புதன், 31 மே, 2023

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 3


நம்முடைய ஓட்டமல்ல, 

தேவனுடைய ஓட்டம்

ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைத்ததும், நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமானதோர் சத்தியம், 'நாம் நமக்காக அல்ல, பரலோகத்தில் வீற்றிருக்கும் பிதாவுக்காகவே ஓடத் தொடங்கியிருக்கின்றோம்' என்பதே.  ஊழியத்தின் பாதையிலும், நமது ஓட்டத்தைத் தொடங்கும் முன் எழுதப்படவேண்டிய ஆரம்ப வரிகளும் இவைகளே. சிலுவையில் இயேசு  கிறிஸ்து செய்து முடித்த பிதாவின் சித்தத்திற்குள் பொதிந்திருக்கும் இந்த இரகசியத்தை எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய சிந்தையிலிருந்து நாம் சிதறச் செய்துவிடக்கூடாது. எத்தனையோ வியாதியஸ்தகளை குணமாக்கியபோதிலும், திரளான ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்திருந்தபோதிலும், பிதாவின் வார்த்தைகளை தன்னைத் தேடிவரும் ஜனங்களுக்கு உபதேசித்திருந்தபோதிலும்,  அநேகரை போஷித்திருந்தபோதிலும், பலருடைய வாழ்க்கையில் காணப்பட்ட குறைவுகளை நிறைவாக்கியிருந்தபோதிலும், மக்களாலேயே மதிக்கப்படாமலிருந்த மனிதர்களை கரங்களால் தொட்டு சுகமாக்கியிருந்தபோதிலும், பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த ஜனங்களை கட்டுகளிலிருந்து விடுதலையாக்கினபோதிலும், எந்த இடத்திலும் அவர் தன்னை தேவனுக்கு சமமாக உயர்த்திக்கொள்ளாமல், மேன்மைப்படுத்திப் பேசாமல், சிலுவையில் அறையப்படும் வரைக்கும் தனது சரீரத்தை ஒப்புக்கொடுத்தாரே. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி 2:6-8) என்றுதானே இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம். ஆம், நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்தார் என்ற செய்தி ஒருபுறம் நமது காதுகளில் ஒலித்தாலும், 'தன்னுடைய சரீரத்தையும் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார் என்ற செய்தியினாலேயே அது பூரணமாக நிறைவேறியது என்பதே சத்தியம். 

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா 53:5) என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயாவினால் உரைக்கப்பட்ட வார்த்தை சிலுவையில் நிறைவேறினது உண்மையே. மேலும், நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேது 2:24) என்று பேதுரு பெயர்த்தெழுதும் சத்தியமும் உறுதியானதே. என்றபோதிலும், 'சிலுவையில் இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் சுமந்து தீர்க்கப்பட்டபோது, செய்து முடிக்கப்பட்ட மற்றொரு காரியத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது.' அது என்ன? நம்முடைய பாவங்கள் மாத்திரமல்ல, அவைகளைச் சுமந்த அவரும் அடிக்கப்பட்டார் என்பதே. அதாவது, நம்முடைய பாவங்கள் மாத்திரமல்ல, நம்முடைய சரீரமும்  அதாவது பாவத்தை பிறப்பிக்கத் தூண்டும் மாம்சமும் அவரோடுகூட சிலுவையில் அறையப்படவேண்டும் என்பதே.  

இதனையே, 'நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்' (ரோமர் 6:6) என்று ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் நாம் வாசிக்கின்றோம். அத்துடன், 'கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்' (கலா 2:20) என்று பவுலும் இந்தக் காரியத்தையே உறுதிப்படுத்துகின்றார். என்றபோதிலும், அநேக நேரங்களில் இந்த சத்தியத்தை நாம் மறந்துவிடுகின்றோம், ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றோம், உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றோம். பாவங்களை மட்டுமே சிலுவையில் தொங்கும் இயேசுவின் மீது வைத்துவிட்டு, நாமோ சிலுவையில் அறையப்பட்டுவிடாதபடி பத்திரமாக சிலுவையை விட்டுக் கடந்துசெல்லப் பிரயாசப்படுகின்றோம். இதுவரை நாம் செய்த அத்தனை பாவங்களும் இயேசு கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டாலும், நம்முடைய மாம்சம் அதற்கு மறுவழி கொடுக்குமென்றால், அத்தனை பாவங்களும் நம்முடைய சரீரத்தில் மறுபிறப்பு அடைந்துவிடுமே. தோட்டத்தை சுத்திகரிப்பது மாத்திரமல்ல, மீண்டும் களைகள்  முறைத்துவிடாதபடியும், சத்துருவினால் விதைக்கப்பட்டுவிடாதபடியும், மாம்சத்தில் மறுபடியும் பிறந்துவிடாதபடியும் சுற்றிலும் வேலியடைத்துக் காக்கவேண்டியது கட்டாயமல்லவா. 

நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபே. 2:2-5) என்றே நமது முந்தைய வாழ்க்கையின் நிலையினைக் குறித்து பவுல் எழுதுகின்றார். இப்படிப்பட்ட நிலையில் காணப்பட்ட நம்முடைய வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்ட பரத்திற்கு விரோதமான பாவங்களை மாத்திரம் சிலுவையில் வைத்துவிட்டு, நம்மையும் சேர்ந்து அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுக்காததினாலேயே, 'அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்' (லூக் 11:24-26) என்ற நிலை 'இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகின்ற அநேகருடைய வாழ்க்கையிலும் காணப்படுகின்றது'.

இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள், மனந்திரும்பியவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள், ஆலயத்திற்குச் செல்பவர்கள், ஊழியம் செய்பவர்கள் என்று உரக்கச் சொல்லிக்கொண்டாலும், சிலுவையில் அறையப்படாத அநேகருடைய மாம்சமோ மண்ணோடுதான் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கின்றது. வாக்குவாதங்கள், பெருமைகள், பொறாமைகள், பகைகள், காமவிகாரங்கள் போன்ற அநேக மாம்சீகத் தாறுமாறுகளை அவர்களுடைய மாம்சங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொடுதானிருக்கின்றன. 'என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்' (2சாமு 1:9) என்று சவுல் சொன்னதைப் போல, இவர்களது மாம்சம் மரிக்காதது இன்னும் பலருக்கு வேதனையாகவே இருக்கின்றது. 

மேலும், 'எனது பாவத்திற்குக் காரணம் சாத்தான் மாத்திமே' என்ற ஒருபுற அறிவினால் மாத்திரமே தங்கள் சிந்தையை நிறைத்திருக்கும் மனிதர்கள், தங்களுடைய மாம்சம் விரிக்கும் வலைகளில் சிக்கிக்கொள்வது நிச்சயம். தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் தங்களுடைய சொந்த மாம்சமே என்பதையும் அறிந்துகொள்ளாமல், உணர்ந்துகொள்ளாமல், வீழ்ச்சிக்குப் பின்னும் சாத்தானையே குற்றஞ் சுமத்தும் நிலைக்குள்ளாகவே இவர்கள் காணப்படுவார்கள். ஏனெனில், இவர்கள் சிலுவையில் அறையப்படாத மாம்சத்தை சுமந்து திரிபவர்கள். 

இவர்கள், தங்களுடைய செயல்கள் அத்தனையையும் 'தங்களுடைய ஓட்டமாகவே கருதுபவர்கள், 'தேவனுடைய ஓட்டம்' என்ற சிந்தையிலிருந்து தூரமாக வாழ்பவர்கள். 'என்னுடைய ஊழியம்' 'என்னுடைய சொத்து' 'என்னுடைய பிரசங்கம்' 'என்னுடைய பாடல்' 'என்னுடைய எழுத்து' என்று, தங்களிடத்திலிருந்து வெளிப்படும் அத்தனையையும் என்னுடையது, என்னுடையது, என்னுடையது என்று  சொந்தம் பாராட்டுபவர்கள். தாங்கள் எழுதும் பாடல்களுக்கும், பாடும் பாடல்களுக்கும்கூட 'காப்புரிமை' வைத்துக்கொண்டு, அடுத்தவரை 'காப்பி' செய்ய விடாதவர்கள். இவர்கள் சுவிசேஷத்தின் பெலனை தங்கள் மாம்சத்தில் அனுபவிக்கத் துடிப்பவர்கள். இத்தகைய மாம்சீக சிந்தையிலிருந்து கர்த்தர் நம்மை விலக்கிக் காப்பாராக. 

என்னுடைய எழுத்து ஊழியத்தினைத் தொடங்கும்போது, நான் செய்த அர்ப்பணமும் இதுவே. எனவே, சிநேகிதன் (www.sinegithan.in) இணையதளத்தில் வெளியிடப்படும் வேததியானச் செய்திகளையோ அல்லது வேதத்திற்கடுத்த எந்த ஒரு கட்டுரைகளையோ என்னுடையது என்று எண்ணாமல், 'ஆவியானவருடையது' என்று எண்ணி உரிமையுடன் எடுத்து அவைகளை அப்படியே தாங்கள் பயன்படுத்திக்கொள்ள அனைவருக்கும் அனுமதி அளித்திருக்கின்றேன். அவைகளை பத்திரிக்கைகளில் பிரசுரிக்கவோ அல்லது புத்தகமாக அச்சிட்டுக்கொள்ளவோ என்னிடம் அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை, முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. 'நன்றி' என்ற வார்த்தையுடன் எனது பெயரைக் குறிப்பிடவேண்டும் என்ற கட்டாயமுமில்லை,  அவருக்கே கனமும் மகிமையும் உண்டாகட்டும்.

'குழாயில் வரும் நூற்றுக்கணக்கான குடம் தண்ணீருக்கு, குழாய் சொந்தம் கொண்டாடுவது சரியல்லவே' தொட்டியில் இருக்கும் தண்ணீர் எல்லாருக்கும் சொந்தமானதே, என்னுடைய குழாயில் வந்ததற்காக அதை என்னுடையது என்று சொல்லிவிடமுடியாது.  'கர்த்தருடைய வீட்டில் நாம் 'பந்தி பரிமாறுபவர்களே'. 'என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா' (மத்தேயு 20 :15) என்ற வசனம் சொல்வது அதுவே. 'Copyright' என்ற வேலிக்குள் எதுவும் அடைக்கப்படவில்லை. You have a right to copy. சில ஊழியர்கள் வெளியிடும் பாடல் CD மற்றும் DVD களில், 'ஓரிஜினல் கேசட்டுகளையே வாங்கி உபயோகியுங்கள், போலிகளை வாங்கிவிடாதீர்கள்' என்ற அறிவிப்பு சொல்லப்படுவது, அவர்கள் வியாபாரிகள் என்பதையே வெளிக்காட்டுகிறது. காப்பி செய்த கேசட்டிலும் அதே பாட்டுதானே படிக்கும், அதே செய்திதானே கேட்கும், அப்படியென்றால், ஓரிஜினலை வாங்குங்கள் என்று வற்புறுத்த, 'ஆவியானவர் என்ன DVD யிலா இருக்கிறார், இல்லவே.

'என்னுடைய பாடலை நீ பாடக்கூடாது' என்ற சச்சரவும், 'திருட்டு ஏஊனு' என்ற எச்சரிப்பும் சினிமா உலகத்தில் நடைபெறுவது. இதனை சத்துரு சத்தியத்தை அறிவிப்போரிடம் நுழைப்பது நாம் அறிந்துகொள்ளவேண்டியது. சுவிசேஷம் பரவாதபடி நம்மைக் கொண்டே சத்துரு வேலி அமைப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

நாங்களும் உங்களைப்போலப்பாடுள்ள மனுஷர்தானே,  (அப்போஸ்தலர் 14 :15).  பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே (1 கொரிந்தியர் 3 :5)  என்ற சிந்தை உயர்ந்திருக்குமாயின், உயர்ந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் தகர்ந்துபோம். பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே ழூபணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன் (லூக்கா 22:27)  என்கிறாரே இயேசு. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் போதித்துவிட்டு, இதில் மாத்திரம் மறைமுகமாக உதாரத்துவமாகக் கொடுக்கவேண்டிய காணிக்கையை, கட்டாய காணிக்கையாக, ஏலியின் குமாரர்கள் எடுத்ததைப்போல இலாபமாக நாம் நுழைத்து விடக்கூடாது. 'தானியத்தைக் கட்டிவைக்கிறவனை' ஜனங்கள் சபிப்பார்கள்: விற்கிறவனுடைய (கொடுக்கிறவனுடைய) தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும் நீதிமொழிகள் 11 :26 என்பதுதான் நீதியின் மொழி.

'அப்படியென்றால் விற்கலாமோ?' வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள் (மத்தேயு 10:8) என்ற வசனம், கர்த்தரிடத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்டவைகளை விற்கக்கூடாதபடி நம்மைத் தடுக்கின்றதே. செலவுகள் வாங்கப்படலாம், ஆனால் செய்திகள் விற்கப்படக்கூடாது.பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் (மத்தேயு 10 :20). அவர் பேசுகிற ஆலயமாகிய நம்முடைய வீட்டை வியாபார வீடாக்கி விடாதபடி கவனமாயிருப்போம்.போரிடும் உரியாவின் கையில்  அவன் உயிர் போகும் கடிதத்தை தாவீது கொடுத்து ஒரு வீரனை இழந்ததுபோல, ஆண்டவரது படைப்புகளின் மேல் நமது எழுத்துக்கள் தடைகளாகி, வீட்டிற்குள் முடக்கிவிடாதபடி காத்துக்கொள்ளுவோம்.

அவ்வாறே, அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது 5:7) என்ற ஆலோசனையினையும், வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத். 11:28-29) என்ற ஆலோசனையினையும் ஏற்றுக்கொள்ளாமல், கஷ்டங்களையும் மற்றும் கவலைகளையும் தாங்களே தங்கள் மாம்சத்தில் சுமந்துகொண்டிருக்கும் மனிதர்களும் இந்த உலகத்தில் அநேகர் உண்டு. நம்முடைய வாழ்க்கையின் ஓட்டம் அவருடையது என்ற அர்ப்பணிப்பு நம்மிலே உண்டாயிருக்குமென்றால், அச்சம் என்ற வார்த்தைக்கு நிச்சயம் இடமிறாது. 


புதன், 3 மே, 2023

மனிதனானாலும், மண்ணே! - 2

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 2




 வேகமாக ஓடும் வாழ்க்கை


தலைவர்களாகிய நாம் தேவன் நம்மை பயன்படுத்தும் வழிகளில் சந்தோஷித்திருந்தாலும், ஆனந்தத்தினால் அனுதினமும் நிறைந்திருந்தாலும்,  அழைப்பின் மையத்திலேயே இருந்து நாம் பணி செய்துகொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் ஆர்ப்பரிப்பின் சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேயிருந்தாலும், நம்முடைய வாழ்க்கையிலிருந்து நாம் விடைபெறும் நாள் இப்பூமியில் நெருங்கும்போது, தேவனால் நமக்குக் குறிக்கப்பட்ட காலம் இத்தரையில் நிறைவடையும்போது, அவர் தெரிந்தெடுக்கும் மனிதர்களிடத்தில் தயாள மனதுடன் அதனை அளித்துவிட நாம் எப்பொழுதும் தயாராகவும் இருக்கவேண்டும் என்பதே வேதம் தரும் போதனை. 

ஆதிப் பிதாக்களாகிய ஆதாமும், ஏவாளும் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமற்போனபோது, இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார் (ஆதி 3:22,23); மனிதனுடைய சரீர ஓட்டத்தின் முடிவு அன்றே மண்ணை நோக்கித் திரும்பிவிட்டது.  ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது (பிர. 8:8) என்றே ஆண்டவருடைய ஞானத்தைப் பெற்ற சாலொமோனும் எழுதுகின்றான். என்றபோதிலும், மனிதனுக்கு இதனை ஏற்றுக்கொள்வது சற்று கடினமானதாகவே இருக்கின்றது. இன்றளவிலும் மரணம் மனிதனுக்கு ஓர் போர்க்களமாகவே தோன்றுகின்றது. எப்படியாகிலும் அதிலே வெற்றி பெற்று மேலும் சில நாட்களை இத்தரையில் வாழ்ந்துவிட முடியாதா என்ற எதிர்பார்ப்போடு எல்லா விதங்களிலும் போராடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். என்றாலும், அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி 9:27) என்பதுதானே தேவனின் திட்டம்; இந்த சட்டத்திற்கு நமது சரீரம் நிச்சயம் கீழ்ப்படிந்தேயாகவேண்டும்.

 'எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்' (சங். 90:10) என்றே நமது வாழ்நாட்களைக் குறித்து சங்கீதக்காரன் கூறுகின்றான். என்றபோதிலும், வருத்தமாயிருந்தாலும், சஞ்சலமாயிருந்தாலும் வாழ்க்கையை விட்டுவிட மனிதனுக்கோ விருப்பமில்லையே. மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது (சங். 103:15,16) என்பதே நம்மைக் குறித்து வேதம் கூறும் நிதர்சனமான உண்மை.  

யோபுவும், தனது துக்கமான நிலைமையிலும் 'என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்' (யோபு 7:6) என்றே வாழ்க்கையைக் குறித்துக் கூறுகின்றான். அதுமாத்திரமல்ல, என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ? (யோபு 6:12) என்றும் யோபு தன் சரீரத்தின் நிலையினைக் குறித்து எடுத்துச் சொல்லுவது, இன்றைய நாட்களில் நம்முடைய வாழ்க்கைக்கும் பொருத்தமானதுதானே. அவ்வாறே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும், 'என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்' (ஏசா. 38:12) என்றே தனது மரணத்தை நினைத்து தேவனை நோக்கிப் பேசுகின்றான். வாழ்க்கையின் முடிவில் வரும்போது, நம்முடைய உதடுகள் உச்சரிப்பது 'மரிக்கப்போகிறேனே' என்ற முறுமுறுப்பா? அல்லது 'எல்லாம் முடிந்தது' என்ற கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றி முடித்த ஆர்ப்பரிப்பா? ஓட்டத்தின் இடையிலேயே 'எடுத்துக்கொள்ளும்' என்று அல்ல, ஓட்டத்தின் முடிவில் அவர் அழைக்கும்போது 'இதோ இருக்கிறேன்' என்ற அர்ப்பணிப்பே நமது வாயிலிருந்து புறப்படட்டும். 


'ஆமணக்கு' போன்ற ஆயுள்


  ஆம், நம்முடைய வாழ்நாட்களின் காலம் மிகவும் குறுகியதே. மாம்சமாகிய நம்முடைய சரீரத்தை, 'அழிந்துபோகக்கூடிய பூமிக்குரிய கூடாரமாகிய வீடு' (2 கொரி. 5:1) என்றே வர்ணித்து எழுதுகின்றார் பவுல். யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தற்செயலாகக் கொடுக்கப்பட்ட ஆமணக்குச் செடி ஓங்கி வளர்ந்தபோது, அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். ஆனால், மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டபோது,  அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று. அத்துடன், சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான் (யோனா 4:6-8). 

ஆம் பிரியமானமானவர்களே, இத்தகைய ஆமணக்குச் செடியைப் போன்றதே நமது மாம்சம். அழகிய மேனியுடன் பிறந்து, வளர்ந்து, தற்செயலாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நமது சரீரத்தின் மேல் அதிக நேரங்களில் நாம் அக்கறை கொண்டு அதிக கவனத்தையும் கூடவே அதற்கென்றே செலுத்திவிடுகின்றோம். இறைவன் கொடுத்திருக்கும் அழகினை மெருகூட்டும் ஆசையில், இன்னும் அநேக செயற்கையானவைகளை இயற்கையான சரீரத்தின் மேல் அள்ளிப் பூசிக் கொள்ளுகின்றோம். தலை முடியிலிருந்து, கால் பாதங்கள் வரை நாம் பிறரது பார்வைக்கு அழகாயிருக்கவேண்டும் என்றே கண்ணாடியின் முன் நின்றுகொண்டிருக்கின்றோம். சத்தியத்தின் சட்டதிட்டங்களையும்கூட சில நேரங்களில் உடலுக்காக உடைத்துவிடுகின்றோம். என்றபோதிலும், காலம் செல்லச் செல்ல, முதிர் வயதினைத் தொட்டு வாழும்போது, சரீரத்தில் உண்டாகும் மாற்றங்களால் மனம் நொந்துகொள்ளுகின்றோம். வாடிப்போன ஆமணக்குச் செடிக்காக யோனா வருத்தப்பட்டதுபோல, அழிவை நெருங்கும் மாம்சமான நமது சரீரத்திற்காக நாம் வருத்தப்படத் தொடங்கிவிடுகின்றோம். இத்தகைய வருத்தம் நமது மனதை அடைக்க அடைக்க, வரும் நாட்களையும், நம்முடைய ஓட்டத்தைத் தொடரவிருக்கும் சக மனிதர்களையும் நம்முடைய மனம் மறந்தேபோய்விடுகின்றது. தலைவர்களுடைய வாழ்க்கையில் இத்தகைய நிலை ஊழியத்தின் எதிர்காலத்தை பேராபத்திற்குள் தள்ளிவிடும். இத்தகைய நிலைக்குள் நாம் நம்மை ஒருபோதும் விழுந்துவிடக்கூடாது. 

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஜீவனை விட்ட (லூக். 23:46) இயேசு கிறிஸ்துவைப் போலவும், நகரத்திற்குப் புறம்பே தள்ளி, கல்லெறிந்தபோதிலும், 'கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை  ஏற்றுக்கொள்ளும் என்று தொழுதுகொண்டவனாக' (அப். 7:58,59) தன் ஜீவனை விட்ட ஸ்தேவானைப் போலவும், ஜனங்களால் நாம் துன்பப்படுத்தப்பட்டாலும், நெருக்கப்பட்டாலும், மனதாலோ சமாதானத்தோடு நம்முடைய  வாழ்க்கையின் ஓட்டம் வெற்றியாக நிறைவுபெறுவது நிச்சயம். எனவே, நம்முடைய ஓட்டத்தின் முடிவில், நம்முடைய ஓட்டத்தைத் தொடரும் மற்றொருவரை தேவன் அடையாளம் காண்பிக்கும்போது, நம்மிடத்திலிருப்பவைகளைக் காட்டிலும் இரட்டத்தனையாய் வரவிருக்கும் சந்ததிக்கு வழங்க தேவன் ஆயத்தமாயிருக்கும்போது, அவர்களுக்கு வழிவிடவும் அத்துடன், தேவனுக்கும் அத்தகைய மனிதர்களுக்கும் இடையிலே நாம் ஒருபோதும் தடைக்கற்களாக நின்றுவிடாதபடிக்கு தலைவர்களாகிய நாம் கவனமாயிருக்கவேண்டியதும் அவசியம். 


திங்கள், 24 ஏப்ரல், 2023

வெற்றியா? வெற்றிடமா? - 1

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 1


வெற்றியா? வெற்றிடமா?



தன்னை மட்டுமே முக்கியப்படுத்தி, சுற்றியிருப்பதெல்லாவற்றையும் மக்கிப்போகச் செய்து, வாழ்க்கையின் விளிம்பைத் தொடும்போதுகூட தன்னிடத்திலிருப்பதை எவரிடத்திலும் எடுத்துக்கொடுக்கும் மனதற்றவர்களாகவே மரித்துப்போகும் மனிதர்கள் இவ்வுலகத்தில் ஏராளம் ஏராளம். நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா? (மத் 20:15) என்ற வசனத்தின்படி, தயாளமாய், தாராளமாய் மனமுவந்து தேவன் தன்னிடத்தில் அள்ளிக் கொடுத்தவைகளை, மற்றவர்களிடத்தில் ஒப்புவிக்கும்போது, அதே தயாள குணத்தோடும், தாராளமான மனதோடும் ஒப்புவிக்க மனதற்றவர்களாகவும், கிள்ளிகூடக் கொடுக்கும் குணமற்றவர்களாகவும் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றைய நாட்களில் மிகுதியே.

என்னைப் போன்றதோர் மனிதன் இனி தேவனால் தெரிந்துகொள்ளப்படப்போவதில்லை, என்னைப்போல இன்னொரு மனிதனை தேவன் ஆயத்தப்படுத்தப்போவதில்லை, எனக்கே எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, என்னைப் போல தாலந்துகள் நிறைந்த தலைவன் உருவாவது கடினமே, என்னைப் போன்ற சிலரது சிரசுகளில் மாத்திரமே இத்தகைய கர்த்தரின் அபிஷேகம் தங்கியிருக்கின்றது என்று பாராட்டுப் பத்திரங்கள் எழுதும் மனிதர்கள் அநேகர். மரணிக்கும்போது, தங்களிடத்திலிருக்கும் தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த பொருட்கள், சொத்துக்கள் மற்றும் ஆடையாபரணங்களை தன்னுடைய குடும்பத்தாரிடத்தில் விட்டுச் செல்வதுபோல, தேவன் தங்களிடத்தில் கொடுத்திருக்கும் விலைமதிப்பற்றவைகளாகிய பல ஆவிக்குரிய காரியங்கள், தாங்கள் முடிவுபெறும் இடத்தில் தங்களுடையதைத் தொடரும்படியாக அடுத்தவருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்ற விருப்பத்துடனான விண்ணப்பத்தை பரத்திற்கு நேராக பல நேரங்களில் நாம் செய்யத் தவறிவிடுகின்றோம். புதைக்கப்படுவதற்கேற்ற பூமிக்குரியவைகளை பொதிந்து பத்திரமாகக் கொடுக்கும் அதே வேளையில், அக்கினியாய் அகத்திற்குள் இருக்கும் ஆண்டவர் அளித்த அன்பளிப்புகள் பலவற்றை அடுத்தவருக்கு அறிவியாமல் மண்ணுக்குள்ளேயே நம்மோடுகூட புதைத்துவிடுகின்றோம்; முடிவில்லாமல் தொடரவேண்டியவைகளை அடுத்தவருக்கு முடிச்சு போட்டுக் கொடுக்க மனமின்றி, நம்மோடு அவைகளுக்கு முடிவுண்டாக்கிவிடுகின்றோம். தலைமுறைகள் அவர்களாகவே தேவனிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளட்டும் என்றும் சில நேரங்களில் நம்முடைய நிலையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளுகின்றோம்.

எனினும், வாழ்க்கை ஓர் தொடரோட்டம் என்பதைப் புரிந்துகொண்டவர்களாக, தான் நிற்கும் இடத்திலேயே மற்றவர்கள் கற்க வழியுண்டாக்கி, சரித்திரமாக தான் சரியும்முன், ஏணியாக நின்று பலரை ஏற்றிவிட்டு அழகுபார்ப்பதே ஆண்டவர் விரும்பும் உயர்ந்த நிலை என்பதை உணர்ந்துகொள்ளும் மனிதர்களும் இந்த உலகில் உண்டு. இந்நிலைக்கு தங்களை அர்ப்பணித்தோரும், ஆயத்தப்படுத்திக்கொண்டோரும் சிலரே. தலைவர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நாம், தலைமுறைகள் ஓடுவதற்கு இடமளித்து சில நேரங்களில் தள்ளி நிற்கவேண்டியதும் அவசியமானதே. எப்பொழுதுமே மின்சார விளக்கு எரிந்துகொண்டிருக்கும் அறையில், சிறியதோர் மெழுகுவர்த்திகூட கொழுத்தப்படுவதற்கு இடமிருப்பதில்லையே! சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் வெளிச்சம் மிகுந்த நேரத்தில், கைளால் டார்ச் லைட்டினை எவரும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லையே. ஓர் சிற்றறையினுள் மின்சார விளக்கும், மெழுகுவர்த்தியும் எரிந்துகொண்டிருந்தால், உள்ளே நுழையும் மனிதர், மெழுகுவர்த்தியையே அணைத்துவிடுவது உலக வழக்கம்; என்றாலும், ஆவிக்குரிய வழக்கில் இது அவ்வப்போது முரண்படாத பட்சத்தில், முன்னோடி தலைவராயிருந்தாலும் முத்துக்களாகிய தலைமுறையினை உருவாக்குவது இயலாதது. 

தலைமுறைகள் உருவாகவேண்டும் என்று விரும்புகின்ற மனிதன் சில நேரங்களில் தன்னை மறைத்துக்கொள்ளுவான், காரியங்களை பின்தொடருவோர் கைகளில் விட்டுவிட்டு சற்றே ஒதுங்கி நிற்பான். தேவன் விரும்பும் இந்நிலைக்கு நம்மை ஒப்புக்கொடுக்காவிடில், நாம் வெற்றியோடு முடிக்கும் இடம் வெற்றிடமாகிவிடும். தலைவர்கள் பிரியும்போது, பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாளுக்கு ஒன்றுமில்லாமல் பட்டினி கிடக்கின்றதைப் போன்ற நிலை உருவாகிவிடும். தலைவர்கள் தங்களது ஓட்டத்தை நிறைவுசெய்யும்போது, அவர்கள் பயணித்த பாதையும் பின்தொடருவோரின் கண்களுக்குப் பூட்டப்பட்டதாகவே காட்சியளிக்கும். 

விளையாட்டில் வீரர்கள் வெற்றிபெறும்போது, வீரர்களுக்கு அளிக்கப்படும் வெற்றிக் கோப்பையினை அவர்கள் ஆனந்தக் களிப்புடன் மேடையில் வாங்கிக்கொள்ளுவார்கள். மேடையின் கீழிருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி வீரர்களுக்குப் பாராட்டுகளும்  தெரிவிப்பார்கள்; ஆனால், மேடையில் பெற்ற அந்த வெற்றிக் கோப்பையினை கொண்டுவந்து, அதனைத் திறந்து பார்த்தால் உள்ளே வெற்றிடமாகத்தான் இருக்கும், காலியாகவே காணப்படும். ஆவிக்குரிய உலகிலும் அநேகருடைய வாழ்க்கையில் இத்தகைய வெற்றியே காணப்படுகின்றது; மற்றவர்களுக்கு முன் பாராட்டும்படியான வெற்றியினை அவர்கள் பெற்றிருந்தாலும், விளையாட்டின் முடிவில் வெற்றிக் கோப்பையைத் திறந்து பார்த்தால் அது காலியாகவே காணப்படுவது கவலைக்குரியது.

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசே 22:30) என்று தேசத்தின் அழிவைத் தடுக்க கர்த்தர் ஆசிப்பதுபோல, நம்முடைய வாழ்க்கையின் முடிவில், நாம் எடுத்துக்கொள்ளப்படும்போது அல்லது மரணமடையும்போது, அந்த இடத்தை யாரைக் கொண்டு அடைப்பேன் என்ற தேடத்தக்கதான நிலையினை தலைவர்களாகிய நாம் ஏற்படுத்திவிடக்கூடாது. 

முன்னுரை

 முன்னுரை


பரிசுத்தத்திற்கென்றும், பரலோகத்திற்கென்றும் அழைத்து நம்மை முன்குறித்திருக்கின்ற தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்;த்துக்கள். வாலிபர்கள் மத்தியில் வாலிபராய் நாம் ஆற்றும் பணி வளரும் தலைமுறையினரைத் தலைவர்களாக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், தேவனின் நாமத்தில், தேவனைச் சுமந்தவர்களாய், தேசத்திற்குள் புகுந்து சத்துருவின் கரத்திலுள்ள நம் சகோதரரை மீட்கும் பணியில், தகுதியுள்ள தலைவர்களாக நாம் எப்படி செயலாற்றவேண்டும் என்பதை தொடர்ச்சியாக எழுத விரும்புகின்றேன். 

'கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை' (1தீமோ. 3:1) என்பதே தலைமைத்துவத்தைக் குறித்து பவுல் கொடுக்கும் முதல் அறிக்கை.  என்றபோதிலும், அதைத் தொடர்ந்து, கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும் என்றும், அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும் என்றும், ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? என்றும், அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும் (1தீமோ 3:2-7) என்றும் கண்காணிகளிடத்தில் காணப்படவேண்டிய குணங்களையும், தகுதியையும், தரத்தையும் பட்டியலிட்டு வரிசைப்படுத்துகின்றார் பவுல். இந்த வார்த்தைகள் தொடுக்கும் வழக்கில் ஒரு மனிதனின் வாழ்க்கை சிக்கிக்கொள்ளுமென்றால், 'தலைவன்' என்ற ஸ்தானத்தில் அவன் காணப்பட்டாலும், 'தரமற்றவனாகவே' தடுமாறுவான் என்பது நிச்சயம்.  

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, 'அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான்', ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது (யோவான் 10:4) என்பதே மேய்ப்பர்களைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறும்  அறிமுகம். அவ்வாறே, அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, 'நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்' (பிலி. 3:17) என்று உடனிருக்கும் சகோதரர்களாகிய விசுவாசிகளுக்கு எழுதுவதோடு, தன்னுடைய ஊழியத்தைக் குறித்து, 'இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச்செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம் (2தெச 3:7-9) என்று எழுதுகின்றார். அதுமாத்திரமல்ல, 'உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,  நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு' (1தீமோ. 4:12) என்றும், 'நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து' (தீத்து 2:7) என்றும் இளம் ஊழியர்களாகிய தீமோத்தேயுவுக்கும் மற்றும் தீத்துவுக்கும் அவர் எழுதியுணர்த்தத் தவறவில்லையே. மாதிரியாயிருக்கவேண்டும் என்ற நிலையினை மறந்துபோனதினாலேயே, அநேகருடைய ஊழியங்கள் மரித்துப்போய்விட்டன. 

தலைமைத்துவம் என்பது தக்கவைக்கப்படவேண்டியது அல்ல மாறாக, பக்கங்களிலெங்கும் கிளைவிட்டுப் படரவேண்டியது. சுடர்களைப் போல பிரகாசித்துக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர், சுற்றியிருக்கும் திரிகளைக் குறித்துக் கவலைகொள்ளாததினாலேயே, விளக்காகிய அவர்களது வாழ்க்கை அணையும்போது, அவர்கள் வாழ்ந்த இடத்தில் வெளிச்சம் இல்லாமற்போகிறது; அத்துடன், வீட்டையும் இருட்டு எட்டிப்பார்க்கின்றது. தங்களைப் பற்றி மாத்திரமே மற்றவர்கள் புகழ்பாடிக்கொண்ருப்பது, தலைவனுக்கு ஆறுதல் அளிக்கும் தலையணை அல்ல; மாறாக,  தங்கள் தலைமை அணையும்போது, தாங்கள் எழுதிக்கொண்டிருந்த சரித்திரம் தடைபடாமல் தொடரவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாயிருக்கவேண்டுமே. பிறர் பயணிக்கும் வழிகளை அடைத்துக்கொண்டிருப்பவர்களாக அல்ல, பிறர் பயணிக்க வழிகளை ஆயத்தம்பண்ணுபவர்களாகவே தலைவர்கள் காணப்படவேண்டும். மின்சாரம் இருக்கும் சமயங்களில், கைவிளக்குகள் வீட்டின் மூலையிலேயே வைக்கப்பட்டிருக்கும்; ஆனால், கைவிளக்கும் ஒளிகொடுக்கவேண்டும் என்றால், மின்சாரம் சற்று ஓய்வெடுக்கத்தானே வேண்டும். இத்தகைய ஓய்வு, தலைமுறைகளைத் தலைவர்களாக்கும் தருணங்களை உருவாக்கும் என்பது நிச்சயம். 

தலைமைத் துவத்தில் இருக்கும் தலைவர்கள் தங்கள் தடங்களில் தவறுவார்களென்றால், அவர்களைத் தொடரும் ஒவ்வொருவரின் தடங்களுமே தடுமாறத் துவங்கும். தலைவன் ஒருவன் தனது சொல்லில் தவறினால், அவனைத் தொடரும் மக்கள் தங்கள் செயலில் தவறத் தொடங்குவார்கள். தலைவர்களின் தவறான மாதிரிகள், தேவ மக்களைக் கூட வேதத்தை விட்டு மாத்திரமல்ல, தேவனை விட்டே பிரித்துவிட வல்லது. தேவனை தொடரவேண்டிய பலர் இன்று தங்களுக்கென்று ஒரு தலைவரைத் தெரிந்துகொண்டு, அவர்களையே பின்பற்றத் தொடங்கிவிட்டனர்; எனினும், தலைவர்கள் தவறான மாதிரியுடையவர்களாயிருப்பார்களாயின் இச்செயல் தவறாகிவிடுமே! தலைவர்களாக விரும்பும் ஒவ்வொருவரும் தங்கள் தடங்களின் மேல் அதிக அக்கரை செலுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று.  மக்கள் தலைவனை உலத்தோடும், தங்களோடும் ஒப்பிட்டு பார்த்து, தங்களைக் காட்டிலும் உயர்ந்த எண்ணத்தோடு பார்க்கையில், தலைவன் தன்னை தேவனோடு தினமும் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறக்கூடாது. தலைவனுக்கு மாதிரி தலைவர்களல்ல, தேவனே. தேவனை தன்; வாழ்க்கையில் காட்ட இயலாத தலைவன் ஒவ்;வொருவனும் தனது தலைமைத்துவத்தில் தோற்றுப்போனவனே. தேவனாலும் மனிதர்களாலும் தலைவன் குற்றஞ் சாட்டப்படாதவனாயிருக்கவேண்டும். தனது வாழ்வில் வேதத்திற்கு விரோதமான கறைகளை வைத்துக்கொண்டே, அந்தக் குறைகளோடு கூட தேவனது பணியில் குறிப்பாக தலைமைத் துவத்தில் தலைவன் தொடருவானென்றால் அது நிச்சயம் ஆபத்தானதே.

மாதிரியே இல்லாத நாட்களில் நோவா தேவனது வார்த்தைகளைக் கொண்டு எவ்வவளவு அழகான ஓர் பேழையை வடிவமைத்தான். நோவா அதைச் சோதித்துக்கூட பார்க்கவில்லை, தேவன் அனுப்பிய மழைதான் நேரடியாக அப்பேழையைச் சோதித்தது; என்றாலும், அதில் பழுது ஏதுமில்லையே. தலைவர்களாக நாம் காணப்படுவோமாகில், இவ்வுலகத்தில் யாதொருவருடனும் நம்மை ஒப்புமைப்படுத்தி நாம் திருப்தியடைந்துவிடமுடியாது. காடானாலும், மேடானாலும், களிப்பானாலும், கஷ்டமானாலும், நிர்வாணமானாலும், நாசமானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிற தலைவர்களுக்கு வேறு வழியில்லை. நம்மைச் சோதிப்பது நியாயத்தீர்ப்பே! பிறரைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கில் தன் பரிசுத்தத்தைத் தவறவிடும் தலைவர்கள் இறுதிநாளில் தடுமாறுவர். பரிசுத்தத்தைப் பறிகொடுத்த தலைவர்களின்மேல் தேவன் பரிதாபப்படுவதில்லை. மலையில் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி மோசே எவ்வளவு நேர்த்தியாய் ஆசரிப்புக் கூடாரத்தை வடிவமைத்தான் (யாத் 25:9,26:40). மோசே அதனை வடிவமைத்துக்கொண்டிருக்கும்போது, தேவன் இடையில் குறுக்கிட்டு குறை ஏதும் சொல்லவில்லையே. இது, பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் திறமைகளை அல்ல அவர்கள் எத்தனை ஆழமாய் தேவன் சொல்லும் காரியங்களைப் புரிந்தவர்களாய், அறிந்தவர்களாய் செயலாற்றியிருக்கின்றார்கள் என்பதையே வெளிக்காட்டுகின்றது. நோவாவும், மோசேயும் தேவனிடத்தில், 'ஆண்டவரே கொஞ்சம் மறந்துவிட்டது, நீர் சொன்னது சரியாக ஞாபகமில்லை' என்று சொல்லவில்லையே. நோட்டுப் புத்தகங்கள், வரைபடங்கள் எல்லாம் இல்லாத காலத்திலும், காண்பிக்கப்பட்ட மாதிரியை தங்கள் இதயத்திலும், மனதிலும் வரைந்துவைத்து எத்தனை அழகாய் தேவனுக்காய் அத்தலைவர்கள் செயலாற்றியிருக்கின்றனர். 'நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்' (யோவான் 13:15) தலைமைத்துவத்தில், தடுமாறும் நேரத்தில் நமக்கு மாதிரி இயேசுவே. நாமும் மோசேயைப்போல செயலாற்றவேண்டும், மோசேக்கு ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி காண்பிக்கப்பட்டது, ஆனால், நமக்கோ பிரதான ஆசாரியனே (இயேசு) மாதிரியாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறாரே. இந்த மாதிரியை நாம் அறிந்தபின்னும், புரிந்தபின்னும் தவறான தலைமைத்துவத்தில் தொடருவோமென்றால் தண்டனைக்கு தப்புவது எப்படி? நாம் நமது தலைமைத்துவத்தில் கவனித்துப் பார்க்கவேண்டிய நபர் கிறிஸ்து இயேசுவே (எபிரேயர் 3:1). கிறிஸ்து இயேசுவை நாம் கவனித்துப் பார்த்தால், நமது செயல்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தால் தலைமைத்துவத்தின் உயர்ந்த ஸ்தானங்களில் நமது பாதங்கள் நிற்பது நிச்சயம். தாவீதும் தேவன் தந்த மாதிரியினை எவ்வளவு நேர்த்தியாய் பின்பற்றினான் (1நாளாகமம் 28:19). நம்மைத் தொடரும் தலைமுறையினருக்கு நாமே மாதிரி (2தெச3:9, 1தீமோ4:12, தீத்து2:7, 1பேதுரு 2:21).

ஒவ்வொரு தலைவனும் கிறிஸ்துவின் குணங்களை தனது வாழ்க்கையில் கொண்டவனாக வாழ்ந்தால் இவ்வுலகத்தின் தலைமைத்துவனம் மிகப்பெரிய வெற்றியைச் சந்திக்கும். தனியொரு மாதிரியை தனது வாழ்வில் புகுத்திக்கொண்டு மற்றவர்களை தன்னைப் பின்பற்ற அழைக்கும் தலைவனாயல்ல, தேவ மாதிரியை தனது வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தி அதற்கிசைந்து வாழ அனைவரையும் அழைக்கும் தலைவனாக ஒவ்வொருவரும் மாறவேண்டும். கிறிஸ்துவண்டை மக்களை நடத்தும் ஒவ்வொரு மனிதனும் தலைவனே. தனியொரு மனிதனை கிறிஸ்துவண்டை நடத்துமளவிற்று ஒரு மனிதன் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டால் அவன் தலைவனே. கிறிஸ்துவைக் காட்டி மாத்திரமல்ல, சுவிசேஷத்திற்கு இணையாக நம்மையும் வேதத்தோடு பொருத்தி காண்பிக்கவேண்டிய நிர்ப்பந்தமான காலகட்டத்திற்குள் இன்றய கிறிஸ்தவ உலகம் காணப்படுகின்றது. தேவ ராஜ்யத்தின் இப்பெரும் பணியினை சந்திக்க, அப்பணிக்கு நம்மை பணியாட்களாக்கிக்கொள்ள, சரியான தலைமைத்துவத்தின் குணங்கள் நமது வாழ்க்கையில் காணப்படவேண்டியது மிகவும் அவசியம். இத்தொடரை எழும்பிவரும் இளந் தலைவர்களைக் குற்றஞ் சாட்டுகிறதாயல்ல, தகுதியான, நேர்மையான தலைவர்களை உருவாக்கவேண்டும் என்ற ஆவலிலேயே எழுதுகின்றேன். தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை வேதத்தின் முன் வைத்து தங்களை ஆராய்ந்துகொள்ள ஓர் சிறிய வழிகாட்டியே இத்தொடர். தலைவர்களின் கரங்களில் ஆணியடிக்கப்பட்ட தடங்கள் காணப்படலாம், ஆனால் ஆணிகள் காணப்படக்கூடாது, அப்படி காணப்படுமாயின் அவைகள் அவர்களிடம் ஆசீர்வாதங்களை பெறும்படி வருகின்ற மக்களின் தலைகளில் பாய்ந்துவிடுமே. இத்தொடர் பல வாலிப தலைவர்களை உருவாக்க ஜெபிக்கின்றேன். என்னைத் தொடருங்கள் என்று தேவனைத் தொடரும் தலைவர்கள் எழும்பட்டும்.