக் கீழ்ப்படிந்து, கீழ் பணிந்து வாழுவதைக் காட்டிலும், தப்பிச் சென்றுவிடுவது சிறந்ததுதானே. வீழும் தலைவர்களிடத்தில் வாழத் தொடங்கும் குணங்களே (கனிகளே) அவர்களை காட்டிக்கொடுக்கும். எல்லாவற்றிற்கும் தலையாட்டும் பொம்மையல்ல ஆடுகள், தளைக்குப் பதிலாக மேய்ப்பன் களையினைத் தரும்போது, சத்தியம் அல்லவென்று தெரியும்போது சத்தமிடத் தெரியவேண்டும். நகைகளை அணியக்கூடாது என்பது தனிப்பட்ட நபர்களுடைய தீர்மானமாயிருக்கலாம், ஆனால், அதனையே வேத போதனையாக்குவது தவறானதல்லவா! மற்றவர்களை நகை அணியக்கூடாது என்று சொல்லுவதும், நகைகள் அணிந்தால் பரலோகம் செல்ல முடியாது என வாதிடுவதும், நகைகள் விக்கிரகம் என பேசுவதும் வேதத்திற்குப் புறம்பான ஒன்று. அத்தனை உலோகத்தையும் மொத்தமாய் படைத்தவர் நம் பரலோக தேவனே. எப்படி உபயோகிக்கவேண்டும், எதில் உபயோகிக்கவேண்டும், எவ்வளவு உபயோகிக்கவேண்டும் என நாம் அறிந்திருந்தால் அது போதுமானது. தங்கத்தை விக்கிரகம் என வாதிடும் நபர்கள் பரலோகத்திற்கு வந்தால் தங்கத் தரையிலேதான் கால் பதிக்கவேண்டியிருக்கும். தங்கம் இல்லாத இடம் நரகமே....? கவனமாயிருந்தால் நாம் கண்ணியில் சிக்கிக்கொள்ளமாட்டோம். மனிதனை அல்ல தேவனையும் அவர் தந்த ஒரேபேரான குமாரனையும், வேத வசனங்களையும் பின்பற்றவேண்டியவர்கள் நாம் பிதற்றி பேதலித்துப் போய்விடக்கூடாது. பின்மாரிக்குக் காரணமாயிருக்கவேண்டிய நாம் பின்வாங்கிப் போய்விடக்கூடாது.
ஒரு சகோதரியுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு நல்ல ஆவிக்குரிய சபையைச் சேர்ந்த சகோதரி; என்றபோதிலும், வேதத்தின் அடிப்படையில் சில காரியங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நான் வசனத்தின் அடிப்படையில் பல ஆதாரங்களை அள்ளி வீசியபோதிலும், அந்த சகோதரியினால் அவைகளை ஒத்துக்கொள்ள இயலவில்லை. நான் வேதத்தை விட்டு வெளியே சென்று நீதி பேச விரும்பாமல், எங்களது உரையாடலை முடித்துக்கொள்ள கருதிய நேரத்தில், அந்த சகோதரியினை நோக்கி: ஏன் உங்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை? என்று கேட்டேன். அதற்கு அந்த சகோதரி, தன்னுடைய போதகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சற்று நேரம் அவர்களுடைய போதகருடன் பேசிவிட்டு, 'எங்க பாஸ்டர் இப்படித்தான் சொல்லிக்கொடுத்தார்' என்று சொன்னார். நான் அவர்களிடம்: வேதத்தில் எழுதியிருப்பதைத்தான் போதகர் போதிக்கவேண்டும், போதகர் போதிப்பதையெல்லாம் வேதத்தில் எழுத முடியாது என்று சொல்லி உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன். தேவனைக் காட்டிலும், வேதத்தைக் காட்டிலும் போதகர்கள் பெரியவர்களலல். வசனத்தின் வாளால் அவர்களையும் வெட்டும் அதிகாரம் நமக்கு உண்டு.
1992ம் ஆண்டு மூத்த சகோதரர் ஒருவர் ஜெபக்குழு நடத்திக்கொண்டிருந்தபோது, அந்த ஜெபக்குழுவிற்கு தற்செயலாய் சென்ற நான் சந்திக்கப்பட்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றேன். பின்னர் வேலையின் நிமித்தம் வெளி ஊரில் தங்கும் சூழல் உண்டாயிற்று. பல வருடங்களுக்குப் பின்னர் ஒருமுறை எனது சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, என்னை அந்த சகோதரர் சந்தித்தார்; அப்போது அவர் என்னை நோக்கி : 'சினிமா பாடல்களில் சிறந்தது பழைய பாடல்களா அல்லது புதிய பாடல்களா' என்ற தலைப்பின் கீழ் பட்டிமன்றம் ஒன்று நடக்கிறது மாலையில் நீ வா என்று கூப்பிட்டார். நான் அதிர்ந்துபோனேன்.
நமக்குள் தரிசனத்தை விதைத்தவர்களின் உள்ளத்திலிருந்து, வசனத்திற்கு ஒத்த விதைகளை சத்துரு களவாடி அவர்களை திசை திருப்பும்போது, அதனைக் கண்டு நமது உள்ளம் வதைபடும், வேதனைப்படும், என்றபோதிலும் தொடரும் பயணத்தில் நமக்கு சொந்தமாய் தேவன் உண்டு, சோர்ந்துபோகவேண்டிய அவசியமில்லை. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் (யோவான் 14:18) என்ற இயேசுவின் வார்த்தைகள் நம்மைத் தேற்றட்டும். உலகத்தின் பல்வேறு பகுதிகளில், ஊழியங்களில் சத்துரு தலைவர்களைத் தொட்டு, அவர்களைத் தன் பக்கம் இழுத்து, எத்தனையாய் வளர்த்த ஊழியமாயினும் மொத்தமாய் எருக்களமாக்கிப்போடுகிறான். ஆரம்பத்தில் தனி ஒரு மனிதன் ஊழியத்திற்கென தன்னை அர்ப்பணிக்கும்போதும், அதனைத் தடுக்க சத்துரு போராடுகிறான்;. அப்படியே, ஊழியம் வளர்ந்தபின்னும் மொத்தமாய் ஜனங்களை தலைவர்களைக் கொண்டே தவறான வழிகளில் திசை திருப்பும் தந்திரவாதி அவன். வீழ்ந்துபோன தலைனுக்குப் பின்னால் மாண்டுபோன ஜனங்கள் ஏராளம் ஏராளம். தவறான பல உபதேசத்தினால், பரலோகத்திற்கு ஜனங்களை செல்லவிடாமல், பரலோகத்திற்குச் செல்பவர்களைப் போன்ற எல்லா காட்சிகளையும் கொடுத்து, உலக மக்கள் மத்தியில் மாற்றுப் போர்வையினைப் போர்த்தி நரகத்திற்கு இழுத்துச் சென்றுவிடும் சத்துருவின் தந்திரத்தில் நாம் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாயிருப்போம்.
கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே (தலைவனாலே) திருப்பப்படும் (யாக்கோபு 3:4). மாலுமியே கப்பலை திசை திருப்பிவிட்டால். பயணிகள் மாண்டுபோவது நிச்சயம். நம்மை நடத்துகிறவர்கள் நமது ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களே (எபி 13:17); எனினும், அவர்கள் நடத்தும் விதத்தினை வேதத்தின் அடிப்படையில் ஒத்துப்பார்ப்பது தவறானதல்ல. தவறு என அறிந்த பின்னும், தலைவனுடைய தடத்தில் தொடர்ந்து செல்லக்கூடாது. அவர்கள் நம்மையும் திசை மாறச் செய்யும் முன்னர் நாம் திசை திரும்பிச் செல்வது உத்தமந்தானே!
எகிப்தை விட்டுப் பயந்து ஓடினான் மோசே; என்றபோதிலும் விடுவிக்கும் பணியிலிருந்து தேவன் அவனை விடுவிக்கவில்லை. மற்றவர்களை விடுவிக்கும் குணம் அவனிடத்திலிருந்து விடுபடவில்லை. மீதியான் தேசத்து ஆசாரியனின் குமாரத்திகள், தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத்; தண்ணீர் காட்டும்படிக்கு தண்ணீர் தொட்டியின் அருகே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பும்போது, மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்;. மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் (யாத்திராகமம் 2:16,17). எகிப்திலிருந்து வந்த மோசேயை இஸ்ரவேலன் என்று அறியாமல் அந்த குமாரத்திகள் எகிப்தியன் என்று சொன்னதுபோல, சத்தியத்தைச் சொல்வதால் நாமும் சத்துருக்களாக எண்ணப்படலாம், சகித்துக்கொள்வதுதான் சந்தோஷம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக